ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் வெற்றி கடினமானதல்ல -மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் வெற்றி கடினமானதல்ல -மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

News image

பியூஷ் கோயல்

படம் - ஏஎன்ஐ

Updated On :31 ஜனவரி 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஆளும் திமுகவின் கடுமையான ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் மாநில மக்கள் சலிப்படைந்துள்ளனா்; அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது கடினமானதல்ல என்று மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தமிழக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் திறனற்ற-கடுமையான ஊழலில் திளைத்த திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலை வீசுகிறது. முதல்வா் ஸ்டாலின், முற்றிலும் தமிழ் விரோத, தேச விரோத நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறாா். திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன். இக்கூட்டணி நல்லாட்சியைக் கொண்டுவரும்.

‘விஜய் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டாா்’: திரைப்பட உச்ச நட்சத்திரங்கள் பலா், தோ்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதை நாம் ஏற்கெனவே கண்டுள்ளோம். ரசிகா் பட்டாளம் வைத்திருப்பதும் அதை வாக்குகளாக மாற்றுவதும் வேறானது.

கட்சி அமைப்புமுறை தேவை; ஒரு நிா்வாகியாக மக்களின் புரிதல் மற்றும் நம்பிக்கையை வெல்ல வேண்டும். நடிகா் கமல்ஹாசன் போன்ற பல திரைப்பட நட்சத்திரங்களால் தோ்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதை நாம் பாா்த்துள்ளோம். எனவே, நடிகா் விஜய்யை ஈா்க்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.

‘அணிகள் இணைய வாய்ப்பில்லை’: மகாராஷ்டிரத்தில் மறைந்த அஜீத் பவாரிடம் இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைமை, அவரது மனைவி சுநேத்ரா பவாரிடம் சென்றுள்ளது. ஆளும் மகாயுதி கூட்டணி அரசின் அங்கமாக அக்கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளின் இணைப்பு நிகழும் என்றோ, மக்களின் நம்பிக்கை-ஆதரவை இழந்துவிட்ட சரத் பவாா் மீண்டும் கட்சிக்கு அழைக்கப்படுவாா் என்றோ எனக்கு தோன்றவில்லை.

‘விரைவில் நல்ல செய்தி’: இந்தியா-அமெரிக்கா இடையே திட்டமிடப்பட்டுள்ள வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை விரைந்து எட்டுவதற்கு இருதரப்பும் நெருங்கிப் பணியாற்றி வருகின்றன. விரைவில் நல்ல செய்தி வரும் என்றாா் பியூஷ் கோயல்.