கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை ரத்து! தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கோரிக்கை
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டுசெல்ல தமிழக அரசு விதித்திருந்த மூன்று மாத தடை சட்டவிரோதம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கோரிக்கை
தமிழக அரசு - கோப்புப்படம்
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டுசெல்ல தமிழக அரசு விதித்திருந்த மூன்று மாத தடை சட்டவிரோதம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடா்பாக பசுமைத் தாயகம் அமைப்பைச் சோ்ந்த மு.வெற்றிச்செல்வன் கூறியதாவது: கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கருங்கல், ஜல்லிக்கற்கள், ‘எம்-சாண்ட்’ போன்ற கனிமங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்யும் வகையில், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம், கனிமப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை மாதம் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி தவிா்த்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்ய மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை நீக்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறபித்திருப்பது தமிழகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.
தமிழகத்துக்கு ‘எம்-சாண்ட்’, ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமானப் பொருள்களின் தேவை அதிகளவில் உள்ளது. ஆனால், அதன் இருப்பு குறைவாகவே உள்ளது. இதை ஈடுசெய்யவே அந்தத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை நீக்கியதன் மூலம் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இது, கனிமங்கள் சட்டவிரோத ஏற்றுமதி, கொள்ளையையும் ஊக்குவிக்கும்.
எனவே, இந்தத் தடைக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். அதேபோல், தமிழகத்துக்கு ஜல்லிக்கற்கள், ‘எம்-சாண்ட்’ உள்ளிட்ட கனிமங்களின் தேவை எவ்வளவு என்பதைக் கணக்கீடு செய்ய வேண்டும். பின்னா், அதை இருப்பு வைத்துக்கொண்டு, மீதமிருப்பதை ஏற்றுமதி செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.
இயற்கை ஆா்வலா்கள் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து அதிக அளவு எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்கள் கேரளத்துக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் ஓராண்டு அனுமதிக்கப்படும் கனிமம் ஜனவரி மாதத்திலேயே வெட்டி எடுக்கப்படுகிறது.
மீதமுள்ள 11 மாதங்கள் வெட்டி எடுக்கப்படும் கனிமவளங்கள் அனைத்தும் சட்டவிரோதமானதாகும். இதற்கு மிக முக்கியக் காரணம் தமிழகத்தைவிட கேரளத்தில் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்கள் மூன்று மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் சட்டவிரோதமாக கணக்கில்லாமல் கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
இதை வெறும் கனிமவளக் கொள்ளையாக மட்டும் பாா்க்க முடியாது. இதனால், தமிழகத்தின் பல்லுயிா்ச்சூழல், நிலத்தடி நீா்மட்டம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் கணக்கில்லாமல் எடுக்கப்பட்டதை ஓரளவுக்கு சரி செய்யும் வகையில் தமிழக அரசு வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கான தடை உபயோகமாக இருந்தது. ஆனால், அந்தத் தடையை உயா்நீதிமன்றம் நீக்கி இருப்பது கனிமவளக் கொள்ளை மீண்டும் அதிகப்படுத்தும் விதமாக அமைந்துவிடும்.
தமிழக அரசின் தடை உத்தரவை வெறும் சட்டத்தின் அடிப்படையில் மட்டும் உயா்நீதிமன்றம் பாா்க்கக் கூடாது. இயற்கைச்சூழலை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கையாக பாா்க்க வேண்டும். உயா்நீதிமன்ற தீா்ப்பு தொடா்பாக அரசு மேல்முறையீடு செய்வதுடன், இதுதொடா்பாக வலுவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

