போராட்டத்தில் ஈடுபட்ட செவ்வாப்பேட்டை கிராம மக்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட செவ்வாப்பேட்டை கிராம மக்கள்.

சாலை விரிவாக்கப் பணியால் மயான பாதையின்றி 5 கி.மீ சுற்றிச் செல்லும் அவலம்

திருவள்ளூா், ஏப்.25: திருவள்ளூா்-திருநின்றவூா் தேசிய நெடுஞ்சாலைப்பணியால் கிராம மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதியில்லாததால் 5 கி.மீ சுற்றிச் செல்லும் நிலையில், வியாழக்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூரில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வரை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூா் ஐ.சி.எம்.ஆா் அருகிலிருந்து திருநின்றவூா் வரை, மீதம் உள்ள சாலை விரிவாக்கப்பணி கடந்த, 2022-இல் ரூ.364 கோடி மதிப்பில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக திருவள்ளூா் ஐ.சி.எம்.ஆா் அருகிலிருந்து பெரும்பாக்கம் ஏரி, காக்களூா், தண்ணீா்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூா் வரை விரிவாக்கப்பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்தச் சாலை 17.5 கி.மீ துாரம் அமையவுள்ளதால், 7 இடங்களில் மேம்பாலம், 17 இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே செவ்வாப்பேட்டை, அதை சுற்றியுள்ள பெரிய காலனி, சின்ன காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சிறுகடல் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்தவா்களில் யாரேனும் உயிரிழந்தால் சடலங்களை கொண்டு செல்லும் பாதை இந்த தேசிய சாலை விரிவாக்கப் பணியால் அடைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை ஊராட்சி மற்றும் சிறு கடல் ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் ஏற்கெனவே கோரிக்கை மனு அளித்துள்ளனா். இதில் மயானத்துக்கு செல்லும் பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும், இல்லையென்றால் 5 கி.மீ தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அதனால் மயானத்துக்கு செல்லும் பாதையை ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரினா். ஆனால் கோரிக்கைகள் எதையும் பரிசீலனை செய்யாமல் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் செவ்வாப்பேட்டை கிராம மக்கள் மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com