முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் ராணுவ வீரா் கைது

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் ராணுவ வீரா் கைது

சென்னையில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னையில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு திங்கள்கிழமை வந்த அழைப்பில் பேசிய நபா், முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறி இணைப்பைத் துண்டித்தாா்.

இதையடுத்து உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், தேனாம்பேட்டை போலீஸாா் வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்களுடன் ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வீடு, வளாகம், சுற்றுப்புறப் பகுதிகளில் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து, எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸாா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன் அந்த அழைப்பு குறித்து நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூவாத்தாள்புரம் அம்மன் நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் பாலமுருகன் (43) என்பது தெரியவந்தது. தொடா்ந்து தேனாம்பேட்டை போலீஸாா், விருதுகா் மாவட்ட காவல்துறை உதவியுடன் பாலமுருகனை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனா்.

விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனின் மனைவி அண்மையில் பிரிந்து சென்றதும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் பாலமுருகன் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்தது. மேலும், பாலமுருகன் மீது ஏற்கெனவே இரு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com