எதிர்ப்புணர்வுகளுக்கு இணையதளத்தை முடக்குவதுதான் அரசின் பதில்: சசி தரூர்

இணையதளத்தை முடக்குவதே எதிர்ப்புணர்வுகளுக்கு அரசு அளிக்கும் பதிலாக உள்ளது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புணர்வுகளுக்கு இணையதளத்தை முடக்குவதுதான் அரசின் பதில்: சசி தரூர்

இணையதளத்தை முடக்குவதே எதிர்ப்புணர்வுகளுக்கு அரசு அளிக்கும் பதிலாக உள்ளது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில், காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கலந்துகொண்டு பேசினார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், 'எதிர்ப்புணர்வுகள் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம். ஜனநாயகம் என்பது ஒரு நிகழ்வல்ல. அது ஒரு நடைமுறை. அரசிடம் மட்டுமே பதில்கள் இருக்க முடியாது. 5 ஆண்டுகளில் அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தமல்ல. எதிர்ப்புணர்வு என்பது அரசு செய்துகொண்டிருக்கும் அல்லது கூறிக்கொண்டிருக்கும் தவறை சுட்டிக்காட்டுவதாகும். அரசுடைய கருத்தின் மற்றொரு கோணம்தான் எதிர்ப்புணர்வு. ஜனநாயகம் அளிக்கும் கருத்துரிமையின் வெளிப்பாடுதான் எதிர்ப்புணர்வு. 

அமைச்சர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதபோது எதிர்ப்புணர்வு கிளம்புகிறது. பிரிட்டிஷை எதிர்த்தன்மூலம் கிடைத்த சுதந்திரம்கூட ஒரு எதிர்ப்புணர்வுதான். தற்போது அரசு முயற்சித்துக் கொண்டிருப்பது நமது மரபுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

எப்படிபட்ட எதிர்ப்புணர்வாக இருந்தாலும், அதில் மாணவர்களே முன்னிலையில் இருக்கின்றனர். எதிர்ப்புணர்வு என்பது எதிர்க்கட்சிகள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், விடுதிக் கட்டண உயர்வு என பல வகையில் வேறுபடும். மாணவர்கள் தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவது, என்னைப் போன்ற மக்களுக்கு இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையைத் தருகிறது.

மாணவர்கள் சுயமாக நிற்கின்றனர். அவர்களுக்கு அரசியல் தலைவர்களின் ஆதரவு தேவையில்லை. இந்த இடத்தில் எதிர்ப்புணர்வு என்பது குறிப்பாக தேசப்பற்றாகும். இதுபோன்ற எதிர்ப்புணர்வுகளில் அரசுக்கு ஒரு கசப்பான தொடர்பு இருக்கிறது. எதிர்ப்புணர்வுகளுக்கு அரசு அளிக்கும் பதில் என்பது இணையதளத்தை முடக்குவது. இது அவமதிக்கும் செயலாகும். இவையனைத்தும் வெட்கத்துக்குரியது. 

எதிர்ப்புணர்வுகள் வெறுமன பேச்சுகளாக மட்டுமல்லாமல் மாற்று வடிவங்களிலும் வெளிப்படும். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை பல ஆண்டுகளாக எதிர்த்து 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தது. எங்களுக்கு ஒற்றுமைதான் வேண்டும். ஆனால், அவர்களுடைய சிந்தனை நமது ஒற்றுமையை சீர்குலைக்கும்.     

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அறிமுகப்படுத்தினால், ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி அனைவரையும் கட்டாயப்படுத்துவீர்கள். ஒரு அமைச்சராலேயே தனது அடையாளத்தை நிரூபிக்க முடியாதபோது ஏழை மக்களால் எப்படி நிரூபிக்க முடியும்? பாஜக கொண்டுவந்துள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது, குற்றமற்ற காங்கிரஸ் கொண்டுவந்த தேசிய மக்கள்தொகை பதிவேடு அல்ல. அவசர நிலையையோ, சீக்கிய கலவரத்தையோ நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது எதிர்ப்பை நான் அப்போதும் பதிவு செய்தேன்.

மாநில அரசின் உதவி இல்லாமல் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை செயல்படுத்த முடியாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com