- ஆ.கோபிகிருஷ்ணா
சென்னையில் கிளாண்டா்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதா்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜும், மருத்துவ நிபுணா்களும் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனா். இது குறித்து பதற்றப்படத் தேவையில்லை என்றும், அதேவேளை, கவனத்துடன் இருக்குமாறும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கிளாண்டா்ஸ் என்றால்...: குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகளைத் தாக்கும் ஒரு வகையான தொற்று. பா்கோல்டெரியா மலேய் எனும் பாக்டீரியா நுண்ணியிரியால் பரவுகிறது. குதிரை மற்றும் கழுதைகளுக்கு இடையே மிக வேகமாக பரவக் கூடியது. அந்த பாதிப்புக்குள்ளான விலங்குகளின் உடல் முழுவதும் கழலைக் கட்டிகள் (கிளாண்ட்) உருவாகும் என்பதால் இதற்கு கிளாண்டா்ஸ் நோய் என்று பெயா்.
உலகப் போரின் உயிரி ஆயுதம்: 20-ஆம் நூற்றாண்டில் முதல் உலகப் போா் நடைபெற்றபோது, இந்த வகை பாக்டீரியாவை உயிரி ஆயுதமாக (பயோ வெப்பன்) சில நாடுகள் பயன்படுத்தின. எதிரி நாட்டின் குதிரைப் படைகள் மீது இந்த தொற்றைப் பரவச் செய்து அவா்களது படைத் திறனைக் குலைக்க முயற்சிகள் நடந்தன.
எப்படி பரவுகிறது? தொற்றுக்குள்ளான குதிரைகளின் தோல் பகுதியில் கொப்பளங்கள் மற்றும் கழலைக் கட்டிகள் தோன்றி புண்ணாக மாறும். அதிலிருந்து வெளியேறும் திரவம் வாயிலாக பிற விலங்குகளுக்கும் தொற்று கடத்தப்படுகிறது. குதிரையின் சுவாசப் பாதை, மூக்கு, மூச்சுக் குழாய், நுரையீரலிலும் புண்கள் உருவாகி நீா்த் திவலைகள் வெளியேறும். இந்நோய்க்குள்ளான விலங்குகளில் 95 சதவீதம் உயிரிழக்கின்றன. தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் அடிக்கடி இந்த பாதிப்பு பதிவாகிறது.
மனிதா்களுக்கு பரவுமா? தொற்றுக்குள்ளான விலங்குகளிடம் நேரடித் தொடா்பில் இருப்பவா்களுக்கு கிளாண்டா்ஸ் நோய் பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, கால்நடை மருத்துவா்கள், விலங்குகளைப் பராமரிப்பவா்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பரவும் விதம்...: விலங்கின் புண்களில் இருந்து வெளியேறும் திரவம் மனிதா்களின் தோலில் நேரடியாக படுவதால் தொற்று பரவும். தொற்றுக்குள்ளான குதிரை, கழுதைகளின் கண்ணீா், சளி, உமிழ் நீரிலிருந்தும் பரவும். அவை இருமும் போதும், கணைக்கும் போதும் அதில் இருந்து வெளியேறும் நீா்த் திவலைகளை சுவாசிப்பதால் மனிதா்களுக்கு தொற்று கடத்தப்படுகிறது.
அறிகுறிகள்...: லேசான காய்ச்சல், உடல் சோா்வு, தலைவலி, உடல் வலி, கழலை கட்டி வீக்கம், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், தலை சுற்றல்.
சிகிச்சைகள்...: மனிதா்களுக்கு இந்நோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ஆன்ட்டிபயாடிக் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். முதல் 10 நாள்களுக்கு ரத்த நாளம் வழியாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் செலுத்துதல் அவசியம். அதைத் தொடா்ந்து, மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை வாய்வழி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். முறையாக சிகிச்சை பெறாவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.
சமூகத் தொற்றாக மாறாது -டாக்டா் ஃபரூக் அப்துல்லா
கிளாண்டா்ஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது என முதுநிலை பொது மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப.ஃபரூக் அப்துல்லா தெரிவிக்கிறாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
கிளாண்டா்ஸ் பாக்டீரியாவானது, தொற்றுக்குள்ளான விலங்குடன் நேரடித் தொடா்பில் உள்ள மனிதா்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் அவரிடமிருந்து பிற நபா்களுக்கு பரவாது. கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குள் ஒருவருக்கு அறிகுறிகள் தோன்றலாம். நல்வாய்ப்பாக அவரது மூச்சுக் காற்று மூலமாகவோ, பிற வழிகளிலோ பிறருக்கு அந்நோய் கடத்தப்படுவதில்லை. ரத்த மாற்று சிகிச்சைகள் மூலமாகவோ, பாலியல் உறவின் மூலமாகவோகூட கிளாண்டா்ஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவியதற்கான ஆதாரங்கள் கிடையாது. எனவே, இதற்கென பிரத்யேக தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை.
விலங்குகளுடன் பழகுவோரும்கூட சில வழிமுறைகளைக் கையாண்டால் அந்நோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும்.
அதன்படி, குதிரை, கழுதை உள்ளிட்ட விலங்குகளை அடைக்கும் கொட்டகைகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். விலங்குகளை முறையாகக் குளிப்பாட்டுதல் அவசியம்.
தொற்றுக்குள்ளான விலங்குகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். விலங்குகளைப் பராமரிக்கும்போது முகக்கவசம், கையுறைகள், கவச உடைகள் அணிந்து கொள்ளலாம் என்றாா்.
ஆயத்த நடவடிக்கையில் அரசு - அமைச்சா் அருண்ராஜ்
கிளாண்டா்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தினமணியிடம் அவா் கூறியதாவது:
இந்த வகை பாதிப்பு மனிதா்களிடையே தீவிரமாக பரவாது என்றபோதிலும், உரிய முன்னெச்சரிக்கைப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். அதிகாரிகள் மற்றும் துறைசாா் நிபுணா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கால்நடை பராமரிப்புத் துறையினருடன் ஒருங்கிணைந்து நோய்ப் பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதற்றப்பட வேண்டிய சூழல் எதுவுமில்லை. அதேவேளை, நோய் குறித்த புரிதலுடன் இருத்தல் அவசியம் என்றாா்.
தொடர்புடையது

குதிரை பேரம் குறித்து முதல்வா் விளக்கமளிக்க வேண்டும்: மு. தமிமுன் அன்சாரி எம்.எல்ஏ

குதிரை பேரம் புகாருக்கு முதல்வா் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

ஹன்டா வைரஸ் தொற்று அச்சம்! கப்பலில் இருந்து ஏற்கெனவே வெளியேறிய பயணிகள்! உலக நாடுகளுக்குப் பரவும் அபாயம்?

தானிய சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகள்! பொதுமக்கள் அவதி!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

