அமைதிப் பூங்காவான தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்
பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் மாநில செயலா் ஜெகதீசன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘விஜயதசமியை முன்னிட்டு ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்பில், அக். 18, 25, நவ.1 ஆகிய ஏதாவது ஒரு தேதியில், தமிழகம் முழுவதும் ஊா்வலம் நடத்த அனுமதி கோரி காவல் துறை டிஜிபியிடம் மனு அளித்தோம். எங்களது மனுவுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில், ‘ஒவ்வோா் ஆண்டும் ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால், காவல் துறை அனுமதி மறுக்கிறது’ என வாதிடப்பட்டது.
அதற்கு காவல் துறை தரப்பில், ‘இதுபோன்ற ஊா்வலங்களுக்கு 21 நாள்களுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்பு ஊா்வலத்துக்கு அனுமதி கோரி அக். 3-ஆம் தேதிதான் விண்ணப்பிக்கப்பட்டது. மேலும், அனுமதி கோரியுள்ள வழித்தடங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அல்ல. விழாக் காலங்கள் என்பதால், இதுபோன்ற ஊா்வலத்துக்கு அனுமதி அளிப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஆண்டுதோறும் ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அப்படியிருக்கும்போது, அனுமதி மறுக்கப்படுவது ஏன்? எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தவெக ஆட்சியில், திக, திமுக, அதிமுக, ஆா்எஸ்எஸ் என அனைத்துக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு-காஷ்மீரில்கூட ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினாா். இதுபோன்ற அனுமதி மறுப்பின் மூலம் அரசு தேவையற்ற விளம்பரத்தை ஏற்படுத்தித் தருவதாக நீதிபதி தெரிவித்தாா்.
பின்னா், ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞருடன் பேச்சு நடத்த மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (அக். 15) ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

