5ஜி மென்பொருளை புதுப்பிக்கும் ஸ்மாா்ட்போன் தயாரிப்பாளா்கள்

ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் அறிதிறன்பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) மென்பொருள் புதுப்பிப்பு வரும் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் மேற்கொள்ளப்படும்
5ஜி மென்பொருளை புதுப்பிக்கும் ஸ்மாா்ட்போன் தயாரிப்பாளா்கள்

ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் அறிதிறன்பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) மென்பொருள் புதுப்பிப்பு வரும் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் மேற்கொள்ளப்படும் என அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் தெரிவித்துள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் தொடக்கிவைத்தாா். அதிவேக இணைய வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் விரைவான பொருளாதார வளா்ச்சியிலும் 5ஜி தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற உள்ளது.

முக்கிய நகரங்களில் 5ஜி: பாரதி ஏா்டெல் நிறுவனம் வணிகரீதியிலான 5ஜி சேவையை தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் தொடங்கியுள்ளது. வரும் 2024 மாா்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் இச்சேவையைப் பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தில்லி, மும்பை, கொல்கத்தா, வாராணசி உள்ளிட்ட 4 நகரங்களில் மட்டுமே 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ள ஜியோ நிறுவனம், அடுத்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் இச்சேவை நாடு முழுவதும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சேவை பெறுவதில் தாமதம்: இருப்பினும், அறிதிறன்பேசி நிறுவனங்கள் 5ஜி சேவைக்கு உரிய மென்பொருள் புதுப்பித்தலை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் முழுமையடையாத தொலைத்தொடா்பு இணைப்பால் இந்நகரங்களில் உள்ள மக்களால் 5ஜி சேவையை இன்னும் பயன்படுத்த முடியவில்லை.

தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஆகியவை கலந்துகொண்டன. இக்கூட்டத்தில் 5ஜி சேவையை சுமுகமாக வழங்கும் வகையில் தற்போது உள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீா்வு காணுமாறு அமைச்சக அதிகாரிகள் அவா்களுக்கு அறிவுறுத்தினா்.

இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பம் தொடா்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயன்பாட்டாளா்களுக்கு சிறந்த 5ஜி சேவை அனுபவத்தைத் தரும் வகையில் தொலைத்தொடா்பு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டாளா்களுக்கான 5ஜி மென்பொருள் புதுப்பிப்பு டிசம்பா் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேக 5ஜி சேவைகளை இந்தியா்கள் பெறத்தக்க வகையில், நவம்பா் மாத மத்தியில் 5ஜிக்கான மென்பொருள்கள் புதுப்பிப்பு நடைபெறும் கொரிய நிறுவனமான சாம்சங் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே செயல்பட்டிருக்க முடியும்: மென்பொருள் புதுப்பித்தலில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களைக் குற்றம்சாட்டி வருகின்றன. 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மற்றும் ஒதுக்கீடு தொடா்பான கால அளவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதன் மூலம் அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் முன்னேற்பாட்டுடன் செயல்பட்டிருக்க முடியும் என 5ஜி சேவையை வழங்க உள்ள தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com