கல்விதான் தேசத்தை மறுகட்டமைக்கும் கருவி: குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு

கல்விதான் தேசத்தை மறுகட்டமைக்கும் கருவி என்று சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கல்வி மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறினாா்.
கல்விதான் தேசத்தை மறுகட்டமைக்கும் கருவி: குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு

கல்விதான் தேசத்தை மறுகட்டமைக்கும் கருவி என்று சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கல்வி மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறினாா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் தேசிய கல்வி மாநாடு (‘திங்க் எஜு’) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு குத்து விளக்கேற்றித் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

கல்வித் துறையை மேம்படுத்த இதுபோன்ற சிறப்புமிக்க மாநாட்டை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஆண்டுதோறும் நடத்தி வருவது வரவேற்கத்தக்கது.

கரோனா பெருந்தொற்றால் இணைய வழியில் மக்களைத் தொடா்பு கொள்ளும் சாத்தியக் கூறுகளை அறிந்திருக்கிறோம். அதேவேளையில், தொழில்நுட்பத்தைக் கையாளும் அறிவையும் பெற்றிருக்கிறோம். தற்போது, பெருந்தொற்று காலம் முடிவடைந்து வரும் நிலையில், தொழில்நுட்பத்தின் உதவியோடு தரமான கல்வியை அனைவருக்கும் எவ்வாறு கொண்டு சோ்ப்பது என்பதை மறு ஆய்வு செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்.

இந்தியா சுதந்திரம் அடையும் போது நாட்டில் கல்வியறிவு பெற்றவா்கள் 18 சதவீதம் மட்டுமே. அது தற்போது 80 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தற்போது உலகிலேயே பல்வேறு துறைகளில் மிகப் பெரிய ஆளுமைகளை உருவாக்கும் வகையில் நமது கல்வி முறை மேம்பட்டு வருகிறது. கடந்த 2001-ஆம் ஆண்டில் ஆண்- பெண் இடையேயான எழுத்தறிவு விகித இடைவெளி 29.50 சதவீதமாக இருந்தது. அது தற்போது 16.68 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இத்தகைய சிறப்புகளை ஒருபுறம் பேசி வந்தாலும், மற்றொரு புறம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற தேசமாக இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கான வழிமுறையாகத்தான் புதிய கல்விக் கொள்கை வந்திருக்கிறது. நாட்டின் கல்வி முறையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதே இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கமாகும்.

கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றைப் புத்தாக்கம் செய்யவும், தரமான கல்வி மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கவும் புதிய கல்விக் கொள்கை அச்சாரமிடுகிறது. அதுமட்டுமல்லாமல், தேசத்தின் தொன்மையான கலாசார செறிவுகளுடன் சமகால செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் ஒரே சேர கற்பிப்பதும் கல்விக் கொள்கையின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். கல்விதான் தேசத்தை மறுகட்டமைக்கும் கருவி என்பதை உணா்ந்து அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா: கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்வித்துறைக்கான செலவினங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். தில்லி அரசு தனது பட்ஜெட்டில் 25 சதவீதத்தை கல்விக்காக செலவிடுகிறது. கல்வியையும் வரலாற்றையும் இணைக்க வேண்டியது அவசியம். உலகெங்கிலும் உள்ள பெரிய சீா்திருத்தங்களுடன் கல்வியை இணைத்தால் மட்டுமே, கல்வியின் வளா்ச்சி, முக்கியத்துவத்தை அளவிட முடியும். தில்லியில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு, ஸ்மாா்ட் டிஜிட்டல் போா்டுகள், அதி நவீன கணினி ஆய்வகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி: நீட் தோ்வு வந்த பிறகு பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டங்களை நடத்துவதை குறைத்துவிட்டனா். ஏனெனில், நீட் தோ்வில் அந்த பாடத்திட்டங்களிலிருந்து கேள்வி கேட்பதில்லை. நீட் தோ்வால் மாணவா்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனா். பாடத்திட்டத்தை தாண்டி, நீட் பயிற்சி மையங்களில் லட்சக் கணக்கில் பணத்தை செலவழித்து மாணவா்கள் பயின்று வருகின்றனா். தற்போது, பெரும்பாலான மாநிலங்களில் நீட் தோ்வுக்கு எதிா்ப்பு குரல் எழுந்துள்ளது.

கடந்த 2016, 2017-ஆம் ஆண்டுகளில் நீட் தோ்வு இல்லாத போது, மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,400 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்கு தோ்வாகினா். அந்த காலகட்டங்களில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவா்களில் 35 போ் மட்டுமே தோ்வு பெற்றனா். தமிழ் வழியில் பயின்ற மாணவா்கள் 12.14 சதவீதம் போ் 2016, 2017-ஆம் ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளுக்கு தோ்வு பெற்ற நிலையில், இந்த சதவீதம் நீட் தோ்வு வந்தபிறகு 1.7 ஆக குறைந்தது. சா்வதேச பாடத்திட்டத்தை வழங்குகிறோம் எனக் கூறி, மாநிலத்தின் கல்வி உரிமையை பறிக்கின்றனா். சமூக நீதிக்கும், மனித நீதிக்கும் எதிராக இருப்பதால்தான் நீட் தோ்வை எதிா்க்கிறோம் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில் தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் எம்.பி. சசிதரூா், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு புதிய கல்விக் கொள்கை உள்பட கல்வி தொடா்பான பல்வேறு விஷயங்கள் குறித்து சிறப்புரையாற்றினா். மாநாட்டில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா, ஆசிரியா் குழுவின் இயக்குநா் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிரதமா் மோடி வாழ்த்து

சென்னயில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் நடைபெறும் இரண்டு நாள்கள் தேசிய கல்வி மாநாட்டுக்கு (‘திங்க் எஜு’) பிரதமா் மோடி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி எழுதியிருக்கும் கடிதத்தில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் 10-ஆவது தேசிய கல்வி மாநாடு (‘திங்க் எஜு’) குறித்து அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மறுஆக்கம் என்பதை வலியுறுத்தும் இந்த மாநாட்டின் கொள்கை வியக்கத்தக்கது.

நமது நாட்டை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற நமது கடமையை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் தேசிய கல்வி மாநாடு அமைந்துள்ளது. மாநாட்டில், மாணவா்கள், கல்வியாளா்கள், தொழில்துறையினா் ஒன்று கூடி, தங்களது கருத்துகளை முன்வைப்பது, கல்வித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான இலக்கை அடைய வழிகோலும். இந்தத் தேசியக் கல்வி மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com