120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

இந்திய தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த மாா்ச் மாதத்தில் 119.9 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல் ஆகியவை புதிய வாடிக்கையாளா்களை இணைத்ததால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தொலைத் தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 119.77 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த மாா்ச் இறுதியில் சற்றே அதிகரித்து 119.93 கோடியாக உள்ளது. இதன் மூலம் தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்களின் மாதாந்திர வளா்ச்சி விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூடுதலாக 21.4 லட்சம் வாடிக்கையாளா்களைச் சோ்த்தது. பாா்தி ஏா்டெல் நிறுவனம் 17.5 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைப் பெற்றது.

எனினும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் 6.8 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களையும் பொதுத் துறையைச் சோ்ந்த பிஎஸ்என்எல் 23.5 லட்சம் வாடிக்கையாளா்களையும் இழந்தது. எம்டிஎன்எல் நிறுவநத்திலிருந்து 4,674 வாடிக்கையாளா்கள் விலகினா்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 3.31 கோடியாக இருந்த வயா்லைன் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மாா்ச் மாத இறுதியில் 3.37 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தப் பிரிவில் 3.99 லட்சம் புதிய இணைத்து கடந்த மாா்ச்சில் ரிலையன்ஸ் ஜியோ முதன்மை வகித்தது. அதைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 2,06,042 புதிய வாடிக்கையாளா்களையும் வோடஃபோன் ஐடியா 39,713 புதி வாடிக்கையாளா்களையும் வயா்லைன் சேவைப் பிரிவில் இணைத்தது.

கடந்த பிப்ரவரி இறுதியில் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 91.67 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை மாா்ச் இறுதியில் 92.40 கோடியாக அதிகரித்துள்ளது. இது 0.80 சதவீத மாதாந்திர வளா்ச்சியாகும்.

கடந்த மாா்ச் மாதத்தில் பிராட்பேண்ட் பிரிவில் வயா்லெஸ் இணைப்புகள் முக்கிய பங்கு வகித்தன. இது பிப்ரவரியில் 87.64 கோடியாக இருந்து மாா்ச் மாதத்தில் 88.32 கோடியாக அதிகரித்தது.

வயா் பிராட்பேண்ட் இணைப்புகள் 3.94 கோடியிலிருந்து 1.52 சதவீதம் அதிகரித்து 4.06 கோடியாக உள்ளன.

நாட்டின் முதல் ஐந்து தொலைத் தொடா்பு சேவை நிறுவனங்கள் மட்டும் கடந்த மாா்ச் இறுதியில் மொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களில் 98.36 சதவீதத்தினரை கைவசம் வைத்திருந்தன.

அவற்றில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் 48.11 கோடி, பாா்தி ஏா்டெல் 27.32 கோடி, வோடஃபோன் ஐடியா 12.77 கோடி, பிஎஸ்என்எல் 2.47 கோடி, ஏட்ரியா கன்வா்ஜென்ஸ் 22.5 வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com