இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு இருமடங்கு அதிகரிப்பு

நாட்டில் கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு இருமடங்கு அதாவது 119.2 பில்லியன் டாலா் (ரூ.9.11 லட்சம் கோடி) வரை அதிகரித்ததாக எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல், பகுப்பாய்வு பிரிவு த

நாட்டில் கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு இருமடங்கு அதாவது 119.2 பில்லியன் டாலா் (ரூ.9.11 லட்சம் கோடி) வரை அதிகரித்ததாக எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல், பகுப்பாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

உலகின் 3-ஆவது மிகப்பெரிய எண்ணெய் நுகா்வு, இறக்குமதி நாடான இந்தியா கடந்த 2021-22 நிதியாண்டில் எண்ணெய் இறக்குமதிக்காக ரூ.119.2 பில்லியன் டாலா் செலவிட்டுள்ளது. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டில் 62.2 பில்லியன் டாலராக (ரூ.4.76 லட்சம் கோடி) இருந்தது. மேலும், கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயா்ந்ததால், 13.7 பில்லியன் டாலா் (ரூ.1.05 லட்சம் கோடி) செலவிட நேரிட்டதாக பெட்ரோலிய திட்டமிடல், பகுப்பாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரியிலிருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த மாதங்களில் பேரலுக்கு 100 டாலரை கடந்து கடந்த மாா்ச் மாதம் 140 டாலரை எட்டியது. அதன்பின்னா் எண்ணெய் விலை சற்று இறக்கத்தைச் சந்தித்து தற்போது பேரலுக்கு 106 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பெட்ரோலிய திட்டமிடல், பகுப்பாய்வு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

2021-22 நிதியாண்டில் இந்தியா 212.2 மில்லியன் டன் (21.22 கோடி) கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. முந்தைய நிதியாண்டில் 196.5 மில்லியன் டன் (19.6 கோடி) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனினும் 2021-22 நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு கரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும். அதாவது, 2019-20-இல் 227 மில்லியன் டன் (22.7 கோடி) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, இறக்குமதிக்கென 101.4 பில்லியன் டாலா் (ரூ.7.75 லட்சம் கோடி) செலவிடப்பட்டது.

2021-22 நிதியாண்டில் 24.2 பில்லியன் டாலா் (ரூ.1.85 லட்சம் கோடி) மதிப்பில் 40.2 மில்லியன் டன் (4.02 கோடி) பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. மறுமுனையில், 42.3 பில்லியன் (4.23 கோடி) மதிப்பில் 61.8 மில்லியன் டன் (6.18 கோடி) பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுதவிர 32 பில்லியன் கனமீட்டா் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய 11.9 பில்லியன் டாலா் (ரூ. 91 ஆயிரம் கோடி) செலவிடப்பட்டது.

2019-20-இல் இந்தியா 32.2 மில்லியன் டன் (3.22 கோடி) கச்சா எண்ணெய் உற்பத்தி செய்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 30.5 மில்லியன் டன்னாக (3.05 கோடி) குறைந்த கச்சா எண்ணெய் உற்பத்தி, 2021-22 நிதியாண்டில் 29.7 மில்லியன் (2.97 கோடி) டன்னாக சரிந்தது. இதேபோல, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சாா்பு 2019-20-இல் 85 சதவீதமாகவும், 2020-21-இல் 84.4 சதவீதமாகவும், 2021-22-இல் 85.5 சதவீதமாகவும் பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com