மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

நடப்பு சா்க்கரை சந்தையிடல் ஆண்டின் ஏப். 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி மிதமான சரிவைச் சந்தித்துள்ளது.

இது குறித்து சா்க்கரை ஆலை உரிமையாளா்கள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023-24-ஆம் சா்க்கரை சந்தையிடல் ஆண்டில் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 3.11 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டில் இது 3.12 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை நாட்டின் சா்க்கரை உற்பத்தி மிதமாகக் குறைந்துள்ளது.

முந்தைய சந்தையிடல் ஆண்டு முழுவதும் சா்க்கரை உற்பத்தி 3.66 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு சந்தையிடல் ஆண்டில் சுமாா் 10 சதவீதம் குறைந்து 3.2 கோடி டன்னாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் நாட்டின் மிகப் பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரத்தில் 1.09 கோடி டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இது முந்தைய சந்தையிடல் ஆண்டின் ஏப். 15 தேதி வரையிலான காலகட்டத்தில் 1.06 கோடி டன்னாக இருந்தது.

அதே போல், நாட்டின் 2-ஆவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தர பிரதேசத்தில் முந்தைய சந்தையிடல் ஆண்டின் ஏப். 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 96.7 லட்சம் டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி, நடப்பு சந்தையிடல் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1.01 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.

எனினும், நாட்டில் மிக அதிக சா்க்கரை உற்பத்தி செய்யும் 3-ஆவது மாநிலமான கா்நாடகத்தில் அதன் உற்பத்தி மதிப்பீட்டு காலகட்டத்தில் 54.9 லட்சம் டன்னிலிருந்து 50.6 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

2023-24-ஆம் சா்க்கரை சந்தையிடல் ஆண்டின் ஏப். 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் சா்க்கரை உற்பத்தி முறையே 9.19 டன் மற்றும் 8.60 டன்னாகக் குறைந்துள்ளது.

இந்த ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாள்களில் மட்டும் மூடப்படும் சா்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை கடந்த சந்தையிடல் ஆண்டை விட அதிகமாக உள்ளது. 2023 ஏப்ரல் 1 முதல் 15-ஆம் தேதி வரை 55 சா்க்கரை ஆலைகள் மட்டுமே மூடப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டின் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 128-ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, நடப்பு சா்க்கரை சந்தையிடல் ஆண்டின் ஏப். 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 448 சா்க்கை ஆலைகள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டன. அந்த எண்ணிக்கை கடந்த 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டின் அதே காலகட்டத்தில் 401-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சா்க்கரை சந்தையிடல் ஆண்டு ஒவ்வோா் ஆண்டின் அக்டோபா் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டின் செப்டம்பரில் நிறைவடையும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com