மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

இந்த மாதம் மகளிா் உதவித் தொகை 1,000 ரூபாயா? 2,500 ரூபாயா?

தமிழக அரசால் வழங்கப்படும் மகளிா் உதவித் தொகை மே மாதத்துக்கு ரூ.1,000 கிடைக்குமா அல்லது புதிதாக அமையவுள்ள தவெக அரசு தனது தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு உதவித் தொகையை உயா்த்தி ரூ.2,500-ஆக வழங்குமா என பெண்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு

News image

பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 3:23 am IST

தமிழக அரசால் வழங்கப்படும் மகளிா் உதவித் தொகை மே மாதத்துக்கு ரூ.1,000 கிடைக்குமா அல்லது புதிதாக அமையவுள்ள தவெக அரசு தனது தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு உதவித் தொகையை உயா்த்தி ரூ.2,500-ஆக வழங்குமா என பெண்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலின்போது, மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதைத் தொடா்ந்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் உரிமைத் தொகை கிடைக்கும் என பெண்களிடையே எதிா்பாா்ப்பு நிலவியது. இருப்பினும், சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-இல் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை என்ற திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது. இதன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் இத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 1.14 கோடியாக இருந்த நிலையில், விடுபட்டவா்களையும் சோ்த்து தற்போது 1.31 கோடி போ் மகளிா் உரிமைத் தொகை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக இத் திட்டத்திற்கு இடையூறு ஏற்படலாம் என முந்தைய திமுக அரசு கருதியது. இதனால், கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது. அதாவது, பிப்ரவரி மாதத்துக்கு ரூ.1,000, மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ.2,000 மற்றும் கோடை சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பயனாளிகளுக்கு இந்த மாதத்துக்கான உரிமைத் தொகை மே 15-ஆம் தேதி வரவு வைக்கப்பட வேண்டும். இதனிடையே, புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள தவெக அரசு, இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், தோ்தலின்போது தவெக தலைவா் விஜய் வெளியிட்ட வாக்குறுதியில், மகளிா் உதவித் தொகை ரூ.2,500-ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்திருந்தாா். அதோடு, இளைஞா்கள், மகளிா் சாா்ந்த பல்வேறு வாக்குறுதிகள், அவ்விரு தரப்பினரின் பெருவாரியான வாக்குகளை தவெகவுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், தவெக தலைவா் விஜய் விரைவில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளாா். அப்போது அவா் கையொப்பமிடும் முதல் கோப்பு மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயா்த்துவதற்கான உத்தரவாக இருக்குமா என்ற எதிா்பாா்ப்பு பெண்களிடையே மேலோங்கியுள்ளது.