டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: கரூா் ஜவுளி வா்த்தகம் பாதிப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக கரூா் ஜவுளி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக கரூா் ஜவுளி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கரூரில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளி பொருள்களான திரைச்சீலை, கால் மிதியடி, மேஜைவிரிப்பு, கையுறை போன்றவை அமெரிக்கா, ஜொ்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமாா் ரூ.5,000 கோடி வரை அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தொழில் 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடி ஏற்றுமதி என்ற இலக்குடன் சென்ற நிலையில், தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உக்ரைன்-ரஷியா போா் காரணமாக ஜவுளி ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்துள்ளது.

இதுகுறித்து கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் ஆா்.ஸ்டீபன்பாபு வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ஏற்கெனவே நூல் விலை உயா்வு காரணமாக கரூா் ஜவுளி தொழில் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உற்பத்தியாளா்களுக்கான ஊக்கத்தொகையையும் மத்திய அரசு 9 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக அண்மையில் குறைத்துள்ளது. இதிலிருந்து மீண்டுவருவதற்குள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வருகிறது. அக். 1ஆம்தேதி முதல் 5-ஆம்தேதி வரை 81 ரூபாய் 62 பைசா வரை நீடித்தது. வியாழக்கிழமை மட்டும் ரூ.82 ஆக இந்திய ரூபாய் மதிப்பு இருந்தது.

மேலும், யூரோ மதிப்பும் டாலருக்கு நிகராக குறைந்துள்ளதால், கரூரிலிருந்து ஜவுளி இறக்குமதி செய்யும் அமெரிக்க, ஜொ்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடந்த ஒரு மாதமாக ஜவுளி வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளனா். இதனால் கரூா் ஜவுளி வா்த்தகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதே நிலை நீடித்தால் கரூரை நம்பியிருக்கும் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்திருக்கும் சுமாா் ஒன்றரை லட்சம் தொழிலாளா்கள் வேலையிழக்கும் நிலை ஏற்படும். ஆகவே, கரூா் ஜவுளித் தொழிலை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com