‘ஹிந்தியை அடிப்படையாகக் கொண்டு நீட் கேள்வித்தாள்’: அமைச்சர் பொன்முடி பேச்சு

ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் கேள்வித்தாள் தயாரிக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்.
‘ஹிந்தியை அடிப்படையாகக் கொண்டு நீட் கேள்வித்தாள்’: அமைச்சர் பொன்முடி பேச்சு

ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் கேள்வித்தாள் தயாரிக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

இந்தியாவிற்கு நீட் தேவையில்லை என்ற தலைப்பில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:

"நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். அதை அவர் திருப்பி அனுப்பியதால், மீண்டும் மசோதா இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படியே மசோதா நிறைவேற்றப்பட்டது.

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. மொழி. கலாச்சாரம், பண்பாடு வேறுபாடுள்ள நாட்டில் அதற்கேற்ப கல்வி முறை அமைந்திருக்க வேண்டும்.

நீட் தேர்வின் கேள்வித்தாள்களை பொருத்தவரை, சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் இருந்தே பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால், தமிழ் மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நீட் தேர்வு வந்த பிறகு பல பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை நடத்துவதை குறைத்துவிட்டனர். ஏனெனில், நீட் தேர்வில் அந்த பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்பதில்லை.

மாநில பாடத்திட்டத்தில் பயின்று 97 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற கர்நாடகத்தை சேர்ந்த மாணவருக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால், உக்ரைன் போரில் பலியானதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை தாண்டி நீட் பயிற்சி மையங்களில் லட்சக் கணக்கில் பணத்தை செலவழித்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மாநில பாடத்திட்டத்தை தாண்டி ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாநில உரிமையை பாதுகாக்க நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்றைய முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கு நீட்டில் இருந்து விலக்கு பெற்றுத் தந்தார். தற்போது பெரும்பாலான மாநிலங்கள் நீட்டிற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் அதிகமானோர் தமிழகத்தைச் சேர்ந்த மாநில பாடத்திட்டத்தில் படித்து மருத்துவர் ஆனவர்கள் தான். அவர்களின் தரம் குறைவாகவா இருக்கிறது?

ஒரு மாணவர் 12 வருடம் படித்த பாடத்திட்டத்தை 3 மணிநேர நீட் தேர்வில் எப்படி முடிவெடுப்பது. சமூக நீதிக்கும், மனித நீதிக்கும் எதிராக உள்ள நீட்டை தான் எதிர்க்கிறோம்.

2016, 2017ஆம் ஆண்டுகளில் நீட் தேர்வு இல்லாத போது மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,544 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். அந்த காலகட்டங்களில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 35 பேர் மட்டுமே தேர்வானார்கள்.

தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் 12.14 சதவிகிதம் பேர் 2016, 2017ஆம் ஆண்டுகளில் மருத்துவ படிப்புகளுக்கு தேர்வானார்கள். ஆனால், நீட் தேர்வு வந்தபிறகு 1.7 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வாகினர்.

நீட் குளறுபடி, மொழி ஆதிக்கத்தால் தமிழ்வழி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச பாடத்திட்டத்தை வழங்குகிறோம் எனக் கூறி, மாநிலத்தின் கல்வி உரிமையை பறிக்கின்றனர்.

நீட்டிற்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நீட்டிற்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்துள்ளனர்" என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com