Enable Javscript for better performance
Subramanian Swamy on thinkedu | சுப்பிரமணியன் சுவாமி பேச்சு- Dinamani

சுடச்சுட

  

  அடுத்த இலக்கு கிருஷ்ண ஜன்ம பூமி மற்றும் காசி கோயில் : சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

  By DIN  |   Published on : 09th January 2020 06:18 PM  |   அ+அ அ-   |    |  

  DSC_0009

   

  அயோத்திக்கு அடுத்ததாக கிருஷ்ண ஜன்ம பூமி மற்றும் காசி கோயில்தான் எங்களுடைய இலக்கு என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

  'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் சென்னையில்  நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:

  "ராமர் கோயில் பிரச்னை என்பது முன்னதாக நிலப்பிரச்னையாக மட்டுமே இருந்தது. நான் இந்த விஷயத்தில் முழுமையாக ஈடுபட்ட பின்னரே அயோத்தி ராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவானது. நாட்டில் உள்ள பெரும்பாலான புனிதத் தலங்கள் குறித்துக் கேள்வி எழுப்ப முடியாது. அதேபோன்றுதான் அயோத்தி ராமர் கோவிலும். அயோத்திக்கு அடுத்ததாக கிருஷ்ண ஜன்ம பூமி மற்றும் காசி கோயில்தான் எங்களது இலக்கு." 

  மேலும் பேசிய அவர், "நமக்கு பொருளாதாரமே மிக முக்கியமானதாகும். நான் ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமல்ல; அரசியல்வாதியும்கூட. வாஜ்பாய் நிச்சயமாக என்னை ஓர் அச்சுறுத்தலாகவே கருதினார்.

  பாரதிய ஜனதா கட்சி ஒரு சிறந்த அரசியல் கட்சியாக வளர்ந்து நிற்கிறது. கட்சியில் அனைவருமே தீவிரமாக உழைப்பவர்கள். உண்மையாக உழைப்பவர்களைக் கட்சி ஊக்குவிக்கிறது. கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மோடி பிரதமராக வந்தது நாட்டிற்குத் தேவையானது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்துத்துவத்தை எதிர்ப்பதே பாஜகவின் வெற்றிக்கு காரணம்.  

  சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இல்லை என்றால் நான் காங்கிரஸில் இணைந்திருப்பேன். ராஜிவ் காந்தி எனது சிறந்த நண்பர். 

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருசில நேரங்களில் நண்பராகவும், ஒருசில நேரங்களில் எதிரியாகவும் இருந்துள்ளார். திரைத் துறையைச் சேர்ந்த அவர் அனைவரையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்று நினைத்தார். ஆனால், அவரால் என்னை விலைக்கு வாங்க முடியவில்லை. 

  சமூக ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருந்து வருகிறது. அத்தகைய சக்திவாய்ந்த ஊடகங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மோடி என்னை நிதி அமைச்சராக நியமிக்க நீங்கள் பரிந்துரை செய்யுங்கள். அவரிடம் இதை நான் நேரடியாகச் சென்று கேட்க முடியாது. ஏனென்றால் 1972ல் இருந்து எனக்கு அவரைத் தெரியும். அவருக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். 

  அதேபோன்று பொருளாதாரம் என்பது ஒரு விசித்திரமான அறிவியல். அதனை ஒரு வரியில் விளக்க முடியாது. பிரதமர் மோடிக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை. பொருளாதாரம் என்பது மிகப்பெரிய பாடம். சாதரணமாக ஒரு பட்டப்படிப்பு என்று நினைத்துவிட முடியாது. பொருளாதாரம் சீர்குலைந்தால் வரிசையாக ஒவ்வொரு துறையையும் அடுத்தடுத்து பாதிக்கும். 

  சமத்துவத்திற்கான உரிமையை எடுத்துரைக்கும் சட்டப்பிரிவு 14-ன்படி தாழ்த்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு கோரும்போது, பிராமணர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் இடஒதுக்கீடு கோரலாம். ஆனால், எனக்கு இடஒதுக்கீடு தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நாங்கள் சமமானவர்கள் அல்ல. சமத்துவ உரிமை என்பது சமமற்றவர்களுக்காகவே உள்ளது. 

  நான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த மசோதாவுக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மதச்சார்பற்ற கொள்கைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தானில் இருந்து ஒரு முஸ்லிமை இந்தியா வருமாறு கட்டாயப்படுத்த முடியாது.

  இந்தியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு கிறிஸ்டியன் மிஷனரிகள் நிதியளித்துள்ளனர். பயங்கரவாத குழுக்கள் பலவும் அதனுடன் தொடர்பில் உள்ளன" என்று தெரிவித்தார் சுவாமி.  

  TAGS
  Thinkedu
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai