சுடச்சுட

  
  gurush

  ஹரியானா என்பதற்கு 'கடவுளின் வசிப்பிடம்' என்று பொருள்! வட இந்திய மாநிலமான ஹரியானா 1966 - இல் அன்றைய இந்திய பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. நான்கு திசைகளிலும் நிலத்தால் சூழப்பட்ட இம்மாநிலத்தை பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மாநிலங்கள் சூழ்ந்துள்ளன. 

  இம்மாநிலத்தின் வடகிழக்கில் சிவாலிக் மலைத்தொடரும், தென்மேற்குப் பகுதியில் தார் பாலைவனமும், தெற்கே ஆரவல்லி மலைத்தொடரும் உள்ளன. ஆரவல்லி மலைத்தொடர் தனித்தனி குன்றுகளாகவும், பாறை முகடுகளாகவும் டெல்லியின் எல்லை வரை காட்சியளிக்கிறது.

  ஹரியானா மாநிலம் டெல்லி மாநகரை வடக்கு, மேற்கு, தெற்கு என மூன்று திசைகளில் சூழ்ந்துள்ளமையால், இதன் சில பகுதிகள் நாட்டின் தலைநகரமான டெல்லி மாநகருடன் இணைக்கப்பட்டுள்ளது.

  44212 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட ஹரியானா மாநிலம் 21 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசமே இம்மாநிலத்தின் தலைநகரமாகும்.

  பஞ்சாப் மாநிலத்திற்கும் சண்டிகர் நகரமே தலைநகரமாகும். சண்டிகரை இரண்டு மாநிலங்களுமே கேட்டதால் இரு மாநில எல்லையில் இருந்த சண்டிகர் நகரம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதுடன் இரு மாநிலங்களுக்கும் தலை நகரமாக ஆக்கப்பட்டது.

  ஹரியானா தொழில்வளம் மிக்க வளமான மாநிலம். வேளாண்மையே மாநிலத்தின் முக்கியத் தொழில்.  மொத்த மக்கள் தொகையில் 70% மக்கள் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ளனர். மொத்த நிலப்பரப்பில் சுமார் 86 % விவசாய நிலமே! உணவு மற்றும் பால் உற்பத்தியில் நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது! நம் நாட்டின் தனி நபர் வருமானம் குறித்த தர வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

  ஹரியானா மாநிலம் நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டது. இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக அமைந்த போர்கள் நடந்த பகுதியாகவும் இம்மாநிலம் உள்ளது. 

  மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாண்டவர் மற்றும் கெளரவர்கள் இடையே நடந்த பாரதப்போர், இங்குள்ள குருúக்ஷத்திரத்தில்தான் நடந்தது.

  பானிபட் போர்கள்!

  பானிப்பட் வரளாற்றுப் பெருமை மிக்கக நகரம். மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். அப்பொழுது இந்நகரத்தின் பெயர் பாண்டுப் பிரஸ்தம் என்பதாகும். 

  இந்திய வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய மூன்று பானிபட் போர்களும் இங்குதான் நடந்தது. 

  முதல் பானிப்பட் போர்!

  கி.பி. 1526 - இல் தில்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும், மத்திய ஆசியாவிலிருந்து வந்த பாபருக்கும் இடையில் பானிப்பட்டில் போர் நடந்தது.
  இப்போரில் பாபர் வெற்றி பெற்று இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். 

  இரண்டாம் பானிப்பட் போர்!

  கி.பி. 1556 - இல் பானிப்பட்டில் தில்லிப் பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் படைகளுக்கும் இடையே போர் நடந்தது. இதில் அக்பர் வென்றார். 
  மூன்றாம் பானிப்பட் போர்!

  கி.பி. 1761 - இல் மாராட்டியப் பேரரசின் படைகளுக்கும்,ஆப்கனிஸ்தான் மன்னர் அகமது ஷா ஆப்தாலிக்கும் இடையில் நடந்தது. 

  தொல்லியல் களங்கள்!

  பாகிஸ்தானில் உள்ள மொஹஞ்சோதாரோ மற்றும் ஹரப்பா அகழ்வு ஆய்வின் முடிவில் சிந்து சமவெளி நாகரிகம் 5500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று முன்னர் சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது ஹரியானா மாநிலத்தில் உள்ள "பிர்ராணா' (BHIRRANA) ராஹிகார்ஹி (RAKHI GARHI) ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆய்வு செய்தபோது, சிந்து சமவெளி நாகரிகம் 8000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்று தெரிய வந்துள்ளது. 

  இங்கு நடந்த அகழ்வாய்வுகளில் அதிக எண்ணிக்கையிலானா பசு, ஆடு, மான் போன்ற விலங்குகளின் எலும்புகள், கொம்புகள், பற்கள் போன்றவை கிடைத்துள்ளது.  மேலும் தங்கம் மற்றும் வெள்ளியிலானா பொருட்கள், முத்திரைகள், சமையல் பொருட்கள், சுடுமண் சிலைகள், சீப்பு இரும்பு ஊசிகள், மீன் தூண்டில்கள் என பலதரப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளது. 

  ராஹிகார்ஹியில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட தொல்லியல் களம் 105 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமும் உள்ளது.

  நடைபாதையுடன் கூடிய சாலைகள் கழிவு நீர் ஓடைகள், பெரிய மழைநீர் சேமிப்பு மற்றும் பாதுகாக்கும் அமைப்புகள், சுடுமண் செங்கல்கள், உலோகத்தால் ஆன பொருட்கள் என பல வகையான அமைப்புகள் மற்றும் பொருட்கள் ராஹிகர்ஹியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

  இப்பொழுது மறைந்து விட்டதாகக் கூறப்படும் சரஸ்வதி நதி மற்றும் காஹர் ஹக்ரா நதிகளின் சமவெளிப்பகுதிவரை சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கி இருந்துள்ளது. பிர்ராணா தொல்லியல் களம்தான் தெற்காசியாவின் மிகவும் பழமையான காலத்தைச் சேர்ந்த தொல்லியல் களம் என்பது குறிப்பிடத்தக்கது. 

  இவற்றைத் தவிர ஹரியானா மாநிலத்தில் பானாவாலி (BANAVALI), ஃபர்மானா (FARMANA), கன்வாரி (KANVARI), கூனல் (KUNAL) மிட்டாதல் (MITATHAL)  உள்ளிட்ட பல தொல்லியல் களங்கள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள் சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பத்தில் இங்குதான் தொடங்கி இருக்க வேண்டும் என்றும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சிந்து நதி வரை பரவியிருக்கலாம்  என்றும் கருதுகிறார்கள். 

  பிரித்விராஜ் கா கியாவா (கோட்டை) 

  இந்தக் கோட்டை ஹரியானா மாவட்டத்தில் ஹான்சி நகரில் அமைந்துள்ளது. இக்கோட்டை 12 - ஆம் நூற்றாண்டில் ராஜ்புத்திரர்களால் கட்டப்பட்டது. 

  30 ஏக்கர் பரப்பளவில் பரந்த சதுர வடிவக் கோட்டை இது. 52 அடி உயரமும், 37 அடி அகலமும் கொண்ட சுவர்கள் கொண்டது. பண்டைய இந்தியாவின் வலிமையான கோட்டைகளில் ஒன்று. கோட்டையின் நுழைவு வாயில்களில் இந்து கடவுளர்கள் மற்றும் பறவைகள் மிருகங்களின் அழகான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோட்டைக்குள் புத்தர் மகாவீரர் சிலைகளும் உள்ளன. 

  இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  தோஷி மலைக்கோட்டை

  தோஷி மலை உச்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. 40 அடி அகலமும், 25 அடி உயரமும் கொண்ட மதில் சுவர்கள் சூழ்ந்துள்ளது.  

  குருக்ஷேத்திரம்!

  வரலாற்று சிறப்பு மிக்க புனிதத்தலம் இது! ஹரியானா மாநிலத்தின் குருúக்ஷத்திர மாவட்டத்தில் உள்ளது. 

  மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டவர், கெளரவர்களின் முன்னோரான பரதகுல மன்னன் குரு என்பவன் சரஸ்வதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி.மு. 1900 - இல் குருக்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இந்நகரை உருவாக்கியதாக வாமன புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பாண்டவர் கெளரவர் படைகளுக்கு இடையே நடந்த பாரதப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. இந்துக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதும் பகவத் கீதை பிறந்ததும் இங்குதான்! 

  மிக நீண்ட புராண மற்றும் செழுமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த இடத்திற்கு பெளத்த, மற்றும் சீக்கிய மத குருக்களும் விஜயம் செய்துள்ளனர்.

  எனவே ஹிந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கிய மதத்தினர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் புனித யாத்திரை ஸ்தலமாக இந்நகரம் திகழ்கிறது. இங்கு வழிபாட்டுத் தலங்கள், கோயில்கள், குருத்வாராக்கள் மற்றும் தீர்த்த குண்டங்கள் என ஏராளமான ஆன்மீக புனிதத் தலங்கள் இந்நகரத்தில் நிரம்பியுள்ளன. 

  எண்ணற்ற இடங்கள் குருúக்ஷத்திரம் நகரத்தில் ஆன்மீக பயணமாக பார்ப்பதற்கு உள்ளன. அவற்றில் மிக முக்கியமான தலங்கள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

  தொடரும்....
  தொகுப்பு : கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai