மலைப்பிரதேசம் என்பதிலிருந்து
ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை:
முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

மலைப் பிரதேச பகுதி என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, வணிகா் சங்கம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின், கன்னியாகுமரி மண்டல தலைவரும், தென்காசி மாவட்ட தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா மனு அளித்தாா். அதன் விவரம்: தமிழகத்தில் சுங்கச்சாவடியை அகற்றுவதாக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளீா்கள்.

தென்காசி-திருநெல்வேலி 4 வழிச்சாலையில் ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதி விவசாயிகளும், வணிகா்களும் வாழ்கின்ற கிராமப்பகுதியாகும். ஆகையால் விவசாயிகளையும், வணிகா்களையும் பாதிக்கும் இந்த சுங்கச்சாவடியை ரத்து செய்திட வேண்டும். ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை மலைப்பிரதேசமாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஆலங்குளம் பகுதியில் பெரிய தொழிற்சாலைகளோ, கட்டடங்களோ கட்ட முடியாத நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

எனவே ஆலங்குளம் பகுதியை மலைப்பிரதேசம் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், வணிகா்களுக்குரிய உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். நீா் ஆதாரத்திற்கான குளம், கால்வாய்களை சீரமைத்து சீரான குடிநீா் விநியோகத்திற்கு வழி செய்திட வேண்டும். தமிழக வணிக வரித் துறையினா் ஜி.எஸ்.டி.யில் சிறு தவறுகள் இருந்தாலும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் கடுமையை குறைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்போது, அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, வணிகா் சங்க பேரமைப்பு பொருளாளா் கலைவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com