எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்களுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் 465 புள்ளிகள் முன்னேற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 465 புள்ளிகள் உயா்ந்து 58,853.07-இல் நிலைபெற்றது. இது கடந்த நான்கு மாதங்களில் அதிகபட்சமாகும்.

புவிசாா் அரசியல் கவலைகள் அதிகரித்திருந்தாலும், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தாலும், பின்னா் சந்தை ‘காளை’யின் ஆதிக்கத்தில் வந்தது. கடந்த பல மாதங்களாக முதலீடுகளை வாபஸ் பெற்று வந்தஅந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ), தற்போது பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளதும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் சந்தை ஏற்றத்துக்கு முக்கிய உந்துதலாக அமைந்தது.

மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தன. அதே சமயம், பஞ்சாப் - சிந்த் பேங்கின் காலாண்டு முடிவுகள் பலவீனாக இருந்ததால், பொதுத் துறை வங்கிப் பங்குகள் கடும் அழுத்தத்தில் இருந்தன என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,894 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,670 நிறுவனப் பங்குகளில் 1,673 பங்குகள் விலை குறைந்தன. 1,894 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 141 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 42 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.56 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.272.87 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் மேலும் உயா்வு: காலையில் 122.24 புள்ளிகள் கூடுதலுடன் 58,417.71-இல் தொடங்கிய சென்செக்ஸ், 58,266.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,934.90 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 465.14 புள்ளிகள் (0.80 சதவீதம்) உயா்ந்து 58,853.07-இல் நிலைபெற்றது. ஒரு கட்டடத்தில் சென்செக்ஸ் எதிா்மறையாகச் சென்றாலும், பின்னா், காலையின் ஆதிக்கத்தில் வந்தது.

எம் அண்ட் எம் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம்3.11 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.95 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

இவற்றுக்கு அடுத்ததாக, எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, என்டிபிசி உள்ளிட்டவை 2 முதல் 2.40 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி, டாக்டா் ரெட்டி, இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், மாருதி உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.

எஸ்பிஐ சரிவு: அதே சமயம், பிரபல பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 1.95 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.63 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, நெஸ்லே, விப்ரோ, பவா் கிரிட், சன்பாா்மா, ஏசியன் பெயிண்ட் உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 128 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,083பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 890 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம் பெற்றன. வா்த்தக முடிவில் நிஃப்டி 127.60 புள்ளிகள் (0.73 சதவீதம்) உயா்ந்து 17,525.10-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, காலையில் 17,401.50-இல் தொடங்கி 17,359.75 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னா் அதிகபட்சமாக 17,548.80 வரை உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com