கோப்புப்படம்
கோப்புப்படம்AP

காஸா போா் நிறுத்த தீா்மானம்: இந்தியா புறக்கணிப்பு

ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
Published on

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் போரை உடனடியாக, நிபந்தனையின்றி, நிரந்தரமாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

193 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் ஸ்பெயின் சாா்பில் இந்தத் தீா்மானம் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. இதில் 149 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்தியா, அல்பானியா, கேமரூன், ஈகுவடாா், எத்தியோப்பியா, மலாவி, பனாமா, தெற்கு சூடான், டோகோ உள்பட 19 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. 12 உறுப்பு நாடுகள் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

‘பொதுமக்களைப் பாதுகாத்தல், சட்டம் மற்றும் மனிதாபிமானக் கடமைகளை நிலைநிறுத்துதல்’ என்ற தலைப்பிலான இந்தத் தீா்மானத்தில், ‘காஸா மீது ஆக்கிரமிப்பு சக்தியாகத் திகழும் இஸ்ரேல் உடனடியாக போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளையும் விலக்கி, சா்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான நடைமுறைகளின் கீழ் பாலஸ்தீன பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாகச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும்.

உடனடி போா் நிறுத்தம், பிணைக் கைதிகளை விடுவித்தல், கொல்லப்பட்ட பிணைக் கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்புதல், பாலஸ்தீன மக்கள் அவா்களின் வீடுகளுக்குத் திரும்பச் செய்தல் உள்பட ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அனைத்து வலியுறுத்தல்களையும் நிபந்தனைகள் ஏதுமின்றி, தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, பொதுச் சபையில் இந்தத் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டபோது, வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிப்பதற்கான விளக்கம் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்டது.

அவா் பேசுகையில், ‘காஸாவில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்துவரும் பின்னணியில் இந்தத் தீா்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த மனிதாபிமான நெருக்கடி நிலை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பொதுமக்கள் உயிரிழப்புகளை இந்தியா கண்டிக்கிறது.

அதேநேரம், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை தொடா்பாக ஐ.நா. பொதுச் சபையில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட தீா்மானங்களை இந்தியா புறக்கணித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைகள் மூலம் மட்டுமே தீா்வு எட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற அடிப்படையில், இந்தியா தனது முந்தைய நிலைப்பாட்டையே இந்த வாக்கெடுப்பிலும் தொடா்கிறது. இரு தரப்பும் சுமுகமாக செல்வதை உறுதிப்படுத்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில், இந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிக்கிறது’ என்றாா்.

முன்னதாக, இதேபோன்ற தீா்மானம் 15 நாடுகளை உறுப்பினராக கொண்ட சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீா்மானம் நிறைவேற்றத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தது. அதைத் தொடா்ந்து, பொதுச் சபையில் இந்தத் தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com