டிஎம்பி நிகர லாபம் ரூ. 1,072 கோடியாக உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2023-24ஆம் ஆண்டு நிகர லாபம் ரூ. 1,072 கோடியாக உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.
டிஎம்பி நிகர லாபம் ரூ. 1,072 கோடியாக உயர்வு
dinmani online

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2023-24ஆம் ஆண்டு நிகர லாபம் ரூ. 1,072 கோடியாக உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.

வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு, 2023-24ஆம் நிதியாண்டின் நிதிநிலை முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டன. இதையடுத்து, தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை எஸ். கிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர் அவர், வங்கியின் தலைமை நிதி அலுவலர் பி.ஏ. கிருஷ்ணனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் கூறியது:

1921-இல் தொடங்கப்பட்ட இந்த வங்கி 552 கிளைகள், 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 89,485 கோடியாக அதிகரித்துள்ளது. பங்குகளின் மதிப்பு ரூ. 438-லிருந்து ரூ.500ஆக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ. 1,029 கோடியாக இருந்த நிகர லாபம், 2023-24 நிதியாண்டில் ரூ. 1,072 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, வட்டி வருமானம் ரூ. 4,848 கோடியாகவும், மொத்த வருமானம் ரூ. 5,493 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கிக் கடன்களைப் பொருத்தவரை, 91 சதவீத கடன்கள் சில்லறை, விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், மீதமுள்ள 9 சதவீத கடன்கள் மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.

மொத்த வாராக்கடன், வங்கியின் மொத்த கடன் தொகையில் 1.44 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.85 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சிறப்புக் கணக்கும் 3.97 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நடப்பு, சேமிப்புக் கணக்குகள் முந்தைய காலாண்டைவிட 5.85 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மொத்த வைப்பு நிதி 5.80 சதவீதம் வளர்ச்சிடைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் புதிதாக 22 கிளைகள் தொடங்கப்பட்டன. 2024-25ஆம் நிதியாண்டில் 50 கிளைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோவை, ஹைதராபாத், மதுரை, மும்பை, தூத்துக்குடி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் கடன் செயலாக்க மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com