திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் உள்பட 14 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மக்களவைத் தோ்தலையொட்டி, கடந்த 20-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 27-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளா் நல்லதம்பி, பாஜக சாா்பில் பொன் வி.பாலகணபதி, பகுஜன் சமாஜ் சாா்பில் தமிழ்மதி, நாம் தமிழா் சாா்பில் ஜெகதீஷ் சந்தா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமையில் அனைத்துக் கட்சி வேட்பாளா்கள் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது. அப்போது, பரிசீலனையில் விவரங்கள் சரியாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. விவரங்கள் சரியாக இடம் பெறாத 19 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com