ஆயுத பூஜை: சென்னையிலிருந்து 12,357 பேருந்துகள்; 5.11 லட்சம் பேர் பயணம்! அமைச்சர் தகவல்
சொந்த ஊர்களில் இருந்து மக்கள் திரும்ப தேவையான சிறப்புப் பேருந்துகள் இயக்கம்...

சேலம் தற்காலிகப் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர். - X / Tamilan Parthiban
பண்டிகைக்காக தமிழகத்தில் இருந்து 12,357 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல் தெரிவித்தார்.
ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அதன்படி இந்த முறை தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இவர்கள் பயணம் செய்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அரசு பேருந்துகளோடு சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து இயக்கி வருகிறது.
இதன்படி சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான மைதானத்தை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரடியாக ஆய்வு செய்தார்.
மேலும் தொலைதூரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள், பயணிகளுக்குத் தேவையான கழிப்பிடம், குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தவும் பேருந்துக்காக காத்திருக்கும பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்,
தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பேருந்துகள் வந்து செல்ல தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் திரும்பி வருவதற்காக தமிழகம் முழுவதும் 8,612 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் பண்டிகை காலங்களில் 3,745 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தம் 12,357 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
இது தவிர சேலத்தில் 60 தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பயணிகளின் வசதி கருதி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், பண்டிகைக்கு வந்து செல்லும் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் போக்குவரத்தை கட்டமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

