தள்ளிப் போகிறது ஜன நாயகன்! தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு...
ஜன நாயகன் போஸ்டர்
ஜன நாயகன் போஸ்டர்படம்: X
Updated on
1 min read

ஜன நாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, 'ஜன நாயகன்' படத்தை மறு ஆய்வு குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவின் விசாரணையை ஜன. 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்காக தாக்கல் செய்தது.

ஜன. 15 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், “இதுதொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளதால், நாங்கள் தலையிட விரும்பவில்லை” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஜன நாயகன் வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், ”ஜன நாயகன் படத்தில் மத மோதல்கள் போன்ற காட்சிகள் இருப்பதாலும், அனுமதி பெறாமல் பாதுகாப்புத் துறையின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் மறு தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்” என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை காலை தீர்ப்பு வழங்கியுள்ளது.

அப்போது, மத மோதல்கள் போன்ற காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த தலைமை நீதிபதி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இந்த வழக்கில் தணிக்கை வாரியத்துக்கு உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் தனி நீதிபதி பி.டி.ஆஷா விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Summary

Jana nayagan being delayed! The High Court CJ Bench order single judge to reinvestigate

ஜன நாயகன் போஸ்டர்
தேர்தலுக்கு முன் ஜன நாயகன் வெளிவராது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com