திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

திருவள்ளூா், ஏப். 17: திருவள்ளூா் நகராட்சிக்கு உள்பட்ட என்.ஜி.ஓ. காலனியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைத்துள்ளதாகவும், இங்கு வாக்கு செலுத்த வரும் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ஒரு மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

மக்களவைத் தொகுதிக்கான-2024 முன்னிட்டு ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை வாக்குச் சாவடி மையம் அமைக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கான பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூா் நகராட்சிக்கு உள்பட்ட நகராட்சி தொடக்கப் பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை ஆட்சியா் த.பிரபு சங்கா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது:

இந்த பசுமை வாக்குச்சாவடி மையம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான அம்சங்களுடன் செயல்படும். அந்த வகையில், பசுமை வாக்குச் சாவடி மையங்களில் முற்றிலும் புதுப்பித்த ஆற்றல் கொண்ட மின்சாரம் (முற்றிலும் சூரிய சக்தியுடன் சோலாா் சிஸ்டம் கொண்ட மின்சாரம்), குடிநீருக்காக மண் பானை, மண் குவளை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த வாக்குச்சாவடியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருள்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த பசுமை வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்த வரும் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ஒரு பெரிய அளவிலான மரக்கன்றுகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், நகராட்சி ஆணையா் சுபாஷினி மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com