கல்வி மாற்றங்களில் தமிழகம் தனித்துவிடக் கூடாது: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு

தேசிய அளவில் நிகழும் கல்வி மாற்றங்களில் தமிழகம் தனித்துவிடக் கூடாது என தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் குறிப்பிட்டார்.
கல்வி மாற்றங்களில் தமிழகம் தனித்துவிடக் கூடாது: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு


தேசிய அளவில் நிகழும் கல்வி மாற்றங்களில் தமிழகம் தனித்துவிடக் கூடாது என தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் குறிப்பிட்டார்.

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில் அவர் பேசியதாவது:

"தேசிய அளவில் பரந்துவிரிந்துள்ள கல்வி, பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், நாம் அவற்றில் இணைந்துகொள்ளவில்லையோ என்ற ஐயப்பாடு உள்ளது. சர்வதேச அளவிலான போக்கை நாம் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோமோ எனத் தோன்றுகிறது. இங்கு படித்துவரும் மாணவர்கள் அனைத்து நாடுகளிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள பிற பத்திரிகைகளுக்கெல்லாம் ஒரு வரலாறு உண்டு. அவையெல்லாம் பிரிட்டிஷ் அரசுக்குத் துணை நிற்க, அவற்றின் செய்திகளைத் தெரிவிப்பதற்காகத் தொடங்கப்பட்டவை. ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் அப்படி அல்ல. சுதந்திரப் போராட்ட காலத்தில் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக பத்திரிகைகள் தொடங்க வேண்டும் என்ற காந்தியடிகள் அறைகூவலை ஏற்று, ராம்நாத் கோயங்காவின் தீர்க்க தரிசனத்தால் தொடங்கப்பட்டதுதான் இந்தியன் எக்ஸ்பிரஸ். இந்த வரலாறு நீண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது. 

கல்வியால் மாற்றம் கொண்டுவர முடியும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க இந்தக் கல்விச் சிந்தனை அரங்கு உதவும். 

இதைத் தமிழிலும் நடத்த வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு உள்ளது. தமிழகம் தனித்துவிடக் கூடாது. கல்வி உலகில் எண்ணற்ற மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இங்கேயும் என்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என விவாதிக்க வேண்டும். 

கிராமப்புறங்களில் உள்ள சாமானிய மாணவர்களுக்கும் இதுபோன்ற கல்விச் சிந்தனை அரங்கு சென்றடைய வேண்டும். நகரங்களில் படித்தவர்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் படித்தவர்களே சாதனையாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். 

ராமநாதபுரம் போன்ற பின்தங்கிய மாவட்டத்தின் ஓர் ஓரத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்து, அங்கேயே படித்து சர்வதேச அளவில் புகழை நாட்டியுள்ளார் அப்துல் கலாம். அவர் குடியரசுத் தலைவராகவும் இருந்து பெருமை சேர்த்தார். அப்படிப்பட்ட பல அப்துல் கலாம்கள் மற்றும் கஸ்தூரிரங்கன்கள் பலர் கிராமங்களில் இருக்கின்றனர். அவர்களுக்கும் இதுபோன்ற கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com