கோடையால் வறண்டு வரும் வேடந்தாங்கல் ஏரி: வெறிச்சோடிய பறவைகள் சரணாலயம்

கோடை வறட்சியால் மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் நீர் குறைந்து வருகிறது
கோடையால் வறண்டு வரும் வேடந்தாங்கல் ஏரி: வெறிச்சோடிய பறவைகள் சரணாலயம்

கோடை வறட்சியால் மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால், பறவைகளின் வருகையும் குறைந்து, சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இது தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கடந்த 1858-இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது. ஏரியின் மையப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. குறிப்பாக, கடம்பா, கருவேல மரங்கள் உள்ளதால் அவற்றின் கிளைப் பகுதியில் பறவைகள் கூடுகட்டி தங்கிச் செல்லும். பருவநிலை மற்றும் இனவிருத்திக்கு சாதகமாக இருப்பதால் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றன.
சைபிரியா, இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், மங்கோலியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும், இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மைல் தாண்டி பறவைகள் வருகின்றன.
நீர்காகம், பாம்புதாரா, நீர்கொத்தி நாரை, வெள்ளை நாரை, சாம்பல் நிறம் கொண்ட கூழை காடா, சாம்பல் நாரை, வெண்கொக்கு ஊசிவால் நாரை, வக்கா, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட பல வகையான பறவைகள் அதிகளவில் வருகின்றன.
இவை, அப்பகுதி நிலங்களில் விளையும் நெல், பருப்பு, நீர்நிலைகளில் வாழும் மீன்களையும் உண்டு வாழுகின்றன. பறவைகளின் எச்சம் இங்குள்ள விளைநிலங்களுக்கு இயற்கை உரங்களாக அமைந்துவிடுவதால் பயிர்களை பூச்சிப் புழுக்கள் தாக்குவதில்லை.
இங்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளின் சீசன் காலமாகும். சீசன் தொடங்கியதும் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பள்ளி மாணவர்களும் வந்துச் செல்வர்.
இந்நிலையில், கோடை காலம் தொடங்கியுள்ளதால் வேடந்தாங்கல் ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால், தற்போது ஆயிரத்துக்கும் குறைவான பறவைகளே உள்ளன. பெரும்பாலான பறவை இனங்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டன.
கடந்த 2016 அக்டோபர் மாதம் சீசன் தொடங்கியதில் இருந்து, 20.3.2017 வரை 58 ஆயிரத்து 23 பெரியவர்களும், 21 ஆயிரத்து 177 சிறியவர்களும் பறவைகளைப் பார்வையிட்டு உள்ளனர். அதன் மூலம் நுழைவுக் கட்டணம், பைனாகுலர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வருவாயாக ரூ. 3 லட்சத்து 32 ஆயிரத்து 469 கிடைத்துள்ளது.
இச்சரணாலயத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்வதால், அவர்களுக்குத் தேவையான உணவு விடுதிகள், தங்குமிடங்கள் ஆகிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வனசரக அலுவலர் கோ.சுப்பையா கூறியதாவது: கடந்த நவம்பரில் தொடங்க வேண்டிய சீசன், முன்கூட்டியே அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. சீசன் காலத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பறவைகள் வருகை தரும். இந்நிலையில், கோடை வெப்பத்தாலும், ஏரியில் போதிய நீர் இல்லாததாலும் ஒரு சில பறவை இனங்கள் வெளியேறி விட்டன என்றார்.
கோடை வெப்பத்தால் வேடந்தாங்கல் ஏரியின் நீர் குறைந்து, பறவைகள் வெளியேறி வருவது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வேடந்தாங்கல் ஏரியில் போதிய நீரின்றி காய்ந்த நிலையில் உள்ள மரங்கள்.
வேடந்தாங்கல் ஏரியில் போதிய நீரின்றி காய்ந்த நிலையில் உள்ள மரங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com