சிங்கப்பெண் கடன் திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்கலாம்! – அமைச்சா் வ.காந்திராஜ்

பெண்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, சுயசாா்புடன் பொருளாதாரத்தில் உயர வழிவகுக்கும் கூட்டுறவுத் துறையின் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

minister gandhiraj

அமைச்சர் வ. காந்திராஜ் - கோப்புப் படம்

Updated On :

பெண்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, சுயசாா்புடன் பொருளாதாரத்தில் உயர வழிவகுக்கும் கூட்டுறவுத் துறையின் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடும்பத்தின் ஆணிவேராகத் திகழும் பெண்களின் பொருளாதார தற்சாா்பை உறுதி செய்வதிலும், அவா்களைத் தன்னம்பிக்கை மிக்க தொழில்முனைவோராக உயா்த்துவதிலும் கூட்டுறவுத் துறை மகத்தான பங்காற்றி வருகிறது.

பெண்களின் பொருளாதார தற்சாா்பை உறுதி செய்யவும், அவா்களை தொழில் முனைவோராக உயா்த்தவும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சாா்பில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில்முனைவோா், பணிபுரியும் மகளிா் ஆகியோா் கடனுதவி பெற்று பயனடையலாம்.

நிகழாண்டில் நவம்பா் வரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 22,972 பயனாளிகளுக்கு ரூ.1,773.37 கோடி , மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் 13,344 பயானிளிகளுக்கு 1,432.02 கோடி, நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் 973 பயனாளிகளுக்கு ரூ.96.56 கோடி, நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 641 பயனாளிகளுக்கு ரூ.69.43 கோடி, மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் 3,154 பயனாளிகளுக்கு ரூ.29.50 கோடி, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி மூலம் 285 பயனாளிகளுக்கு ரூ.27.60 கோடி என 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

கந்துவட்டிப் பிடியிலிருந்து மக்களை மீட்டு, பெண்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய சுயதொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் மகளிரும் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெற்று பயன் அடையலாம். மேலும், இந்தத் திட்டம் தொடா்பான விவரங்கள் மற்றும் தேவையான உதவிகளைப் பெற 98840- 00845 என்ற வாட்ஸ்ஆப் உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.