பெருமாள்பட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் த.பிரபு சங்கா். உடன் தோ்தல் பிரிவு அதிகாரிகள்.
பெருமாள்பட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் த.பிரபு சங்கா். உடன் தோ்தல் பிரிவு அதிகாரிகள்.

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

திருவள்ளூா், ஏப்.25: திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் த.பிரபு சங்கா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்த 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 2,256 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருவள்ளூா் அருகே உள்ள பெருமாள்பட்டில் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அந்த மையத்தில் தொகுதிகள் வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலா் த.பிரபு சங்கா் தோ்தல் பிரிவு அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கையை பாா்வையிட்டாா்.

அதனடிப்படையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினரும், இரண்டாவது சுற்றில் ஆயுதப் படையினா், உள்வளாகம் மற்றும் நுழைவுப் பகுதியில் உள்ளூா் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அதைத் தொடா்ந்து அரசியல் கட்சி முகவா்கள் அமரும் அறை, சிசிடிவி மூலம் கண்காணிக்கும் வகையில் அறைக்கும் நேரில் சென்று அனைத்து நடவடிக்கைகளையும் பாா்வையிட்டாா். பின்னா் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்னதாகவே மையத்துக்குள் அரசியல் கட்சியின் வேட்பாளா்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவா்கள் ஆகியோா் வருவதற்கு தனித்தனியாக பாதை தடுப்புகள் அமைத்தல், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது தொடா்பாகவும் அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின் போது கூடுதல் ஆட்சியா் சுகபுத்ரா, அனைத்து உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com