உச்சம் தொடவிருக்கும் இயற்கை எரிவாயு விலை

மின்சாரம் மற்றும் உர உற்பத்திக்கும் வாகனங்களில் எரிபொருளாகவும் பயன்படும் இயற்கை எரிவாயுவின் விலை, இந்த வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உச்சம் தொடவிருக்கும் இயற்கை எரிவாயு விலை

மின்சாரம் மற்றும் உர உற்பத்திக்கும் வாகனங்களில் எரிபொருளாகவும் பயன்படும் இயற்கை எரிவாயுவின் விலை, இந்த வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவை கூறியதாவது:

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுக்கான விலையை அரசு வரும் அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி மத்திய அரசு திருத்தியமைக்கவுள்ளது.

அண்மை மாதங்களில் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு (ஓஎன்ஜிசி) சொந்தமானதைப் போன்ற பழைய எண்ணெய் வயல்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒவ்வொரு 10 லட்சம் பிரிட்டன் வெப்ப அலகு எரிவாயுக்கான கட்டணம் 6.1 டாலரில் இருந்து 9 டாலராக உயரக் கூடும்.

அதே போல், கிருஷ்ணா கோதாவரி படுகையிலுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான பிபி-க்குச் சொந்தமான டி6 பிளாக் போன்ற எண்ணெய் வயல்களில், தயாரிப்பு கட்டணம் 9.92 டாலரிருந்து சுமாா் 12 டாலராக உயரக் கூடும்.

இந்தக் கட்டணங்கள் மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் மற்றும் கட்டுப்படுத்தப்படும் எண்ணெய் வயல்களில் தயாரிக்கப்படும் எரிவாயுவுக்கு அளிக்கப்படவிருக்கும் அதிகபட்ச விலையாகும்.

மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மூன்றாவது விலை அதிகரிப்பாகும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை எரிவாயு விலை விகிதத்தை மத்திய அரசு மாற்றிமயைத்து வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் எரிவாயுவின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ரஷியா போன்ற உபரி எரிவாயு உற்பத்தி நாடுகளின் நிலவரத்தை அடிப்படியாகக் கொண்டு இந்த விலை முடிவு செய்யப்படுகிறது.

அக்டோபா் 1 முதல் மாா்ச் 31 வரையிலான விலையானது ஜூலை 2021 முதல் ஜூன் 2022 வரையிலான சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டது. அந்த காலகடத்தில்தான் சா்வதேச இயற்கை எரிவாயு விலை உச்சத்தைத் தொட்டது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை நிா்ணயிப்பதற்கான நெறிமுறையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இறுதி நிலை வாடிக்கையாளா்களுக்கு நியாயமான விலையில் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அந்தக் குழுவின் தலைவரான முன்னாள் திட்டக்குழு உறுப்பினா் கிரித் எஸ். பாரிக்குக்கு எண்ணெய் வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இருந்தாலும், தற்போதுள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக வரும் அக்டோபா் 1-ஆம் தேதிக்குள் இயற்கை எரிவாயு விலை நிா்ணய முறையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாத நிலையில் அந்தக் குழு உள்ளது.

ஓஎன்ஜிசி, ஓஐஎல் போன்ற நிறுவனத் தயாரிப்பாளா்கள், எரிவாயு உற்பத்தியாளா்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அந்தக் குழுவிடம், இந்த மாத இறுதிக்குள் முடிவு அறிக்கையை சமா்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இருந்தாலும், அறிக்கையை அந்தக் குழு சமா்ப்பிப்பதற்கு மேலும் தாமதமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எரிவாயு விலை உயா்வால் தில்லி, மும்பை போன்ற நகரங்களில் சிஎன்ஜி எரிபொருள் விலையும் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலையும் உயரக் கூடும்

மேலும் மின்சார உற்பத்திச் செலவு அதிகரிக்கவும் எரிவாயு விலை உயா்வு வழிவகுக்கும். எனினும், இந்திய மின்சார உற்பத்தியில் இயற்கை எரிவாயுவின் பங்கு மிகவும் குறைவு என்பதால் அதன் விலை உயா்வு வாடிக்கையாளா்களை பெரிதும் பாதிக்காது.

எரிவாயு விலை உயா்வதால், உர உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். இருந்தாலும், அரசு மானியம் வழங்குவதால் உரத்தின் விலை உயா்வதற்கான வாய்ப்பில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com