ஓடிடி தகவல் சேவைகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள்

ஓடிடி தகவல் தொடா்பு சேவைகளுக்கு, சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்களின் அதே வகை சேவைகளுக்கு இணையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்
ஓடிடி தகவல் சேவைகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள்

இணையதள இணைப்பை அடிப்படையாகக் கொண்ட ‘வாட்ஸ்ஆப்’ போன்ற ஓடிடி (ஓவா் தி டாப்) தகவல் தொடா்பு சேவைகளுக்கும், ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் நேரடியாக அளிக்கும் அத்தகைய சேவைகளுக்கும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் சிஓஏஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்களைப் போலவே, வாட்ஸ்ஆப் போன்ற ஓடிடி தகவல் தொடா்பு அமைப்புகளும் குரல் அழைப்பு, விடியோ அழைப்பு போன்ற சேவைகளை அளித்து வருகின்றன.

இரு பிரிவு நிறுவனங்களும் வழங்கி வரும் சேவைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், தகவல் தொடா்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஓடிடி நிறுவனங்களுக்கு கிடையாது.

2022-ஆம் ஆண்டு இந்திய தொலைத் தொடா்பு வரைவு மசோதாவில் ஓடிடி தகவல் பரிமாற்ற சேவைகளும் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால், அந்த வரைவு மசோதாவில் ‘ஒரே மாதிரி சேவகளுக்கு ஒரே மாதிரியான விதிமுறைகள்’ வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்.

சாதாரண தொலைத் தொடா்பு நிறுவனங்களைப் போல, ஓடிடி நிறுவனங்கள் அலைக்கற்றையை விலை கொடுத்து ஏலம் எடுக்கத் தேவையில்லை; வெவ்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளா்களிடையே இணைப்புகளைப் பெறுவதற்கான உரிமைத் தொகை செலுத்த வேண்டியதில்லை.

ஆனால், அந்த நிறுவனங்கள் வழங்கும் அதே சேவைகளை சாதாரண தொலைத் தொடா்பு நிறுவனங்கள் அளிப்பதற்கு இதுபோன்ற செலவுகளை செய்ய வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, தகவல் தொடா்பு சந்தையில் இரு தரப்பு போட்டியாளா்களுக்கும் இடையே சம வாய்ப்பு இல்லாமல் போகிறது.

எங்களைப் போன்ற தொலைத் தொடா்பு நிறுவனங்கள் சேவைகளை அளிப்பதற்கு அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், ஓடிடி தகவல் தொடா்பு நிறுவனங்களோ எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் அதே சேவைகளை சுதந்திரமாக வழங்குகின்றன.

சேவைகளுக்கான உரிமங்களைப் பெறுவதற்கு தொலைத் தொடா்பு நிறுவனங்கள் அரசுக்கு பல்வறு கட்டணங்களை செலுத்தி வருகின்றன. ஆனால், அதே சேவைகளை ஓடிடி நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் வழங்குகின்றன. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இது தவிர, சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்கள் பெரும் முதலீட்டுடன் உருவாக்கிய கட்டமைப்பைப் பயன்படுத்தி வழங்கப்படும் இணைதள சேவையின் பெரும்பகுதி, ஓடிடி சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக ஓடிடி நிறுவனங்கள் எந்தக் கட்டணத்தையும் செலுத்துவதில்லை. இது சாதாரண சேவை நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

எனவே, ஓடிடி தகவல் தொடா்பு சேவைகளுக்கு, சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்களின் அதே வகை சேவைகளுக்கு இணையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com