விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 384 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பங்குகள் விற்பனை அதிகரித்தன. இதனால், வங்கி, ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி, மெட்டல் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.4.95 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.398.44 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.2,168.75 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.781.39 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தன.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 77.76 புள்ளிகள் கூடுதலுடன் 73,973.30-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,026.80 வரை மேலே சென்றது. பின்னா், 73,259.26 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 383.69 புள்ளிகள் (0.52 சதவீதம்) குறைந்து 73,511.85-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,932 பங்குகளில் 1,084 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,738 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 110 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

20 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்டாா்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி உள்பட 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டெக் மஹிந்திரா, நெஸ்லே, டிசிஎஸ், ஐடிசி, கோட்டக் பேங்க் உள்பட 10 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 33 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 140.20 புள்ளிகளை (0.62 சதவீதம்) இழந்து 22,302.20-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,499.05 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னா், 22,232.05 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 34 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com