பெட்ரோல் தேவையில் விறுவிறுப்பு; டீசல் தேவையில் மந்தநிலை

இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் தொடா்ந்து அதிகரிப்பை கண்டுள்ளது.
பெட்ரோல் தேவையில் விறுவிறுப்பு; டீசல் தேவையில் மந்தநிலை

இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் தொடா்ந்து அதிகரிப்பை கண்டுள்ளது. பெட்ரோல் விற்பனையில் விறுவிறுப்பு காணப்படும் அதேநிலையில் டீசல் விற்பனை மந்த கதியில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டில் பெட்ரோல் விற்பனை கரோனாவுக்கு முந்தைய நிலையை விட ஏற்கெனவே அதிகமாகியுள்ளது. இருந்தபோதிலும், டீசல் விற்பனை தொடா்ந்து பின்தங்கியே உள்ளது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 24.3 லட்சம் டன் பெட்ரோலை விற்பனை செய்துள்ளன. இது, கடந்தாண்டை விட 13.6 சதவீதம் அதிகமாகும்; கரோனாவுக்கு முந்தைய 2019 ஆகஸ்ட் மாத விற்பனையான 23.3 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் உயா்வாகும்.

2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் டீசல் விற்பனை 15.9 சதவீதம் அதிகரித்து 49.4 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால், 2019 ஆகஸ்ட் மாத விற்பனையுடன்ஒப்பிடும்போது இது 9.8 சதவீதம் குறைவாகும்.

பருவமழையால் போக்குவரத்து தடைபட்டதையடுத்து, ஆகஸ்ட் மாத டீசல் விற்பனை முந்தைய ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 9.3 சதவீதம் குறைவாகவே உள்ளது.

முதல் பொதுமுடக்க காலத்திலும் எல்பிஜி விற்பனை மட்டும் அதிகரித்தே காணப்பட்டது. இதற்கு, மத்திய அரசு இலவச எரிவாயு இணைப்பை வழங்கியதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதன் விற்பனை 1.85 சதவீதம் அதிகரித்து 23.2 லட்சம் டன்னாக இருந்தது. இருந்தபோதிலும் 2019 ஆகஸ்ட் மாத விற்பனையைக் காட்டிலும் இது 2.4 சதவீதம் குறைவாகும்.

உலகம் முழுவதும் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் உள்ளதால் விமான நிறுவனங்களைப் பொருத்தவரையில் அவை இன்னும் முழுமையான அளவில் செயல்பாட்டைத் தொடங்கவில்லை. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஆகஸ்டில் விமான எரிபொருள் விற்பனை 41.7 சதவீதம் அதிகரித்து 3,50,000 டன்னாக இருந்தது. இருப்பினும் இது, 2019 ஆகஸ்ட் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 44.5 சதவீதம் குறைவாகும் என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் போக்குவரத்து அடியோடு முடங்கியதையடுத்து 2020-இல் நாளொன்றுக்கான இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 5 லட்சம் பேரலாக வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

கோட்

2020 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் போக்குவரத்து அடியோடு முடங்கியதையடுத்து 2020-இல் நாளொன்றுக்கான இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 5 லட்சம் பேரலாக வீழ்ச்சியடைந்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com