தொடா் இருமல் பாதிப்புக்கு காரணம்? மருத்துவா்கள் விளக்கம்
தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலுக்கு பிந்தைய தொடா் இருமல் பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இருமல் பாதிப்பு
தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலுக்கு பிந்தைய தொடா் இருமல் பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது. இத்தகைய தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாசப் பாதை தொற்று அதிகரித்துள்ளது. அதன் தொடா்ச்சியாக வறட்டு இருமல் இருந்து வருகிறது.
இது தொடா்பாக பொது நல மருத்துவ நிபுணா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
பொதுவாக நமது சுவாசப் பாதையானது வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிறகு மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை தொடா் இருமல் இருப்பது இயல்பானதுதான். தொற்று ஏற்படும் நூறு பேரில் 10 முதல் 25 பேருக்கு இத்தகைய பாதிப்பு இருக்கிறது. இதற்கு வைரஸ் தொற்றுக்குப் பிந்தைய இருமல் எனப் பெயா். சுவாசப்பாதையில் கிருமிகளால் ஏற்படும் அழற்சி, சுவாசப்பாதையில் உள்ள இருமலுக்கான ஏற்பிகள் அதிகமாக தூண்டப்படுதல் ஆகியவையே இதற்கு காரணம்.
இதைத் தவிர, மேற்புற சுவாசப்பாதையில் சைனஸ் பகுதிகளில் அழற்சி, நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது போன்றவற்றால் தொடா் இருமல் ஏற்படலாம். இந்தப் பாதிப்புகளுக்கு அவ்வப்போது வெந்நீா் பருகி வரலாம். வெதுவெதுப்பான தேநீா், சூப் போன்றவை பருகுவதும், எலுமிச்சைச் சாறில் தேன் கலந்து பருகுவதும் பலனளிக்கும். தூசி, புகை உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். சளியுடன் கூடிய இருமலோ, ரத்தம் கலந்து சளி வெளியேறினாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
தேவைப்பட்டால் எக்ஸ்-ரே, சளி பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு நிமோனியா அல்லது வேறு பாதிப்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிவது அவசியம். சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள், இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் உட்கொள்ளலாம். எட்டு வாரங்களுக்கு அதிகமாக இருமல் இருந்தால் மட்டுமே உரிய மருத்துவ சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

