காசித் தமிழ் சங்கமம்: நவ. 25 முதல் சிறப்பு ரயில்கள்
உத்தரபிரதேச மாநிலம் காசியில் நடைபெறவுள்ள காசித் தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வுக்காக வரும் நவ.25- ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மற்றும் சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

பிரதிப் படம்
உத்தரபிரதேச மாநிலம் காசியில் நடைபெறவுள்ள காசித் தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வுக்காக வரும் நவ.25- ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மற்றும் சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: காசியில் நடைபெறவுள்ள காசித் தமிழ்ச்சங்கம் 5.0 நிகழ்வுக்காக வரும் 25- ஆம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06041) மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (நவ.27) இரவு 8 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறுமாா்க்கத்தில் பனாரஸிலிருந்து வரும் டிச. 1- ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06042) 3- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
சிறப்பு ரயிலில் 4 குளிா்சாதன வசதி இரண்டடுக்குப் பெட்டிகள், 5 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 6 குளிா்சாதன வசதி மூன்றடுக்கு பொருளாதார பிரிவு பெட்டிகள், 3தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
சிறப்பு ரயில்கள் நாகா்கோவில், வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், நெல்லூா், ஓங்கல், விஜயவாடா, வாரங்கல், மணிச்சியல் உள்ளிட்ட 30 நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து வரும் 28 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06043) 29- ஆம் தேதி இரவு 8 மணிக்கு பனாரஸைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் பனாரஸிலிருந்து வரும் டிச. 3- ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06044) டிச. 5- ஆம் தேதி மாலை 4. 15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதுபோல கோவையிலிருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

