பேக்கரி தொழில் வளர்ச்சி

இன்று மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பேக்கரி தொழிலகங்களிலிருந்து தயாரிக்கப்படும் பன், பிரட், கேக் போன்ற பேக்கரி பொருள்கள் இன்றியமையாத உணவுப் பொருள்களாகி விட்டன
பேக்கரி தொழில் வளர்ச்சி

இன்று மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பேக்கரி தொழிலகங்களிலிருந்து தயாரிக்கப்படும் பன், பிரட், கேக் போன்ற பேக்கரி பொருள்கள் இன்றியமையாத உணவுப் பொருள்களாகி விட்டன. அனைத்துப் பெட்டிக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரி கடைகள், சாலையோரக் கடைகள் என அனைத்திலும் பேக்கரி பொருள்கள் தற்போது அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.


 சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் கடந்த 50 வருடங்களில் பேக்கரி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஒரு பேக்கரி தொழில்கூடம் மட்டும் இருந்த தம்மம்பட்டியில் தற்போது நான்கு பேக்கரி தொழிற்கூடங்கள் உள்ளன. இங்கிருந்து பல பேக்கரி கடைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

 தொழிற்கூடங்களிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கில் கேக்குகள், பன், வறுக்கிகள், பிஸ்கட், தேங்காய் பன், கரீம் பன், பிரட், கரீம் பன், சாக்லெட், புட்டிங் கேக், பிறந்தநாள் கேக் போன்ற பொருள்கள் தயாரிக்கப்பட்டு சுற்றுவட்டார ஊர்களான துறையூர், பெரம்பலூர், வீரகனூர், ஆத்தூர், மஞ்சினி, முள்ளுக்குறிச்சி, கூடமலை, நாகியம்பட்டி, தலைவாசல், கெங்கவல்லி, தெடாவூர், திருச்சி மாவட்டம் முருங்கப்பட்டி, மங்கப்பட்டி, கொப்பம்பட்டி ஆகிய இடங்களிலும் செயல்படும் பேக்கரி கடைகளுக்கு வேன், ஆட்டோக்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

 ஒவ்வொரு பேக்கரி தொழில்கூடத்திலும் குறைந்தது 6 பேர் முதல் 10 பேர் வரை தினமும் வேலை செய்து வருகின்றனர். அந்த பேக்கரி தொழிலகங்களில் மாவு பிசையும் இயந்திரம், கேக் செய்யும் இயந்திரம், ஓவன் இயந்திரம் போன்றவை மூலம் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

 பேக்கரி பொருள்கள் உற்பத்திக்கு மைதா, சர்க்கரை, டால்டா, முட்டை, கலர் எசன்ஸ், ஈஸ்ட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பொருள்கள் மூலப் பொருள்களாக உள்ளன.
 
 கடந்த 21 வருடங்களுக்கும் மேலாக தம்மம்பட்டியில் சொந்தமாக பேக்கரி தொழில் செய்துவரும் பெரியசாமி (46) கூறியதாவது:

 எனது 17வயதில் திருச்சியில் பேக்கரியில் சென்று தொழில் கற்றுக் கொண்டேன். தம்மம்பட்டியில் சிறிய முதலீட்டில் தொழிலைத் துவக்கினேன்.
 இந்தத் தொழிலுக்கு கேக், பன், பிஸ்கட் தயாரிக்க என்று சுமார் 300 டிரேக்கள் வேண்டும். நாளொன்றுக்கு கேக்குகள் 50 டிரேக்களில் தயாரிப்போம்.

 நாங்கள் தயாரித்த பொருள்களை வெளியூர் கடைக்காரர்கள் மொத்தமாக இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் ரூ. 14 லட்சம் இருந்தால் இத் தொழிலில் முதலீடு செய்யலாம். இளைஞர்கள் பேக்கரி உணவுப் பொருள்கள் தயாரிக்க துணிச்சலாக இறங்கலாம். இத் தொழிலில் ஒவ்வொரு பொருள்களையும் செய்யும்போதும், அந்தந்தப் பொருள்களுக்கு கூடுதலாக சேர்க்கப்படும் பொருள்களை சரியான அளவில் சேர்த்திட வேண்டும். அடுப்பில் (ஓவன்) பன் உள்ளிட்ட பொருள்களை ஏற்றும்போது சரியான பதத்தில் ஏற்றிட வேண்டும். இல்லையேல், அனைத்து பொருள்களும் சுவை மாறி, சாப்பிடும்படி இருக்காது. செய்த பொருள்கள் பாழாகிவிடும். இத் தொழிலை அவரவர் திறமைக்கு ஏற்ப ஆறு மாதம் முதல் 3 வருடம் வரை கற்றுக் கொள்ளலாம். 5 வருடம் பழகி சரிவரக் கற்றுக்கொள்ளாதவர்களும் இருக்கின்றனர்.

 இத் தொழிலுக்கு வங்கிகளில் கடன் தருகின்றனர். படித்துமுடித்து வருபவர்களைவிட, தொழில் கற்றுக்கொண்டு மிகுந்த அனுபவத்துடன் பேக்கரி தொழிலைச் செய்யத்தொடங்கினால், போட்டி நிறைந்த பேக்கரி தொழில் வாழ்க்கை இனிப்பாகத்தான் இருக்கும் என்றார் தம்மம்பட்டி பெரியசாமி.
 
 200 பன், 300 பாக்கெட் பிஸ்கட், 200 தேங்காய் பன், 200 பிரட், வறுக்கி 100 என்று 5 மணி நேரங்களில் தயாரிக்கிறோம். தயாரித்த அன்றே மாலையில் 2 மணி நேரம் செலவிட்டு பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்கிறோம். அடுத்த நாளில் வெளியூர்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறோம். இங்கிருந்து வெளியூர்களில் உள்ள அரசுப் போக்குவரத்துப் பணிமனைகள் கேன்டீன்களுக்கு அனுப்புகிறோம். ஆர்டர் கொடுத்தால் 5 கிலோ எடையிலான பிறந்தநாள் கேக்கை 3 மணி நேரத்தில் செய்து விடுகிறோம்.
 
 எஸ். ரம்யா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com