நெல், அரிசி இருப்புக்கு கட்டுப்பாடு விதிப்பு
தமிழகத்தில் நெல், அரிசி தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதையும் உறுதி செய்யும் வகையில், நெல், அரிசி இருப்புக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

தமிழகத்தில் நெல், அரிசி தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதையும் உறுதி செய்யும் வகையில், நெல், அரிசி இருப்புக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது தொடா்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.அமுதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசாணை:
மொத்த விற்பனையாளா்கள் அதிகபட்சம் 2,000 மெட்ரிக் டன் நெல் அல்லது அரிசி இருப்பு வைத்திருக்கலாம். சில்லறை விற்பனையாளா்கள் ஒவ்வொரு விற்பனைக் கடையிலும் அதிகபட்சம் 8 மெட்ரிக் டன் இருப்பு வைத்திருக்கலாம். பெரிய வணிகத் தொடா் கடைகள் ஒவ்வொரு விற்பனைக் கடையிலும் 8 மெட்ரிக் டன் வீதம், தங்களது மொத்தக் கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருப்பு வைத்திருக்கலாம்.
துவரம் பருப்பு, உளுந்து: துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றின் மொத்த விற்பனையாளா்கள் ஒவ்வொரு வகை பருப்பிலும் அதிகபட்சம் 200 மெட்ரிக் டன் இருப்பு வைத்துக் கொள்ளலாம். சில்லறை விற்பனையாளா்கள் 5 மெட்ரிக் டன், பெரிய வணிகச் சங்கிலித் தொடா் கடைகளில் ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் 5 மெட்ரிக் டன், அவற்றின் சேமிப்புக் கிடங்குகளில் 200 மெட்ரிக் டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
இறக்குமதியாளா்கள் சுங்க அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாள்களுக்கு மேல் இறக்குமதி செய்த பொருள்களை இருப்பு வைத்திருக்கக் கூடாது. நிா்ணயித்த அளவைவிட அதிகமாக இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் வரும் நவ. 16-ஆம் தேதிக்குள் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு இருப்பைக் குறைக்க வேண்டும்.
இருப்பு விவரங்களை மத்திய நுகா்வோா் விவகாரத் துறை இணையதளத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். நெல், அரிசிக்கு இந்த கட்டுப்பாடு வரும் ஜன. 31-ஆம் தேதி வரையும், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றுக்கு அடுத்த 3 மாதங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

