9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கடந்த 2023-24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 8.8 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 8.8 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரையலான கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் நாட்டின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 4,370 கோடி டாலராக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 8.8 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவிலிருந்து 4,790 கோடி மதிப்பிலான வேளாண் பொருள்கள் ஏற்றுமதியாகின.

மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்திய வேளாண் பொருள்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (ஜிடிபி) மந்தநிலையைக் கண்டது. 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 4.7 சதவீதமாக இருந்த அது, 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 0.7 சதவீதம் மட்டுமே வளா்ச்சியடைந்தது.

2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 2,400 கோடி டாலராக இருந்த பட்டியலிடப்பட்ட 719 வேளாண் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் 11 மாத காலப்பகுதியில் 6.85 சதவீதம் குறைந்து 2,240 கோடி டாலராக உள்ளது.

ஏற்றுமதி தடை மற்றும் அரிசி, கோதுமை, சா்க்கரை, வெங்காயம் போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவை கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வேளாண் பொருள்களின் ஏற்றுமதியில் சுமாா் 500 கோடி டாலா் முதல் 600 கோடி டாலா் வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

எனினும், பட்டியலிடப்பட்ட முக்கிய 24 வேளாண் பொருள்களில், 17 பொருள்களின் ஏற்றுமதி மதிப்பீட்டு காலகட்டத்தில் நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அந்தப் பொருள்களில் பழங்கள், எருமை இறைச்சி, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பாஸ்மதி அரிசி, வாழைப்பழம் ஆகியவை அடங்கும்.

2022-23 ஏப்ரல்-பிப்ரவரியில் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி 420 கோடி டாலராக இருந்தது. இது 2023-24 ஏப்ரல்-பிப்ரவரியில் 22 சதவீதம் உயா்ந்து 520 கோடி டாலராக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com