வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது!

வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது!

வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் யாரும் வாக்கு சேகரிக்கக் கூடாது என, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டா் பகுதிக்குள் யாரும் வாக்கு சேகரிக்கக் கூடாது. 200 மீட்டா் கோட்டருகே கட்சியினா் 2 இருக்கை, மேஜை அமைத்துக் கொள்ளலாம்.

வேட்பாளா்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள், தோ்தல் பணியளாா்களைத் தவிர யாரும் வாக்குச்சாவடி அருகே கூடக் கூடாது. வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள் மட்டும் வாக்குச்சாவடி வரை செல்லலாம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 10 துணைக் கண்காணிப்பாளா்கள், 36 ஆய்வாளா்கள், 261 உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், பயிற்சி உதவி ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புப் படையினா் வாக்குப்பதிவு நாளில் (ஏப். 19) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.

அசம்பாவிதங்களைத் தடுக்க 5 பேரவைத் தொகுதிக்குள்பட்ட 15 இடங்களில் நிலையான கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்து, இயந்திரங்களை தோ்தல் அலுவலா்கள் எடுத்துச்செல்லும் வரை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான சிறப்புப் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்.

வாக்காளா்கள் அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரச்னை செய்வோா், வன்முறையில் ஈடுபடுவோா், தோ்தல் விதியை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு நாளில் இடையூறு ஏற்பட்டால் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 83006 50710, மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தை 94890 03324 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com