Enable Javscript for better performance
அத்தியாயம் 2 - காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அத்தியாயம் 2 - காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்

    By த. பார்த்திபன்  |   Published On : 11th September 2015 10:00 AM  |   Last Updated : 09th September 2015 05:29 PM  |  அ+அ அ-  |  

    ‘காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்’ என்ற இப்பகுதியில், 1. காரவேலன் கல்வெட்டும் ஆவா அரசர்களும் பிதும்டா பட்டினமும், 2. காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும், மற்றும் 3. காரவேலன் கல்வெட்டும் தமிழகத் தொன்மைச் சான்றுகளும் என மூன்று செய்திகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனி அத்தியாயங்களாக வெளியிடப்படுகின்றன.

    காரவேலன் கல்வெட்டும் ஆவா அரசர்களும் பிதும்டா பட்டினமும்

    கலிங்க நாட்டு வேந்தன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு, இந்திய வரலாற்றுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு வெகுமதியானது. மு.பொ.ஆ.165-ல் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டு, பிராமி எழுத்துகளில், பாலி மொழியில், அரசின் கட்டளைத் தொனியில் அமைந்தது. (பாலி மொழி, பிராகிருத மொழித்தொகுதிகளில் ஒன்று என்பதால், இக்கல்வெட்டு பிராகிருத மொழியில் உள்ளது என்பர்). இக்கல்வெட்டின் சில பகுதிகள், இயற்கைச் செயல்பாடுகள் உள்ளிட்ட சில காரணங்களால் அழிந்துள்ளன. சில பகுதிகள் அரை குறையாக உள்ளன. இதன் காரணமாக, இதில் சில சொற்களும், எழுத்து வடிவமும் ஐயத்துக்கு இடமாகியுள்ளன. தவிரவும், இதில் குறிப்பிடப்படும் இடப்பெயர்கள், நபர்களின் பெயர்கள், காலம் யாவும் ஊகமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் சில செய்திகள், விருப்பு வெறுப்பான அல்லது அனுமானமான படித்தறிதலுக்கு உட்பட்டதாக உள்ளது.

    rock_2.jpg 

    இதன் செய்திகளை உறுதிப்படுத்திக்கொள்ளவோ, ஒப்பீடு செய்யவோ, ஒத்திசைவான இணைச் சான்றுகள் கூடுதலாக கலிங்கத்திலிருந்தோ, கலிங்கத்துக்கு வெளியே படைத்துணையுடன் காரவேலன் வெற்றிகொண்டதாகப் பிரஸ்தாபிக்கும் பகுதிகளிலிருந்தோ கல்வெட்டு, பட்டயம், இலக்கியம், தொன்மம் என எவ்வடிவத்திலும் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் மட்டும் இதன் அங்கீகாரத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது. தனக்குள் கொண்டிருக்கும் சிக்கல்கள் எல்லாவற்றையும் மீறி, இது அலைஅலையாக வெளிப்படுத்தும் அக்காலத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு விவரங்களின் வசீகரத்தால், இந்திய வரலாற்றுக்குப் புறக்கணிக்க முடியாத ஒரு தொல்பொருள் சான்றாக விளங்குகிறது.

    அசோகனின் கல்வெட்டைப் படித்தறியும் முயற்சி முகலாயர் காலத்தில் துவங்கியதுபோல், அத்துனை பழமையான முயற்சி, காரவேலனின் இந்த ஒரே ஒரு கல்வெட்டுக்கு இல்லை. எனினும், பொ.ஆ.1825-ல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்நாள் வரையிலும், இதன் மீதான மாறுபட்ட படித்தறிதல்கள், பல்வேறு தரப்புகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 1837-ல், கிட்டோ (kittoe) அவர்கள் தயாரித்த கண்புல நகலை பிரின்செப் (Prinsep) அவர்கள் வெளியிட்ட காலம் முதல் தொடங்கும் படித்தறிதல்களில், 1929-30-களில் பாரிஸ்டர் கே.பி.ஜேயசுவால் மற்றும் பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி ஆகியோரால் செய்யப்பட்ட படித்தறிதல் செம்மையானதாகக் கருதப்படுகிறது. சதானந்த அகர்வால் (2000) மற்றும் சசிகாந்த் (2000) ஆகியோரின் படித்தறிதல்கள், கவனிக்கத்தக்க சில பகுதிகளைப் புதிய அடையாளங்களுடன் முன்னிறுத்துகின்றன.

    மேலும், வெளிவந்துள்ளவற்றின் முழுமையில் நம்பகத்தன்மையற்ற நிலையில் அல்லது பன்முகத்தன்மையைத் தேடியும், பெருமிதத்தைக் கொண்டாடியும் தொடர்ந்து நடந்துவரும் மறுபடித்தறியும் முயற்சிகள், இதுதான் முற்றான வடிவம் என்று ஒன்றை முன்னிறுத்த முடியாத நிலை உள்ளது.

    காலத்தால் சிதையுற்றிருக்கும் இந்த அத்திக்கும்பா கல்வெட்டின் சில பகுதிகள் முழுவதும் அழிந்துவிட்டன. அதில் பெரும்பகுதியையும் தோராயமாகவே ஊகித்து அறியவேண்டி இருக்கிறது. மனவெழுச்சியைத் தூண்டுகின்ற இச்சான்றைப் பற்றிய பல ஊகங்கள் எழுந்துள்ளன. வாசகத்தை அரைகுறையாக ஆய்வதும், மிகவும் சிதைவுற்றிருக்கும் பகுதிகளிலுள்ள செல்லரித்துப்போன தெளிவற்ற எழுத்துகளை இனம் புரிந்துகொண்டுவிட்டதாக எண்ணியும், பொறுப்பற்ற பல கருத்துகள் எழுந்துள்ளன” என்று இக்கல்வெட்டுப் பற்றியும், படித்தறிதல் குறித்தும், இன்றைக்கு 96 ஆண்டுகளுக்கு முன் வின்சென்ட் ஏ.ஸ்மித் தெரிவித்த வார்த்தைகளில் பொதிந்திருக்கும் சுட்டிக்காட்டல், இன்றுவரையும் பொருத்தமுடையதாக உள்ளது. (வின்சென்ட் ஏ.ஸ்மித்.ப.278).

    rock_4.jpg 

    இக்கல்வெட்டு, ஒரு மெய்க்கீர்த்திபோல் காரவேலனின் செயல்களைச் சிறப்பித்துக் கூறுவதாலும், பதின்மூன்று ஆட்சியாண்டுகளின் நிகழ்ச்சிகளைச் சுருக்கிக் கூறுவதாலும், இதன் எல்லா செய்திகளையும் உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தும் ஆய்வாளர்களிடமும், வரலாற்று ஆசிரியர்களிடமும், தொல்லியல் அறிஞர்களிடமும் உண்டு.

    மொத்தம் 17 வரிகள் கொண்ட இக்கல்வெட்டின் 11-ம் வரியும், 13-ம் வரியும் தமிழ்நாட்டுச் செய்திகளைக் கொண்டுள்ளது. இதில் பெரும் விவாதத்துக்கும், மாறுபட்ட படித்தறிதல்களுக்கும் உட்பட்ட பகுதியாக இருப்பது 11-ம் வரியே. இவ்வரி, இவனது 11-ம் ஆட்சியாண்டின் சாதனையின் பகுதிகளாக இருப்பது. அதன் குறிப்பிடத்தக்க இரண்டு படித்தறிதல்களை, இங்கு ஆங்கிலம் வழி அறிவோம்.

    1. . . . . . And the Market-town (?) Pithumda founded by the Ava King he ploughs down with a plough of asses; and (he) thoroughly breaks up the confederacy of the T(r)amira (Dramira) countries of one hundred and thirteen years, which has been a source of danger for his country (Janapada) . . . .. (K.P. Jayaswal & R.D.Banaerji, Epigraphia Indica, Vol.XX, 1929-30, p.88).

    2. And in the eleventh year (His Majesty) Securing jewals and precious stones from the retreating (enemies) (His majesty) caused to be cultivated Pithunda founded by former Kings of Kalinga, with plough drawn by asses. Also (His Majesty) shattered the territorial confederacy of Tamil states having populous villages that was existing since thirteen hundred years. (Sadananda Agarwal, from www.Jatland Wiki).

    script_1.jpg 

    பிதும்டா - பித்துண்டா எது?

    கல்வெட்டில் குறிப்பிடப்படும் ‘பிதும்டா’ என்ற நகர் பற்றிய குறிப்பு, விவாதத்துக்கு உள்ளாகும் பகுதிகளில் ஒன்று. சதானந்த அகர்வாலின் படித்தறிதல் தவிர, பிற படித்தறிதல்கள், பிதும்டா ஒரு வணிக நகரம்(?) என்றும், அது ‘ஆவா’ அரசர்களால் அமைக்கப்பட்டது என்றும், அதனை காரவேலன் அழித்து, கழுதைகளால் உழுதுப் பயனற்ற தானியங்களை விதைத்துப் பாழ்படுத்தினான் என்றும் சொல்கின்றன. இதிலிருந்து வேறுபடும் சதானந்தரின் படித்தறிதல், ‘பிதும்டா’ நகரம் முந்தைய கலிங்க அரசர்களால் அமைக்கப்பட்டது என்றும், அதனை அழித்துக் கழுதைகளால் உழுது பயனற்ற தானியங்களை விதைத்துப் பாழ்படுத்தினான் என்றும் தெரிவிக்கிறது.

    ஆவா அரசர் யாவர்?

    ஆவா அரசன் யார், எப்பகுதியின் அரசன் என்ற குறிப்பு கல்வெட்டில் இல்லை. இதுபோலவே, பிதும்டா நகர் கலிங்கத்துக்கு எப்பகுதியில் அமைந்திருந்தது என்ற தகவலும் இல்லை. இக்குறிப்புகள் இல்லாமை, காரவேலன் காலத்தில் ஆவா அரசர்களும், அவர்களது பிதும்டா நகரும் பெயர்க்குறிப்பு ஒன்றாலேயே சந்தேகமின்றி யாவரும் அவற்றை அறியும் நிலையில் இருந்தன என்பதை வலிமையாகச் சுட்டுகின்றது. அதேசமயத்தில் இக்கல்வெட்டு, தேவைப்படும் திசைக் குறிப்புகளையும், அண்டை, சுற்றங்கள் குறித்தும் பல இடங்களில் குறிப்பிடுவதைக் கொண்டு இதனை உறுதிசெய்துகொள்ளலாம். உதாரணமாக, யவனராஜா… மேற்கு மாநிலங்களை நேக்கி… கன்ன பெண்ணை ஆற்றங்கரை மூசிக நகரம்… நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாய்...

    தமிழகப் படித்தறிதல்களின் கண்டுபிடிப்புகள்!

    ஆனால், தமிழகப் படித்தறிதல்கள் (உண்மையில் இவற்றை படித்தறிதல்கள் என்று குறிப்பதைவிட பிறர் படித்தறிதல் மற்றும் மொழிபெயர்ப்புகளின் மீதான கருத்துருக்கள் என்பதே சரியானது என்று தோன்றுகிறது), ‘ஆவா’ என்பது ‘ஆதன்’ என்ற அரசனைக் குறிப்பதாகவும், அவன் சேரமானில் ஒருவன் என்றும், சேரமான் அந்துவனைக் குறிப்பது என்றும், வேளிரில் ஒருவன் என்றும், பொதினியை (பழனி) ஆண்ட ஆவியர் அரசரைக் குறிப்பது என்றும், பிதும்டா என்பது கரூரைக் குறிக்கும் என்றும், அது திருச்சியை அடுத்த கரூர்தான் என்றும், அது கொடுமணத்தின் வளமையில் சிறப்படைந்தது என்றும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளன.

    கே.பி.ஜேயசுவால் மற்றும் ஆர்.டி.பானர்ஜி இருவரும், பிதும்டா நகரம் தாலமி குறிப்பிடும் பித்துண்டா நகரமாக இருக்கலாம் என்றும், ஆவா அரசர் குலம் பாகவத புராணத்தில் குறிப்பிடப்படும் குலம் என்றும் சுட்டிக்காட்டுவர். (இவ்விருவரும், பின்னர் நாம் விவாதிக்க இருக்கும் கபிலரின் புறநானூற்றுப் பாடலையும், தமிழக வேளிர் வரலாற்றையும் அறிந்திலர்). தாலமி, கிருஷ்ணா நதிப் படுகையில் வாழ்ந்தவர்களாகக் காட்டும் Arvarnoi மக்களை, அவார்ணி அல்லது அருவார்ணி என்று அழைக்கப்பட்டதாக எடுத்துக்காட்டும் அவர்கள், தாலமி குறிப்பிடும் பித்துண்டா நகரம் அன்று கோரமண்டலக் கடற்கரையின் மேல் பகுதியில் அமைந்திருந்த கடற்கரைப்பட்டினம் என்ற குறிப்பையும் தருகின்றனர்.

    இக்குறிப்புகள் தேவையற்ற திசைத்திருப்பலைக் கொண்டிருப்பது; புறக்கணிக்கத்தக்கது என கூறிவிடுவது, அவ்வளவு எளிதாக நிகழ்த்தக்கூடியதல்ல. உண்மையில், இவை நம்முன் மண்டிக்கிடக்கும் தொன்மைச் சான்றுகளைப் புரிந்துகொள்வதற்கும், பரீசிலனை செய்வதற்கும், மீளாய்வு செய்வதற்கும் வாய்ப்புகள் வழங்குபவை.

    தமிழ் அரசுகளைப் பற்றி வடஇந்தியப் புரிதல்

    தமிழ் அரசுகளைப் பற்றி முதலில் தெரிவிக்கும் அசோகனின் கல்வெட்டின் மொழியில் இருந்து, அன்றைய தமிழ் அரசுகளைப் பற்றிய வடஇந்தியப் புரிதலை உள்வாங்கிக்கொண்டுதான், வடஇந்திய கல்வெட்டுகளை நாம் அணுக வேண்டும். அந்த அணுகுமுறையே சரியான முடிவைத் தரும். ஏனென்றால், பிற்காலத்தில் தேவைப்படும் ஊகமோ, ஒப்பு நோக்கமோ, காலப்போக்கில் உருவாகும் சிதைவுகளில் இருந்து மீட்க கட்டமைக்கப்பட்ட கருத்து வடிவமோ, தேவையற்ற சமகாலத்தின் எல்லா அரசியல் கூறுகளையும் உள்வாங்கிக்கொண்ட பேரரசனின் வார்த்தைகள் அவை.

    kalvetu_3.jpg 

    தமிழ் அரசுகள் குறித்த அசோகனின் முக்கியமான புரிதல், அவை ஆளும் குடிகளைக் குறிப்பவை என்பதே. அந்த ஆளும் குடியினர், பல குடியினரை, இனக் குழுக்களை ஆள்பவர்களாக வளர்ந்திருந்தனர். அவர்கள் ஆளும் நிலப்பரப்பு, ஒரு பொது வரையறையைக் கொண்டிருந்தது. இவ்வாறான பல குடியினரையும், இனக் குழுக்களையும், வரையறுத்த நிலப்பரப்பையும் கொண்டு ஆட்சி புரிந்தவர்களில் நான்கு குடியினர் முதன்மையானவர்கள் சேர, சோழ, பாண்டிய, சதிய எனப்படும், வழக்கில் திரிந்த சேரர், சோழர், பாண்டியர், அதியர் என்போரே அவர்கள்.

    இந்த ஆளும் குடிகளால் அமைக்கப்பட்ட அரசுகள், அக்குடிக்கு மரபுரிமை கொண்டதே ஒழிய, தலைமை வழங்கப்பட்டவருக்கோ அல்லது அவரது வாரிசுகளுக்கோ மரபுரிமை ஆனதல்ல. அசோகர், தமிழ் அரசுகளின் குடிப்பெயரை மட்டும் குறித்தது அதனாலேயே. தன் காலத்தில் வாழ்ந்த ஆளும் குடியின் பெயரைக் குறிப்பிடும் அசோகன், தலைவன் / மன்னன் பெயரைத் தவிர்த்ததும் அதனாலேயே. உண்மையில், இப்புரிதல் மிக முக்கியமானது. இது சங்க இலக்கியத்தில் ஊடாடும் அரசியல் காட்சிகளுடன் மிகவும் நெருக்கமானது. நமது உரை ஆசிரியர்களின் புரிதலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

    வரலாற்றுப்போக்கில், வேந்தர் மரபின் கொள்கையாக இருக்கும் தந்தைக்குப் பின் தனையன் என்ற வாரிசுரிமை ஆட்சியைத் தேடிய, குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு நாட்டில் ஒரு மன்னனின் ஆட்சியை சங்ககாலம் நெடுகிலும் தேடிய எந்த ஆய்வுகளின் விடையில்லா நிலைக்கும், அறுபட்ட ஆட்சியர் உறவு நிலைகள், அல்லது உறவுமுறை நெடுங்கணக்கில் தொடர்பற்ற நிலையிலான பதிவுகள் மற்றும் குடிமரபு உரிமைகளின் வெளிப்பாட்டுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமையிடங்களின் காட்சிக்கும் இதுவே காரணம்.

    நாட்டின் தலைநகர் ஒன்றாக இருக்க, அங்கு ஆளும் குடியின் உறுப்பினரில் / வாரிசில் ஒருவன் ஆட்சி புரிய, நாட்டின் மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிற ஊர்களில் இருந்துகொண்டு, ஆளும் குடியின் பிற உறுப்பினர்கள் / வாரிசுகள் / சமயங்களில் சகோதரர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவ்வகை ஊர்களைத் துணைத் தலைநகரங்கள் என்று குறிப்பிடும் போக்கு நம்மிடை உள்ளது. உண்மையில், இவை நாட்டை நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட மாகாணங்களின் தலைமையிடங்களா என்று ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. (இதுகுறித்து வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆலோசிக்கலாம்).

    சங்க கால ஆட்சிமுறைகள்

    சங்க இலக்கியத்தில், அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய ஐந்து வகைப்பட்ட ஆட்சி முறைகளைக் காணமுடிகிறது. அவை - 1. இனக்குழு தலைமை ஆட்சி, 2. ஊர் அல்லது கிராமத் தலைமை ஆட்சி, 3. நகரத் தலைமை ஆட்சி, 4. குடித் தலைமை ஆட்சி, 5. வேந்தர் ஆட்சி.

    இனக்குழு தலைமை ஆட்சி உருவாக்காத புதிய ஆட்சிப் பண்பு ஒன்றை, இரண்டு முதல் நான்கு எண்ணிட்ட ஆட்சிகள் உருவாக்கின. அது, ‘வேள்கள்’ என்ற ‘வேளிர்’ ஆட்சிப் பண்பு. ஐந்தாம் ஆட்சி முறையான வேந்தர் ஆட்சி, வேளிர் ஆட்சி முறையில் இருந்து முதிர்ச்சி அடைந்தது. வேந்தர் ஆட்சியின் முக்கியப் பண்பு, வாரிசுரிமை ஆட்சி முறை. அப்பண்பு வேளிரிடம் தோன்றாதது.

    முதல் நான்கு ஆட்சிகளும், வேளிருக்கும் வேந்தருக்கும் கீழ்ப்பட்ட ஆட்சிகள் அல்ல. ஆட்சிப் படிநிலைகளைக் காட்டுபவையும் அல்ல. அவை பெரும்பாலும் தனியாட்சியை நடத்தியவை. வேளிர், வேந்தர் ஆட்சி எல்லை உருவாக்கத்தின் போதும், எல்லைப் பெருக்கத்தின்போதும், அவ்வகை சில ஆட்சிகள் தம் தனியாட்சியை இழக்கின்றன.

    முதல் நான்கு வகையிலான ஆட்சி முறைகளும், சங்க காலம் நெடுகிலும் காணப்படுகின்றன. வேந்தர் ஆட்சி, சங்க காலத்தில் மத்தியில் உருவாகத் துவங்கி, சங்க காலத்தின் இறுதிகளில் வீழ்ச்சியடைவது. உலக வரைபடத்தில், வடஇந்தியா உட்பட அறிய வரும் வேந்தர் ஆட்சியின் முற்றான பண்புகள், தமிழ் மண்ணில் இருந்து உருவான வேந்தர் மரபில் கடைப்பிடிக்கப்படவில்லை அல்லது தோன்றவே இல்லை. ஏனெனில், குடிமரபு உரிமையின் தாக்கம் மிக வலிமையாக இருந்ததுதான். சங்க காலத்துக்குப் பிறகான, பல்லவர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் வேந்தர் ஆட்சிமுறையின் முற்றான குணங்கள் தமிழத்தில் தெரிகின்றன.

    உதாரணமாக –

    பதிற்றுப்பத்து பாடல்கள் (பதிகப் பாடல்கள் வழி), சேரரின் தந்தைக்குப் பின் தனையர் என்ற ஆட்சி உரிமையைக் காட்டினாலும், அவர்கள் நான்கு தலைமுறைக்குள் அடங்குவராவர். மேலும், அவர்கள் அந்துவன் இரும்பொறை மற்றும் உதியன் சேரலாதன் என இருகால்வழி வந்தவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது. குறைந்தது, 600 முதல் 750 ஆண்டுகள் வரையிலான காலப்பரப்பு கொண்ட சங்க காலத்தின் ஏறத்தாழ 120 முதல் 150 ஆண்டுகள் வரை மட்டுமே இந்தத் தலைமுறையினரின் ஆட்சியை நிரவமுடியும். சங்க இலக்கியம் வழி, வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 22 சேர மன்னர்களைப் பற்றி அறியமுடிகிறது. எனில், பதிற்றுப்பத்து குறிப்பிடாத பிற சேர அரசர்களிடையே உறவுமுறையைக் காண்பது இயலாத ஒன்றே. இதுபோலவே, அதியமான் நெடுமான் அஞ்சி மற்றும் அதியமான் பொகுட்டெழினி மட்டுமே தந்தை - தனையனாக அறிய முடிபவர்கள் ஆவர். சங்க இலக்கியம் குறிப்பிடும் பிற 15 அதியமான்களிடையே உறவு நிலை காணமுடியாது. இவ்விதியே, பாண்டியருக்கும் சோழருக்கும் பொருந்தும்.

    அசோகருக்குப் பின் (மு.பொ.ஆ. 273 - 236), அறுபது அண்டுகளில் கலிங்கப் பகுதிக்கு ஆட்சிக்கு வந்த காரவேலன் காலத்தில், தமிழகத்தில் ஆட்சி நிலை மாறியிருக்கவில்லை.

    எனில், காரவேலன் ஆவா எனக் குறிப்பிடுவது, தனியொரு ஆட்சியரை அதாவது மன்னன் பெயரை அல்ல என்பது தெளிவானது. காரவேலனிடம் இருந்தே, அகச்சான்றாக 13-ம் வரியைக் காட்டலாம். அங்கும், பாண்டிய அரசன் என்று குறித்துள்ளது, பொதுப்படையாக பாண்டியக் குடியைக் குறிப்பதாக உள்ளதே அன்றி, பாண்டிய மன்னன் ஒருவனின் இயற்பெயரையோ அல்லது சிறப்புப்பெயரையோ சுட்டுவதாக இல்லை.

    இப்பின்னணியில், தமிழ்ச் சேரர் என்ற குடிப் பெயர், எத்திரிபிலும் ஆவா என்று மாறியிருக்க முடியாது. எனில், காரவேலன் ஆவா என்று குறிப்பிடுவது, அருவாளர் என்ற சங்க இலக்கியம் குறிப்பிடும் இனக்குழுவினரே என்ற முடிவுக்கே நம்மை நகர்த்துகிறது.

    அருவாளரும், அருவாளர் நாடும்

    பண்டைத் தமிழக நாட்டுப் பகுதிகளில் அருவா நாடும், அருவா வடதலை நாடும், இந்த அருவாளர் நிறைந்து வாழ்ந்ததால், ஆட்சிப் புரிந்ததால் உருவான பெயர்களாக இருக்கின்றன. அருவாளர், தமிழ் இனக்குழுவினர். அருவாளர் என்பது தெலுங்குத் திரிபில் அரவர், அரவாடு என்று திரிந்ததுபோலும். தெலுங்கு மக்கள், தங்களுக்குத் தெற்கே வாழ்ந்த தமிழ் இனக்குழுவினரான அருவாளரை அரவாடு என அழைக்க, அரவாடு பெயர் பிற்காலத்தில் அவர்களிடையே தமிழர்களையும் தமிழ் மொழியும் அடையாளப்படுத்தும் பொதுப்பெயராகி உள்ளது.

    அருவா நாடும், அருவா வடதலை நாடும், வேங்கடம் முதல் குமரிமுனை வரையுள்ள நிலப்பகுதியில் தேட வேண்டிய நாட்டுப் பிரிவுகளே அன்றி, கிருஷ்ணா நதிப் படுகையில் அல்ல என்று விவாதம் எழுப்பலாம். விவாதத்துக்கு முன், தமிழக வடஎல்லை வேங்கடம் என்று பனம்பாரனாரை முன்னிட்டு நம்மிடையே நிலவி வரும் வரையறை மறுக்கும் ஆய்வுகளைக் கவனத்தில் கொள்ளலாம். (பார்க்க - மா.ராசமாணிக்கனாரின், ‘தமிழகத்தின் வடஎல்லை எது?’; த.பார்த்திபனின், ‘சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்’). அருவாளர் பற்றிய ஆய்வு, மு. ராகவையங்கார் (‘வேளிர் வரலாறு’), ரா. ராகவையங்கார் (‘தமிழக குறுநில வேந்தர்கள்’), மொ.அ. துரைஅரங்கசாமி (‘சங்ககாலச் சிறப்புப் பெயர்கள்’), மயிலை சீனி.வேங்கடசாமி (‘சமணமும் தமிழும்’) ஆகியோருடைய நூல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன).

    அருவாளர் பற்றி சங்க இலக்கியச் சான்றுகளையும், அருவாளர் பற்றி நம்முன் விரிக்கப்படுள்ள கருத்துருவங்களையும் நினைவுக்குக் கொண்டுவருவது, இக்கல்வெட்டில் தொடர்ந்து பயணப்படுவதற்கு அவசியமாகிறது.

    அருவாளர் குறித்த செய்திகள், சங்க இலக்கியத்தை அடுத்து நிகண்டுகள் வழியாகவும் நச்சினார்க்கினியரிடம் இருந்தும் கிடைக்கின்றன. கபிலரின் புறநானூறு 201 பாடலில், 8-12 வரிகளில்,

    “நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்

    செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை

    உவரா வீகைத் துவரை யாண்டு

    நாற்பத்து தொன்பது வழிமுறை வந்த

    வேளிருள் வேளே … … … …”

    என்று இருங்கோவேள் மரபின் தொன்மை குறித்துச் சொல்லப்படும் கூற்றான ‘நாற்பத்தொன்பது தலைமுறையாக வந்தவனே’ என்ற கருத்தையொட்டி, “பதினெண்குடி வேளிருடன் அருவாளாரும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி” என்று நச்சினார்க்கினியர் விளக்கமளிக்கிறார். இதனையொட்டி, அகத்தியர் மற்றும் வேளிரும் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அளவுக்கு, இந்நிகழ்ச்சியுடன் தொடர்புடையதாக நச்சினார்க்கினியர் குறிப்பிடும் அருவாளர் குறித்து மேற்கொள்ளப்படவில்லை. இருதரப்பும், ஒரு நிகழ்வின் அதாவது அகத்தியர், தென்னிந்தியாவில் வேளிரில் பதினெண் குடியினரையும் அருவாளரையும் குடியமர்த்திய நிகழ்வின் பகுதியாக இருப்பதால், இது கூடுதல் முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது. ‘காடு கெடுத்து நாடாக்கி’ என்ற விளக்கத்தை, தமிழ் நிலத்தில் முன்னரே நிலைபெற்றிருந்த வேளிர் மற்றும் பிற இனக்குழுக்கள் வாழ்ந்த இடங்கள் நீங்கிய பிற பகுதிகளில், காடுகளைத் திருத்தி நாடாக்கித்தான், அழைத்துவந்தவர்களைக் குடி அமர்த்தினார் என்று காணலாம்.

    சங்க இலக்கியம் குறிப்பிடும் வேளிர் என்போர் அனைவரும், இவ்வாறு வடக்கிலிருந்து குடி அமர்த்தப்பட்டவர்களே என்ற பார்வை, சங்க இலக்கியச் சான்றுகளுக்கும், தொல்லியல் சான்றுகளுக்குப் புறம்பானதாக இருக்கும்.

    அருவாளர் குறித்து கே.பி.ஜேயசுவால் மற்றும் ஆர்.டி.பானர்ஜி இருவரும், ஆவா (அருவாளர்) அரசர் குலம், பாகவத புராணத்தில் குறிப்பிடப்படும் குலம் என்று சுட்டிக்காட்டுவதும், இதனுடன் இணைத்துக் காண வேண்டிய ஒன்று. இருங்கோவேள் மரபினர், கண்ணனின் யாதவர் வழி வேளிராவர் என்பது நம்மிடையே வழக்குப்பட்டுள்ள கவனிக்கத்தக்க செய்தி. அருவாளர் குறித்துப் பாகவத புராணம் தெரிவிப்பதால், புராணங்கள் மூலம் மீட்கப்பட்ட வரலாறாக இச்செய்தி இருக்கலாம்.

    இச் செய்தி, நமக்கு இரண்டு முக்கியமான தகவல்களை வழங்குகிறது. வேளிர் என்ற குடிகளுள், பதினெண்மரைப் பற்றியது ஒன்று. இப்பதினெண்மரில், இருங்கோவேள் குடி ஒன்று என்பது தெளிவானது; பிற குடியினரை அடையாளம் கண்டுகொள்ள, இன்றுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. மற்றொன்று, இனக்குழுவாக இருந்த அருவாளர் பற்றியது. இது, வேளிர் பண்புகளிலிருந்து அருவாளர் வேறுபட்ட பண்பு கொண்டு, அதாவது இனக்குழு மரபில் வளர்ந்திருந்தவர்கள் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

    அருவாளர்கள், அகண்ட பெரிய நிலப்பரப்பைக் கொண்டவார்களாக விளங்கினர் என்பதை, அவர்கள் நாடு அருவா மற்றும் அருவா வடதலை என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது கொண்டு அறிய முடிகிறது. “சங்க காலத்தில், தமிழகத்தின் ஆறு நாட்டுப் பிரிவுகளில் அருவா நாடு ஒன்று என்று சேர, சோழ, பாண்டிய, துளு மற்றும் கொங்கு நாடுகளுடன் காட்டுவது” கவனிக்கத்தக்கது. (க. இலக்குமி நாராயணன், (கட்), (1988), ப.66).

    இன்றைய ஆந்திரம், நெல்லூர் மாவட்டம், கந்துகூர் வட்டத்தில் மாலகொண்டா என்ற மலையில், சமணர்களுக்கு அமைத்தளிக்கப்பட்ட குகை ஒன்று, ‘அருவாஹி(ள) குலத்து நந்த செட்டி மகன் சிறீவீரி செய்வித்த குகை’ என்ற பிராமி எழுத்துப் பொறிப்புடன் உள்ளது. (Annual Report of South Indian Epigraphy, 1938, No.531 of 1937-38). ‘அருவாஹி’ என்பது அருவாளரின் திரிபாகும். இக்கல்வெட்டு, நெல்லூர் பகுதிகளில் அருவாளர்கள் செல்வாக்குடன் இருந்ததைக் காட்டுகிறது.

    அருவா வடதலைப் பிரிவின் வடகிழக்கு எல்லை, கலிங்க நாட்டுக்கு அருகாமையில் இருந்தது எனலாம். அப்பகுதியின் ஒரு நகராக பிதும்டா என்ற பித்துண்டா விளங்கியது எனலாம். அது, இன்றைய நிலையில், ஆந்திரத்தின் விசாகப்பட்டனத்துக்கும் ஒடிசா கடற்கரைக்கும் இடையே தேட வேண்டிய பட்டினம் என்று தெளியலாம்.

    சதானந்த அகர்வாலின் படித்தறிதல்

    சதானந்த அகர்வாலின் படித்தறிதலின்படி, கலிங்க அரசர்களால் அமைக்கப்பட்ட பிதும்டா நகரம், கலிங்கத்தின் மற்றொரு அரசனான காரவேலனால் பாழ்படுத்தும் நிலை அடைந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இடைப்பட்ட காலத்தில், கலிங்க ஆளுமையிலிருந்து அயலவரின் கைக்கு பிதும்டா சென்றிருந்தும், காரவேலனுக்கு அல்லது கலிங்கத்துக்கு எதிரான சக்தி அங்கு இருந்தமையால், காரவேலன் அவ்வாறு செய்ய நேர்ந்தது என ஆலோசனை ஒன்றை முன்நிறுத்தலாம். சதானந்த அகர்வாலின் படித்தறிதல் எதிர்கொண்ட எதிர்வினைகள் குறித்து அறியமுடியாமல் இருப்பதால், நமது கருத்து இதனுடன் முடிவுபெறுகிறது.

    பார்வை நூல்கள் -

    1. Annual Report of South Indian Epigraphy, 1939.

    2. Corpus Inscriptionum Indicarrum Vol-I, (1877) - by, Alexander Cunningham. (Reprint), Archaeological Survey of India, New Delhi.

    3. Shashi Kant, ‘The Hathikumba Inscription of Karavela and the Bhabru Edict of Asoka, (2000), D.K.Printworld.

    4. Sri Karavela by Sadananda Agarwal (2000), inscription translation published in Sanskrit, Hathigumpha inscription- Jatljand Wiki.htm (சதானந்த அகர்வாலின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பின் ஆங்கில வடிவம்).

    5. Romila Thapar, the Penguin Early History of India – From The Origion to AD 1300, (2002), Penguin India, New Delhi.

    6. Annual Report of South Indian Epigraphy, 1938

    7. வின்செண்ட் ஸ்மித், ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு, பாகம்-1, (தமிழில்), (1967), தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை.

    8. ந.சுப்பிரமணியன், இந்திய வரலாறு - (மறு.பதி. 2012), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

    9. கோ.தங்கவேலு, இந்திய வரலாறு, பகுதி-1, (மறு.பதி. 2007), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

    10. த.பார்த்திபன், சங்க காலத் தமிழகமும் அதியர் மரபினரும், (2009), ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி.

    11. இராம கி, சிலம்பின் காலம், (2011), தமிழினி, சென்னை.

    12. துளசி இராமசாமி, தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலமே, (2014), விழிகள், சென்னை.

    13. க.இலக்குமி நாராயணன், (கட்), தமிழ்நாடன், (தொ.ஆ.), சேலம் மாட்டம் சில ஆய்வுகள், (1988), காவ்யா, பெங்களூர்.

    14. தாலமி, (தமிழில் - வி.எஸ்.வி.இராகவன்), (1978), மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.

    15. மயிலை சீனி. வேங்கடசாமி, பழந்தமிழர் வாணிகம், (சங்க காலம்), (மறு.பதி.-2011), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,.

    16. டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும், (2006), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

    17. மு. இராகவையங்கார், வேளிர் வரலாறு, (1913), மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை.

    18. ரா. இராகவையங்கார், தமிழக குறுநில வேந்தர்கள், (மறு.பதி.1994), பாரதி பதிப்பகம், சென்னை.

    19. அ. துரைஅரங்கசாமி, சங்ககாலச் சிறப்புப் பெயர்கள், (மறு.பதி.1980), பாரி நிலையம், சென்னை.

    20. மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும், (மறு.பதி.2004), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.

    (‘காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும்’ - தொடர்ச்சி அடுத்த வாரம்).

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp