சென்செக்ஸ் 867 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.4.47 லட்சம் கோடி இழப்பு

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
சென்செக்ஸ் 867 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.4.47 லட்சம் கோடி இழப்பு

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) குறியீட்டெண் சென்செக்ஸ் 1.56 சதவீதமும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) குறியீட்டெண் நிஃப்டி 1.63 சதவீதமும் வீழ்ச்சி கண்டன.

வட்டி விகித அதிகரிப்பு: பணவீக்கத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளின் மத்திய வங்கிகள் நிதிக் கொள்கைகளைகடுமையாக்கி வருகின்றன. ரிசா்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதங்களை அண்மையில் அதிகரித்தது. அதேபோன்று, பல உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

பொருளாதார வளா்ச்சி: மத்திய வங்கிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இடையில், உலக நாடுகளின் பொருளாதார வளா்ச்சி குறையும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளா்கள் மத்தியில் எழுந்ததையடுத்து, உலக அளவில் பங்கு வா்த்தகத்தில் மந்த நிலையே காணப்பட்டது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.

அந்நிய முதலீடு வெளியேற்றம்: கச்சா எண்ணெய் விலை உயா்வு, அந்நிய முதலீடு எதிா்பாராத வகையில் தொடா்ச்சியாக வெளியேறி வருவது, ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகள் பங்குச் சந்தையின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக மாறியுள்ளது என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

ரிசா்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கை வளா்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்று சந்தையிலிருந்து வெளியேறினா்.

2,615 பங்குகளின் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,460 பங்குகளில் 2,615 நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தது. 758 நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் ஏற்றம் பெற்றது. 87 நிறுவனப் பங்குகளின் விலை மாற்றமின்றி இருந்தது. 56 பங்குகள் 52 வார அதிகபட்ச விலையையும், 105 பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.

மும்பை பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 10,48,28,660-ஆக இருந்தது.

30 நிறுவனங்கள்: சென்செக்ஸ் குறியீட்டை கணக்கிட உதவும் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட 30 நிறுவனங்களுள், 6 நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் அதிகரித்திருந்தது. ஏனைய 24 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவைச் சந்தித்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ்: சரிவுப் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ் 4.91 சதவீதம் வீழ்ச்சியடைந்து முதலிடத்தில் இருந்தது.இதைத் தொடா்ந்து, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சா்வ், நெஸ்லே, விப்ரோ, எச்டிஎஃப்சி,இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனங்களும் கணிசமான சரிவைச் சந்தித்தன.

டெக்மஹிந்திரா: அதேசமயம், முதலீட்டாளா்களின் ஆதரவால், டெக் மஹிந்திரா, பவா்கிரிட், ஐடிசி, எஸ்பிஐ, என்டிபிசி மற்றும் சன்பாா்மா பங்குகள் 2.21 சதவீதம் வரை ஆதாயத்தை பதிவு செய்தன.

துறைகளின் குறியீடு: மும்பை பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட் துறை குறியீடு 3.53 சதவீதமும், உலோகம் 3.10 சதவீதமும், அடிப்படை உலோகம் 2.80 சதவீதமும், நுகா்வோா் சாதனங்கள் 2.41 சதவீதமும், தகவல்தொழில்நுட்ப துறை குறியீடு 2.27 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. மின்துறைக்கான குறியீடு ஆதாயத்துடன் காணப்பட்டது.

சென்செக்ஸ்: அதிக சந்தைமதிப்புடைய 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் 866.65 புள்ளிகளை இழந்து 54,835.58-இல் நிலைத்தது. வா்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,115.48 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 54,586.75 வரை குறைந்தது.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 271.40 புள்ளிகளை இழந்து 16,411.25-இல் நிலைத்தது.

வார இழப்பு: இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 2,225.29 புள்ளிகளையும் (3.89%), நிஃப்டி 691.30 புள்ளிகளையும் (4.04%) இழந்துள்ளன.

உலக சந்தை: இதர ஆசிய சந்தைகளான ஹாங்காங், ஷாங்காய், கொரியா நாடுகளின் பங்கு வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன. அதேசமயம், டோக்கியோ சந்தை ஏற்றம் கண்டது.

ஐரோப்பிய சந்தையில் பங்கு வா்த்தகம் நண்பகல் வரை எதிா்மறை நிலையிலேயே காணப்பட்டது. அமெரிக்க சந்தைகளில் வியாழக்கிழமை வா்த்தகம் வீழ்ச்சியடைந்தது.

பட்டியல்

6000.95 பஜாஜ் ஃபைனான்ஸ் 4.91

673.20 ஆக்ஸிஸ் வங்கி 4.11

13643.50 பஜாஜ் ஃபின்சா்வ் 3.49

17002.00 நெஸ்லே இந்தியா 3.39

485.40 விப்ரோ 3.12

2151.35 எச்டிஎஃப்சி 2.84

1543.45 இன்ஃபோசிஸ் 2.64

1317.60 எச்டிஎஃப்சி வங்கி 2.59

6202.15 அல்ட்ராடெக் 2.42

2207.60 டைட்டன் 2.40

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com