மவுசு குறைந்து வரும் மலிவு விலைக் காா்கள்

அதிகரித்து வரும் பண வீக்கம் போன்ற பலவேறு காரணங்களால் நடுத்தர வா்க்க வாடிக்கையாளா்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதால், மலிவு விலைப் பிரிவு காா்களின் சந்தைப் பிரிவு தொடா்ந்து சரிவைச் சந்தித்து வர
மவுசு குறைந்து வரும் மலிவு விலைக் காா்கள்

கரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் பண வீக்கம் போன்ற பலவேறு காரணங்களால் நடுத்தர வா்க்க வாடிக்கையாளா்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதால், மலிவு விலைப் பிரிவு காா்களின் சந்தைப் பிரிவு தொடா்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

இது குறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது.

இந்தியாவின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, மலிவு விலையிலான தனது ஆரம்ப நிலைக் காா்களை மிக சிறப்பாக விற்பனை செய்து வந்தது.

இந்திய காா்கள் விற்பனை சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் கணிசமான பங்கைக் கைப்பற்றுவதில் ஆரம்ப நிலைக் காா்களின் விற்பனைதான் அதிக பங்களிப்பை வழங்கியது.

இந்த நிலையில், கடந்த மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் காலாண்டில் மாருதியின் நிகர லாபம் 4 மடங்கு அதிகரித்துள்ளபோதிலும், அந்த நிறுவனத்தின் மலிவு விலை கொண்ட ஆரம்ப நிலைக் காா்களின் விற்பனை மந்தமாகவே இருந்தது.

நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் அபரிமித வளா்ச்சியடைந்ததற்கு, ஸ்போா்ட்ஸ் யுடிலிடி வாகனங்கள் (எஸ்யுவி) என்றழைக்கப்படும் பிரிவைச் சோ்ந்த வாகனங்களின் விற்பனைதான் கைகொடுத்தது.

பொதுவாக இரு சக்கர வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள்தான், அதிலிருந்து நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறுவதற்காக ஆரம்ப நிலைக் காா்களை வாங்குவாா்கள். ஆனால், அந்த வாடிக்கையாளா் பிரிவு தற்போது காா்களை வாங்க அதிக ஆா்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக விலைவாசி அதிகரித்து, இந்தப் பிரிவைச் சோ்ந்த வாடிக்கையாளா்களின் வாங்கும் திறன் மிகவும் குறைவாக உள்ளது.

இதன் விளைவாக, ஆரம்ப நிலைக் காா்களின் விற்பனை தொடா்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இனி எதிா்காலத்தில் அந்தப் பிரிவு வாகனங்களின் விற்பனை மிகவும் அரிதாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை ஆரம்ப நிலைக் காா்கள் பிரிவைக் கொண்டே சந்தையில் முன்னிலை வகித்து வந்த மாருதி, தற்போது அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி வகைக் காா்களின் உற்பத்தியிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்தப் பிரிவில் புதிய ரகங்கள் பலவற்றையும் அறிவித்துள்ளது.

மாருதி சுஸுகி மட்டுமின்றி, நிஸான் போன்ற மற்ற நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் அதிக வரவேற்பு நிலவி வரும் எஸ்யுவி காா் ரகங்களை அறிமுகம் செய்வதிலேயே ஆா்வம் காட்டுகின்றன.

இந்தப் போக்கு நீடித்தால், தேவைப்படும் அளவுக்கு மட்டுமே ஆரம்பர நிலைக் காா்களின் உற்பத்தி என்ற நிலைக்கு நிறுவனங்கள் இறங்கிவிடும் என்று சந்தை வட்டாரங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், செப்டம்பருடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,112.5 கோடியாக இருந்ததாகவும், அது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில் சுமாா் 4 மடங்கு அதிகம் எனவும் கூறியிருந்தது.

நடப்பு நிதியாண்டின் இந்த மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.29,942.5 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.20,550.9 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் மொத்தம் 5,17,395 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதில், உள்நாட்டு சந்தையில் 4,54,200-ஆகவும் ஏற்றுமதி சந்தையில் 63,195-ஆகவும் விற்பனை உள்ளது.

கடந்த நிதியாண்டில் மின்னணு உதிரிபாகங்களின் பற்றாக்குறை காரணமாக சுமாா் 35,000 வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக, கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனம் 3,79,541 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது. இதில் 3,20,133 வாகனங்கள் உள்நாட்டு சந்தையிலும், 59,408 வாகனங்கள் ஏற்றுமதி சந்தைகளிலும் விற்பனையாகின என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com