'நாம் இந்தியர்கள்தானா?'

'நாம் இந்தியர்கள்தானா?'


'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில், நாட்டில் ஹிந்தி திணிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் எம்.ஜி.தேவசகாயம், கல்வி ஆய்வாளர் மது கிஷ்வர், கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி, எழுத்தாளர் காஞ்சா அயிலய்யா ஆகியோர் பங்கேற்றனர். 

இதன் தொடக்கத்தில் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் எம்.ஜி.தேவசகாயம், 'ஹிந்தி திணிப்பு குறித்து கடந்த மாதம் நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், அதற்கு என்னால் பதிலளிக்க முடிந்திருக்கும். ஆனால் இப்போது, நான் ஒரு இந்தியரா, இல்லையா என்பது குறித்து பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை' என்று கூறினார். 

கல்வி ஆய்வாளர் மது கிஷ்வர் பேசுகையில், 'திடீரென்று எனக்கு,'நான் ஒரு இந்தியன்தானா?' என கேள்வி எழுகிறது. இந்தியாவில் உள்ள ஒருவருக்கு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பான் கார்டு என அனைத்தும் இருந்தாலும் அவர்கள் தவறான முறையிலே வழிநடத்துகிறார்கள். திடீரென்று அவர்களது ஆவணங்கள் செல்லாது என்று கூறுகிறார்கள். 

எந்தவொரு இந்தியனும் தான் ஒரு இந்தியர் அல்ல என்பதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். என்னைப் பொருத்தமட்டில் சி.ஏ.ஏ இந்திய மக்களை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை.' என்றார். 

தொடர்ந்து தேவசகாயம் பேசும்போது, 'தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் மட்டும் பிரச்னை அல்ல. என்.ஆர்.சியும்தான் பிரச்னை. என்.ஆர்.சியை தொடர்ந்து நாடு முழுவதும் விரிவுப்படுத்துவது கொடூரமானது. என்.ஆர்.சி இந்தியாவில் சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஏன் முழு நாட்டிற்கும் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படுகிறது? இது நாட்டு மக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையுமே ஏற்படுத்துகிறது. எனவே மத்திய அரசு சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றைத் திரும்ப பெற வேண்டும்' என்று கூறினார். 

கரூர் தொகுதி மக்களவை எம்.பி ஜோதிமணி, 'நான் தேச விரோதி என்று முத்திரை குத்தப்பட்டு பல முறை பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளேன். எனது மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், அடையாளம் தமிழ். எனது அடையாளத்தை நான் யாருக்கும், யாருக்காகவும் நிரூபிக்க மாட்டேன்.  என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ ஆகியவற்றை தமிழகத்திற்கு வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. சி.ஏ.ஏ குறித்து மட்டுமே பேசும் நபர்கள் பொய் கூறுகிறார்கள். அவர்கள் பாஜகவின் கொள்கைகள் மற்றும் அரசியலுடன் சேர்ந்து விளையாடுகிறார்கள். இப்போது மதம், அடுத்ததாக பிராந்தியம்,  மொழி என்று வருவார்கள். அவர்கள் இஸ்லாமியர்களை நிராகரிக்கும்போது, இஸ்லாமியர்களும் இந்தியர்கள் என்பதால் நாங்களும் போராடுகிறோம் என்ற கருத்துகளை முன்வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com