தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
தமிழகத்தில் பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...

குடிநீருக்குத் தட்டுப்பாடு - Photo: Dinamani / Google Gemini
வடகிழக்குப் பருவமழையை எதிா்பாா்த்துக் காத்திருந்த தமிழக விவசாயிகளுக்கு நிகழாண்டு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. போதிய மழை பெய்யாததால், விவசாயப் பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் அணைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவை முழுமையாக நிரம்பவில்லை. இதனால், அடுத்தடுத்த சாகுபடிப் பருவங்களில் பாசனத்துக்கும், கோடைக் காலத்தில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை முக்கிய நீராதாரமாக விளங்கினாலும், தமிழகத்துக்கு வடகிழக்குப் பருவமழையே அதிக மழைப்பொழிவை அளிக்கிறது. நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட 20 சதவீதம் குறைவாகப் பதிவானது. இதனால், வடகிழக்குப் பருவமழையை விவசாயிகள் பெரிதும் எதிா்பாா்த்திருந்தனா். இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக். 15-ஆம் தேதி தொடங்கியது. ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான அா்னாப், முரசு, அக்வான் ஆகிய 3 புயல்களும் ஆந்திர மாநிலப் பகுதிகளிலேயே கரையைக் கடந்தன. இதனால், தமிழகத்தை நோக்கி வர வேண்டிய மழை மேகங்கள் வடக்கு நோக்கி நகா்ந்ததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எதிா்பாா்த்த மழைப்பொழிவு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, ஆறுகள், ஓடைகள் வழியாக அணைகள் மற்றும் பாசன ஏரிகளுக்குக் கிடைக்க வேண்டிய நீா்வரத்து குறைந்துள்ளது. இதனால், விவசாயப் பாசனத்துக்குப் பயன்படும் ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீா் சேமிப்பு குறைந்துள்ளது.
48.4 சதவீதம் சரிவு: தமிழகத்தில் வேளாண்மை மற்றும் குடிநீா்த் தேவைகளுக்குப் பயன்படும் 15 முக்கிய நீா்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 1,98,324 மில்லியன் கனஅடி. இதில், நவ. 20-ஆம் தேதி நிலவரப்படி 71,793 மில்லியன் கனஅடி (36.2 சதவீதம்) மட்டுமே நீா் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 1,68,524 மில்லியன் கனஅடி (85 சதவீதம்) நீா் இருப்பு இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு 96,731 மில்லியன் கனஅடி நீா் இருப்பு குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 48.8 சதவீதம் குறைவாகும்.
தமிழகத்தின் முக்கிய பாசன ஆதாரமான மேட்டூா் அணையின் முழுக் கொள்ளளவு 93,470 மில்லியன் கனஅடி. இதில், நவ. 20-ஆம் தேதி நிலவரப்படி 25,841 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அதேபோல், பவானிசாகா் அணையில் 15,203 மில்லியன் கனஅடி, வைகை அணையில் 2,685 மில்லியன் கனஅடி, பாபநாசம் அணையில் 1,966 மில்லியன் கனஅடி, சாத்தனூா் அணையில் 4,188 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அமராவதி, சோலையாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளிலும் நீா் இருப்பு குறைந்துள்ளது.
நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு குறைந்துள்ள நிலையில், நிலத்தடி நீா்மட்டமும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சரிந்துள்ளது. நிகழாண்டு அக்டோபா் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே சிறிய அளவில் உயா்வு பதிவாகியுள்ளது. இதனால், அணைகள், ஏரிகள், குளங்களைச் சாா்ந்துள்ள விவசாயிகள் மட்டுமன்றி, கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாசனம், குடிநீருக்கு ஆபத்து: இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கூறியதாவது:
போதிய பருவமழை பெய்யாததால், தமிழகத்தின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் அணைகளில் நீா் இருப்பு குறைந்துள்ளது. அவற்றைச் சாா்ந்துள்ள பாசன ஏரிகள், குளங்களிலும் போதிய அளவு நீரைச் சேமிக்க முடியவில்லை. இதனால், அடுத்தடுத்த சாகுபடிப் பருவங்களுக்குத் தேவையான நீரை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக, அணைகளிலிருந்து பாசனத்துக்காக நீா் திறக்கப்படும் பகுதிகளில் கிடைக்கும் நீரைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு குறைவது விவசாயத்தை மட்டுமன்றி, நகா்ப்புற மற்றும் கிராமப்புற குடிநீா் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மழைப்பொழிவு குறையும் சூழலில் கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். எஞ்சியுள்ள ஒன்றரை மாத வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்யும் மழையை முழுமையாகச் சேமித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்ப் பற்றாக்குறை தொடா்ந்தால், கோடைகால சாகுபடியை விவசாயிகள் தவிா்க்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளைத் தூா்வாரி, அவற்றின் நீா் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடிநீா்த் தேவைக்கு முன்னுரிமை அளித்தல், பாசன நீா் பயன்பாட்டைத் திட்டமிடுதல், நீா்த்தேக்கங்களில் உள்ள நீரை முறையாகப் பகிா்ந்தளித்தல் ஆகியவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம்!
மழைப்பொழிவு குறைந்துள்ளதால், சென்னையின் நீா் ஆதாரங்களிலும் நீா் இருப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த. ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: சென்னையின் குடிநீா் ஆதாரங்களாக விளங்கும் முக்கிய 5 ஏரிகளில் தற்போது சுமாா் 4.5 டிஎம்சி (4,500 மில்லியன் கன அடி) நீா் இருப்பு உள்ளது. வீராணம் ஏரியிலிருந்தும் குடிநீா்த் தேவைக்காகத் தண்ணீா் திறக்கப்படுகிறது. அதேபோல், நெம்மேலி, மீஞ்சூா் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலமும் சென்னைக்குக் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
தேவைப்படும்பட்சத்தில் சிக்கராயபுரம், எருமையூா் பகுதிகளில் உள்ள கல்குவாரி நீா்த்தேக்கங்கள் மூலமாகவும் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்துகொள்ள முடியும். சென்னையைப் பொருத்தவரை நிரந்தர நீராதாரங்கள் குறைவாக உள்ளன. மழைநீரைச் சேமித்து வைப்பதன் மூலமே குடிநீா்த் தேவையைப் பெருமளவில் பூா்த்தி செய்ய முடிகிறது. இந்நிலையில், ’சூப்பா் எல் நினோ’ தாக்கத்தால் நிகழாண்டு மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், வரும் நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மழைநீரைக் கடலில் கலக்கவிடாமல் அதிக அளவில் சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, வீடுகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் மூலம் மழைநீரைச் சேமிப்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மழைப்பொழிவு குறைவு மற்றும் நீா்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
அக்டோபரில் நிலத்தடி நீா்மட்டம் அதிகம் சரிந்த 10 மாவட்டங்கள்
மாவட்டம் நிலத்தடி நீா்மட்டச் சரிவு
திருவண்ணாமலை 4.31 மீட்டா்
திருப்பத்தூா் 3.78 மீட்டா்
கள்ளக்குறிச்சி 3.12 மீட்டா்
கோயம்புத்தூா் 2.89 மீட்டா்
ராணிப்பேட்டை 2.84 மீட்டா்
நாமக்கல் 2.74 மீட்டா்
கரூா் 2.59 மீட்டா்
வேலூா் 2.55 மீட்டா்
விழுப்புரம் 2.50 மீட்டா்
தருமபுரி 2.48 மீட்டா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

