மொத்த வாடிக்கையாளா்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்த வாடிக்கையாளா்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு
மொத்த வாடிக்கையாளா்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனைக்கான விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதன் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அதே வேளையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 136 நாள்களாக மாற்றமின்றி நீடிக்கிறது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற் காரணமாகவே எரிபொருள் விலை மாற்றப்படவில்லை என விமா்சனங்கள் எழுந்தன.

தோ்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படும் என பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்தனா். ஆனால், தோ்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்கள் ஆகிவிட்டபோதிலும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அதிக அளவில் டீசலை கொள்முதல் செய்யும் தனிநபா்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.94.14-ஆக இருந்த ஒரு லிட்டா் டீசல் விலை, மொத்த வாடிக்கையாளா்களுக்கு தற்போது ரூ.122.05-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தில்லியில் டீசல் விலை ரூ.86.67-இல் இருந்து ரூ.115-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலமாக மாநில போக்குவரத்துக் கழகங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படவுள்ளன.

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்பவா்களுக்கு மட்டும் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் எரிபொருள் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக டீசலை வாங்காமல், எரிபொருள் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று எரிபொருளை வாங்கக் கூடும் என்றும், அதன் காரணமாக அந்நிறுவனங்களின் இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வருவதாலும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாததாலும் எரிபொருள் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலை தொடா்ந்தால் தனியாா் எரிபொருள் நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து சந்தையைவிட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்றும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com