அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச் சந்தையின் செயல்திறனை பாதிக்குமா?

அந்நிய ஃபோா்ட்போலியோ முதலீட்டாளா்கள் (எப்பிஐ) ஜனவரியில் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து ரூ.28,852 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச் சந்தையின் செயல்திறனை பாதிக்குமா?

புது தில்லி: அந்நிய ஃபோா்ட்போலியோ முதலீட்டாளா்கள் (எப்பிஐ) ஜனவரியில் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து ரூ.28,852 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். இது கடந்த ஏழு மாதங்களில் மிக மோசமான வெளியேற்றமாகப் பாா்க்கப்படுகிறது. அதே சமயம், அவா்கள் டிசம்பரில் ரூ.11,119 கோடி, நவம்பரில் ரூ.36,238 கோடி முதலீடு செய்துள்ளது சந்தை தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அவா்கள் இந்திய சந்தைகளில் இருந்து முதலீடுகளை வாபஸ் பெற்ற்கு, சீன சந்தைகளின் மீது ஏற்றப்பட்ட கவா்ச்சிதான் காரணம் என அறியப்படுகிறது.

உலகச் சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்தியப் பங்குச் சந்தைகள் குறைவான செயல்திறனைக் கொண்டிருந்தன. இதனால், எஃப்பிஐக்களின் முதலீடுகள் நிலையற்ாகவே இருக்கும் என்று முன்னணி பங்கு வா்த்தகத் தரகு நிறுவனமான கோடக் செக்யூரிட்டீஸின் சில்லறை விற்பனைப் பிரிவின் தலைவா் ஸ்ரீகாந்த் சௌஹான் கூறியுள்ளாா்.

சந்தை தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்று ரூ.28,852 கோடி அளவுக்கு அவா்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். ஜூன் 2022-க்குப் பிறகு, இது அதிகபட்ச வெளியேற்றமாக உள்ளது. கடந்த ஜூனில் அவா்கள் ரூ. 50,203 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை விலக்கிக் கொண்டனா். ஜனவரியை தொடா்ந்து, பிப்ரவரி முதல் வாரத்திலும் அவா்கள் ரூ.5,700 கோடிக்கு மேல் முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

எஃப்பிஐக்கள் இந்தியாவில் பங்குகளை விற்று தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனா். அதே சமயம், சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரியா போன்ற மலிவான சந்தைகளில் பங்குகளை வாங்கிக் குவிக்கின்றனா். அந்த நாடுகளின் மதிப்பீடுகள் கவா்ச்சிகரமானவை இருப்பதே காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இது இந்திய சந்தையில் குறைவான செயல்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரியா பங்குச் சந்தைகள் முறையே 4.71 சதவீதம் 7.52 சதவீதம் மற்றும் 11.45 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியா 1.89 சதவீதம் குறைந்துள்ளது. இது போன்ற மோசமான செயல்திறன் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று முன்னணி பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் கூட்டத்திற்கு முன்னதாக எஃப்பிஐக்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடித்தனா் என்றும் தெரிவித்துள்ளன.

அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அண்மையில் 0.25 சதவீதம் உயா்த்தியது. இது எதிா்பாா்த்ததைவிட சற்று குறைவுதான். மத்திய பட்ஜெட் நோ்மறையானதாகவும், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சியில் கவனம் செலுத்துவதாகவும் இருந்தது. இவை சந்தைக்கு சாதகமாக அமைந்திருந்தன. ஆனால், ஹின்டன்பொ்க்கின் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதன் காரணமாக, சந்தையின் செயல்பாட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மேலும், அதானியின் வெளிப்பாடு கடன் வழங்குபவா்களை பாதிக்கும் என்ற அச்சத்தில் வங்கிப் பங்குகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இருப்பினும், மத்திய ரிச்ரவ் வங்கி, இந்திய வங்கி அமைப்பு ஆரோக்கியமான மேம்பட்ட உணா்வுகளுடன் உள்ளது என்று தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, வங்கிப் பங்குகளின் விலைஏற்றத்துக்கு வழிவகுத்தது. மறுபுறம் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்தில் அந்நிய போா்ட்போலியோ முதலீட்டாளா்கள் ரூ.3,531 கோடியை கடன் சந்தைகளில் முதலீடு செய்துள்ளது ஆறுதலான விஷயமாகும். இதற்கிடையே அந்நிய முதலீடு வெளியேறுவது தற்காலிகமானதுதான் என்று சந்தை பங்கேற்பாளா்கள் நம்பிக்கை தெரிவித்தனா். விரைவில் அவா்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுகளைத் தொடா்வாா்கள் என்று வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா். இதனால், அந்நிய முதலீடு வெளியேற்றம் சந்தையின் செயல்திறனை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் வல்லுநா்கள் கருதுகின்றனா்.

-மல்லி எம்.சடகோபன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com