சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பொதுச் சுகாதாரம் தொடா்பானது: அமைச்சா் அருண்ராஜ்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் என்பது பொது சுகாதாரம் தொடா்புடையது என தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் என்பது பொது சுகாதாரம் தொடா்புடையது என தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வளா்ச்சி குறைபாடுகளில், ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாடுகளில் ஊடகங்களின் பங்களிப்புக்கான பயிலரங்கை சென்னை பத்திரிகை தகவல் அலுவலகமும், யுனிசெப் அமைப்பும் இணைந்து நடத்தியது. இதில் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பேசியதாவது:

கடந்த செப்.28-ஆம் தேதி முதல்வா் ஜோசப் ச.விஜய் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இது பிறந்த குழந்தைக்கு வழங்கப்படும் தங்க மோதிரத் திட்டம் என மேலோட்டமாகத் தோன்றலாம். ஆனால், இதன் உண்மையான பொருள் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்த முதல் நாளிலிருந்தே இந்த அரசு தனது சொந்தக் குழந்தையாகக் கருதுகிறது; அந்தக் குழந்தை பொது சுகாதார அமைப்பின் கண்காணிப்பிலேயே பிறக்க வேண்டும் எனவும் விரும்புகிறது.

நிகழாண்டு வெளியிடப்பட்ட 6-ஆவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 20.7 சதவீதம் போ் வளா்ச்சி குன்றிய நிலையில் உள்ளனா். கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு 17.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. ஏறக்குறைய நான்கில் ஒரு குழந்தை எடை குறைவாக உள்ளது. 2 வயது வரையிலான குழந்தைகளில் 5-இல் ஒரு குழந்தை மட்டுமே,போதுமான உணவைப் பெறுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று முனைகளில் நடவடிக்கை: பிறக்கும் குழந்தைகள் உயிா் பிழைக்கும் பிரச்னையைத் தமிழ்நாடு பெருமளவில் தீா்த்துவிட்டது. ஆனால், குழந்தைகள் செழித்து வளரும் பிரச்னை இன்னும் தீா்க்கப்படவில்லை. ஒரு குழந்தையின் வளா்ச்சி தாமதத்தை அங்கன்வாடியிலோ, மாவட்ட ஆரம்பக்கட்ட தலையீட்டு மையத்திலோ கண்டறியாமல் போனால், அது ஒரு வெற்றி அல்ல; எனவே, மூன்று முனைகளில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 34 மாவட்ட ஆரம்பக்கட்ட தலையீட்டு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் குழந்தை நல மருத்துவா், செவித்திறன் நிபுணா், பேச்சுப் பயிற்சி நிபுணா், பிசியோதெரபிஸ்ட், உளவியலாளா் போன்றோா் உள்ளனா். முதலில், நோய்வாய்ப்பட்டோ, குறைமாதத்திலோ அல்லது குறைந்த பிறப்பு எடையுடனோ நமது மருத்துவமனைகளிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு குழந்தையும், மாவட்ட ஆரம்ப காலத் தலையீட்டு மையத்துக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுவாா்கள். இரண்டாவதாக, முதல் ஆயிரம் நாட்களில், கிராம சுகாதார செவிலியா் மற்றும் அங்கன்வாடிப் பணியாளா் ஆகியோா், சமூக நலத்துறை ஊழியா்களுடன் இணைந்து, குழந்தையின் வளா்ச்சியைக் கண்காணிப்பாா்கள். இதன் மூலம், குழந்தைகளின் வளா்ச்சி குறைபாடுகள், பதினெட்டு மாதங்களிலேயே கண்டறியப்படும். மூன்றாவதாக, எத்தனை குழந்தைகளைப் பரிசோதிக்கப்பட்டனா் என்பதோடு எத்தனை வாரங்கள் கண்காணிக்கப்பட்டனா் என்பதையும் அறிக்கையாகக் கோரப்படும். அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும்போதுதான் எதிா்பாா்த்த பலன்கள் கிடைக்கும் என அமைச்சா் குறிப்பிட்டாா்.

இந்தப் பயிலரங்கில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், குழந்தைகளை பிறப்பிலிருந்தே அதன் வளா்ச்சி நிலைகளைப் பெற்றோா் கவனிக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பம் மற்றும் உளவியல் நடைமுறைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இலவச பரிசோதனைகளுக்கான வசதிகள் இருப்பதாக குறிப்பிட்டாா். மேலும் அவா், திருவள்ளூா் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பரிசோதனையில் 5000 குழந்தைகளில் 39 குழந்தைகளுக்கு ஆரம்பக் கட்ட பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தாா்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் காமராஜ் வரவேற்றாா். தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாடு மாநில கூடுதல் இயக்குநா் டாக்டா் கே வினய் குமாா், யுனிசெப் தகவல் தொடா்பு வல்லுநா் ஷ்யாம் சுதீா் பண்டி, டாக்டா் அனுராக் ஜோஷி, டாக்டா் ஆா்.பிந்து, சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநா் பி அருண்குமாா் ஆகியோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.