
மீட்டொப்படைப்பு (Extradition)
சர்வதேசச் சட்டத்தில் மீட்டொப்படைப்பும் புகலிடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகும். மீட்டொப்படைப்பு என்பது ஒரு நாடு, தன்நாட்டில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது தண்டனை பெற்ற குற்றவாளியை மற்றொரு நாட்டின் வேண்டுகோளின்படி அந்நாட்டிடம் மீண்டும் ஒப்படைத்தல் ஆகும். புகலிடம் என்பது ஒரு நாடு தன் நாட்டிற்கு வந்தவரை அவ்வாறு மீண்டும் ஒப்படைக்காமல், அவரை வரவேற்று தங்க இடமும் பாதுகாப்பும் வழங்குவதாகும். அதாவது அவரை மீட்டொப்பு செய்ய மறுப்பதே புகலிடமாகும். எனவே தான் ஸ்டார்க் மற்றொரு நாட்டிடம் மீட்டொப்படைப்பு துவங்கும் போது, அந்நாடு அளித்த புகலிடம் முடிவுக்கு வந்து விடுகிறது என்று கூறினார்.
பொதுவாக ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் ஆள்நில எல்லைக்குள் இருக்கும் நபரின் மீது அதிகாரவரம்பு செலுத்துவதற்கு முழு உரிமை உண்டு. ஆனால் சில சமயங்களில் ஒரு நாட்டில் குற்றச் செயல் புரிந்த ஒருவர் வேறொரு நாட்டிற்கு தப்பிச் சென்று விடுவதுண்டு. அத்தகைய சூழ்நிலையில் அவரது குற்றத்தால் பாதிக்கப்பட்ட நாட்டால் அவரை விசாரணை செய்து தண்டிக்க முடியாது. அதே சமயத்தில் அக்குற்றச் செயலில் ஈடுபட்டவர் வேறொரு நாட்டில் சுதந்திரமாக இருக்க முடியும். இந்நிலைமை இரு நாட்டின் சட்டம் - ஒழுங்கையும் பாதிப்பதுடன் சர்வதேச அமைதியையும் பாதிக்கக் கூடியதாகும். எனவே அத்தகைய நபர்களைக் கோரும் நாட்டிடம் மீண்டும் ஒப்படைப்பது எல்லா நாடுகளுக்கும் நன்மை பயப்பதாகும் என்ற அடிப்படையிலேயே சர்வதேசச் சட்டத்தில் மீட்டொப்படைப்பு ஏற்றுக் கொள்ளப்படுள்ளது. ஆனால் குற்றவாளியைக் கோரும் நாட்டுக்கும் ஒப்படைக்கும் நாட்டுக்கும் இடையே மீட்டொப்படைப்பு தொடர்பான உடன்படிக்கை இருந்தால் மட்டுமே மீட்டொப்படைப்பு சாத்தியமாகும்.
வரையறையும் பொருள் விளக்கமும்
“Extradition” எனும் சொல் “Extra-tradition” என்பதன் மருவிய சொல்லக்கமாகும். “Tradition” என்பது பாரம்பரியம் அல்லது மரபு ஆகும். மீட்டொப்படைப்பு நடைமுறை உருவாவதற்கு முன்பு வேறொரு நாட்டில் இருந்து வந்து தஞ்சமடைபவரை வரவேற்று விருந்தோம்பல் செய்து பாதுகாப்பதே நாடுகள் வழக்கமாகக் கடைபிடிக்கும் பாரம்பரிய மரபாக இருந்தது. அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது அந்த மரபுக்கு அப்பாற்பட்ட செயல் என்பதைக் குறிக்கவே Extra-tradition எனப்பட்டது. அது பின்னாளில் “Extradition” என மருவியது என்பர் சொற் பிறப்பியலாளர்கள்.
ஓப்பன் ஹீய்ம் - இன் கூற்றுப்படி, ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை அல்லது தண்டனை பெற்ற குற்றவாளியை, அவர் தற்சமயம் தங்கி இருக்கும் நாடு, அவர் குற்றம் செய்த நாட்டிடம் ஒப்படைப்பதே மீட்டொப்படைப்பு ஆகும். சட்டவியலாளர் க்ரோஷியஸ், ஒன்று குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும், இல்லையென்றால், அக்குற்றம் செய்யப்பட்ட நாட்டிடம் குற்றவாளியை ஒப்படைத்து விட வேண்டும் என்ற கடமை ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது என்கிறார். ஆனால் அக்கடமை சர்வதேசச் சட்டத்தின் படி கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையா என்பது கேள்விக்குறி ஆகும்.
மீட்டொப்படைப்பு நாட்டின் சட்டப்பூர்வ கடமையா?
சர்வதேசச் சட்டம், குற்றவாளியை மீட்டொப்படைப்பு செய்ய வேண்டியதை பொதுவான கடமையாக நாடுகளின் மீது சுமத்தவில்லை. மீட்டொப்படைப்பு என்பது பொதுவாக சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே மீட்டொப்படைப்பு குறித்த சர்வதேச வழக்காறு எதுவும் கிடையாது. ஆனால் உடன்படிக்கை இருந்தால் மட்டுமே மீட்டொப்படைப்பு செய்ய இயலும் என்பதில்லை. சில நாடுகளின் உள்நாட்டுச் சட்டம், மீட்டொப்படைப்பு உடன்படிக்கை இல்லாவிட்டாலும் மீட்டொப்படைப்பு செய்யும் அதிகாரத்தை அந்நாட்டு அரசுக்கு வழங்கியிருந்தால் உள்நாட்டச் சட்டப்படியும் மீட்டொப்படைப்பு செய்யலாம். உதாரணத்திற்கு இந்தியாவில் இயற்றப்பட்ட 1962 ஆம் ஆண்டு மீட்டொப்படைப்புச் சட்டம், உடன்படிக்கை இல்லாத நாடு ஒன்று மீட்டொப்படைப்பு கோரும் பேது அதனை ஏற்று மீட்டொப்படைக்க வேண்டிய கட்டாயம் அல்லது கடமை நாடுகளுக்கு கிடையாது என்பதே பொதுவான விதியாகும்.
மீட்டொப்படைப்புக்கான நிபந்தனைகள் (Condition for an Extradition)
மீட்டொப்படைப்பு என்பது நாடுகளின் சட்டப்பூர்வமான கடமையாக இல்லாவிட்டாலும் நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் மூலமும் உள்நாட்டுச் சட்டத்தின் மூலமும் மீட்டொப்படைப்பு பற்றிய சர்வதேசச் சட்ட விதிகள் சமீப காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளன. அவற்றில் பொதுவான நிபந்தனைகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஸ்டார்க் அந்நிபந்தனைகளை பரந்த அளவில் இரண்டு நிபந்தனைகளாக வகைப்படுத்துகிறார். அவர், 1. மீட்டொப்படைக்கத் தக்க நபர் இருக்க வேண்டும். 2. மீட்டொப்படைக்கத் தக்க குற்றம் இருக்க வேண்டும். மேலே கண்ட ஸ்டார்க்கின் பொதுவான நிபந்தனைகளுடன் மீட்டொப்படைப்புக்கான முக்கிய நிபந்தனைகளை பின்வருமாறு பட்டியலிடலாம்.
1. மீட்டொப்படைக்கத் தக்க நபர் (Extraditionalble Person)
மீட்டொப்படைப்பு என்பது அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அல்லது தண்டனைக் குற்றவாளியை ஒப்படைப்பதே ஆகும். எனவே அத்தகைய நபர் ஒருவர் மீட்டொப்படைக்கும் நாட்டில் இருக்க வேண்டியது அடிப்படையான நிபந்தனையாகும். ஏனெனில் ஒரு நாட்டில் இல்லாத ஒரு நபரை மீட்டொப்படைக்குமாறு கோர முடியாது. மேலும் கோரப்படும் நபர் மீட்டொப்படைக்கத் தக்க நபராகவும் இருக்க வேண்டும் அதாவது அவர் மீட்டொப்படைக்கக் கோரும் நாட்டில் குற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது அந்நாட்டில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் தன்நாட்டுக் குடிமக்களை மீட்டொப்படைப்பதில்லை. எனவே அத்தகைய நாடுகளைப் பொறுத்த வரை மீட்டொப்படைக்கத் தக்க நபர், கோரப்படும் நாட்டின் குடிமகனாக இல்லாமல் இருக்க வேண்டும்.
2. மீட்டொப்படைக்கத் தக்க குற்றம் (Extradtionable Crime)
எல்லா குற்றங்களுக்காகவும் ஒருவரை மீட்டொப்படைக்கக் கோர முடியாது. எந்தெந்த குற்றங்களுக்கு மீட்டொப்படைப்புக் கோரலாம் என்பது அந்த நாடுகளுக்கிடையே எட்டப்பட்டிருக்கும் மீட்டொப்படைப்பு உடன்படிக்கை அல்லது அந்த நாடுகளின் மீட்டொப்படைப்புச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். சில நாடுகளில் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே மீட்டொப்படைப்புக் கோர முடியும். வேறு சில நாடுகளில் குறைந்த பட்ச தண்டனை உள்ள குற்றங்களுக்கு மட்டுமே மீட்டொப்படைப்பு கோர முடியும். பொதுவாக, (a)அரசியல் குற்றங்கள் (b) இராணுவக் குற்றங்கள் அல்லது (c) மதக் குற்றங்கள் ஆகிய குற்றங்களுக்கு மீட்டொப்படைப்பு கோர முடியாது என்பது சர்வதேசச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதியாகும்.
3. அரசியல் குற்றவாளிகளை மீட்டொப்படைக்க முடியாது (Non-Extradition of Political Criminals)
அரசியல் குற்றவாளிகளை மீட்டொப்படைக்க முடியாது என்பது சர்வதேசச் சட்டத்தில் மிக முக்கியமான விதியாகும். அதாவது, அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்பட்ட குற்றம் அல்லது அரசியல் ரீதியாக உந்தப்பட்டு குற்றம் செய்த வரை மீட்டொப்படைக்கக் கூடாது என்று உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
அரசியல் குற்றவாளிகளை மீட்டொப்படைக்க மறுக்கும் நடைமுறை 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் பல நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மன்னராட்சி - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயகக் கிளர்ச்சிகள் எழுந்தன. அந்த நாடுகளின் கொடுங்கோலாட்சிக்கு எதிராப் போராடிய புரட்சியாளர்கள் பலர், அந்நாட்டு அரசின் அடக்கு முறையில் இருந்து தப்பி வேறு நாடுடுகளில் புகலிடமாகத் தஞ்சமடைந்தனர். அத்தகைய நபர்களை அந்நாட்டுக் கொடுங்கோண்மை அரசு கோரியதற்காக மீட்டொப்படைப்பு செய்வதை மக்கள் வெறுத்தனர். பிரெஞ்சு அரசமைப்புச் சட்டம், ஷரத்து 120 அயல்நாடுகளில் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களுக்கு புகலிடம் அளிக்க வகை செய்தது. அது போல கிரேட் பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, ஹாலந்து போன்ற சுதந்திர நாடுகள் அரசியல் குற்றவாளிகளை மீட்டொப்படைப்பு செய்ய மறுத்தன.
அரசியல் குற்றம் (Political Crime)
அரசியல் குற்றவாளிகளை, இன்றைய நிலையில் அனைத்து நாடுகளும் மீட்டொப்படைக்க முடியாது எனும் விதியை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அதை அனைத்து நாடுகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சர்வதேச வழக்காற்று விதி எதுவும் கிடையாது. இருந்த போதிலும் அரசியல் குற்றங்கள் எவை என்பதை வரையறுப்பதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. இன்று வரை அரசியல் குற்றம் என்பது முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்றே கூறு வேண்டும்.
ஒரு குற்றம், ஒரு அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் அது அரசியல் குற்றம் என்று சில நேரங்களில் கருதப்படுகிறது. வேறு சில நேரங்களில் அரசியல் நோக்கத்திற்காகவும் அரசியல் காரணத்திற்காவும் செய்யப்படும் குற்றம் அரசியல் குற்றமாகக் கருதப்படுகிறது. இன்னும் சில சமயங்களில் அதன் நோக்கம் அல்லது காரணம் எதுவும் கணக்கில் கொள்ளப்படாமல் ராஜ துரோகம் (Treason), ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி போன்ற அரசுக்கு எதிரான குறிப்பான குற்றங்களைப் பட்டியலிட்டு அவை மட்டுமே அரசியல் குற்றம் என்றும் கூறப்படுகிறது. அரசியல் குற்றம் பற்றி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய திருப்தியான வரையறையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியே கண்டன என்று ஓப்பன் ஹெய்ம் கூறுகிறார்.
அரசியல் குற்றத்தை தீர்மானித்தல்
அரசியல் குற்றம் என்பது கொலை, தீ வைத்தல், திருட்டு முதலான சாதாரணக் குற்றங்களாகவும் கலந்து இருப்பது வழக்கமாகும். எனவே அத்தகைய சாதாரணக் குற்றங்கள் எப்போது அரசியல் குற்றமாகக் கருதப்பட்டு மீட்டொப்படைப்பில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது சிக்கலான ஒன்றாகும். அரசியல் குற்றவாளியை மீட்டொப்படைக்க முடியாது என்று மறுக்கும் நாடு, முதலில் அது அரசியல் குற்றமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும். அரசியல் குற்றத்தைத் தீர்மானிக்கும் சோதனைகள் பல வழக்குகளில் கடைபிடிக்கப்பட்டுள்ளன.
Re Castioni (1891) - வழக்கில், கேஸ்ஸியோனி என்பவர் ஸ்விட்சர்லாந்தின் குடிமகனாவார். ஸ்விட்சர்லாந்தின் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் டிசினியோ (Ticinio) மாகாணத்தில் மக்கள் கொதித் தெழுந்தனர். ஒரு ஆயுதம் தாங்கிய கூட்டம் நகராட்சி மாளிகைகளைத் தாக்கியது. அதில் மாநில ஆட்சிக்குழு (State Council) உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரை கேஸ்ஸியோனி தான் சுட்டுக் கொன்றார் என்பதற்கு சாட்சிகள் இருந்தன. அந்த சம்பவத்திற்குப் பிறகு கேஸ்ஸியோனி இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார். ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் அவரை மீட்டொப்படைக்குமாறு இங்கிலாந்திடம் கோரியது. ஆனால் இங்கிலாந்து அரசியின் அமர்வு (Queens Bench), மீட்டொப்படையில் இருந்து விலக்களிப்பதற்கு முன்னர் அச்செயல், அரசியல் விவகாரங்களின் போது அல்லது ஒரு அரசியல் எழுச்சியின் போது அல்லது அரசாங்க அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்பது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே எழுந்த பிரச்சனையின் போது அந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் செய்யப்பட்டுள்ளது என்பதாவது குறைந்தபட்சம் காட்டப்பட வேண்டும். இவ்வழக்கில் கேஸ்ஸியோனிவின் குற்றம் ஒரு அரசியல் குற்றமாகும். எனவே அவரை மீட்டொப்படைப்பு செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.
R-Vs-Governor of Brotixton prison, Exparte Rolozynski (1955) 1 QB 540- என்ற வழக்கில் அரசில் குற்றம் என்பதன் அளாவுகை மேலும் விரிவாக்கப்பட்டது. இவ்வழக்கில், ஒரு குற்றம் அரசியல் குற்றமாகக் கருதப்படுவதற்கு ஒரு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ வேறொரு அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கோ முயன்றிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு அரசியல் நோக்கத்துடன் அல்லது ஒரு அரசாங்கத்தின் அரசியல் அச்சுறுத்தலை அல்லது அரசியல் தவறுக்கான வழக்கு நடவடிக்கையை தவிர்க்கும் நோக்கத்துடன் ஒரு குற்றம் செய்ய முடியாது என்ற விதியைக் காட்டி அவர்கள் இருவரையும் மீட்டொப்படைப்பு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்தது.
இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக பெல்ஜியம் அட்டென்டட் விதியை (Attentat Clause) உருவாக்கியது. இதன்படி, ஒரு நாட்டின் அரசுத் தலைவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றம் ஆகாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இந்த அட்டென்ட் பிரிவை ஏற்றுச் செயல்படுத்தத் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இராணுவக் குற்றங்களுக்கு மீட்டொப்படைப்பு கிடையாது (Non-Extradition of minitary Crimes)
அரசியல் குற்றங்களைப் போலவே இராணுவக் குற்றங்களும் மீட்டொப்படைப்புக் குற்றம் ஆகாது. எனவே இராணுவக் குற்றங்கள் செய்த ஒருவர் ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தால் அவரை அந்நாடு மீட்டொப்படைப்பு செய்யக் கூடாது என்பது பொதுவான விதியாகும்.
மதக் குற்றங்களுக்கு மீட்டொப்படைப்பு கிடையாது (Non-Extradition of Religious Crimes)
அரசியல் குற்றம், இராணுவக் குற்றம் போன்றே மதக் குற்றங்கள் மீட்டொப்படைப்புக் குற்றம் ஆகாது.
குறிப்பான குற்ற விதி (Rule of Speciality)
ஒரு குறிப்பிட்ட குற்றத்திற்காக மீட்டொப்படைப்பு செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவரை மீட்டொப்படைப்பு பெற்ற நாடு, அக்குறிப்பிட்ட குற்றத்திற்காக மட்டுமே விசாரணை செய்து தண்டனை வழங்க முடியும் என்பதே குறிப்பான விதியாகும். U.S-v-Rauscher (1886) - என்ற வழக்கில் ரவ்ஷர் என்பவர் ஒரு அமெரிக்க கப்பலில் தன்னுடன் வேலை பார்த்த ஒருவரை கொலை செய்துவிட்டு இங்கிலாந்திற்கு தப்பி வந்துவிட்டதாகக் கூறி அவரை மீட்டொப்படைப்பு செய்யக் கோரப்பட்டது. அதன்படி மீட்டொப்படைப்பு பெற்ற அமெரிக்க அரசாங்கம் ஜான்சென் என்பவருக்குக் கொடுங்காயம் விளைவித்த குற்றத்திற்காக அவர் மீது விசாரணை நடத்தியது. ஆனால் அமெரிக்க உச்ச நீதிமன்றம், மீட்டொப்படைப்பு செய்யப்பட்டாரோ அந்தக் குற்றத்திற்காக மட்டுமே விசாரிக்க முடியும். எனவே கொடுங்காயம் விளைவித்த குற்றத்திற்காக ரவ்ஷரை விசாரிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்தியாவிலும் மீட்டொப்படைப்புச் சட்டம், 1961 இல் இவ்விதி பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இருநாட்டுக் குற்றநிலை விதி (Rule of Double Criminality)
எந்தக் குற்றத்திற்காக மீட்டொப்படைப்பு கோரப்படுகிறதோ அந்தக் குற்றம், மீட்டொப்படைப்பு கோரும் நாட்டின் சட்டப்படியும் ஒப்படைக்கும் நாட்டின் சடடப்படியும் குற்றமாக இருக்க வேண்டும். அதாவது இரண்டு நாட்டிலும் அச்செயல் குற்றமாகக் கருதப்பட வேண்டும். இதுவே இருநாட்டுக் குற்றநிலை விதியாகும்.
Factor -Vs- Laubenheimer(1933)- என்ற வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் இருநாட்டுக் குற்றநிலை விதியைப் பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஜாக்கப் பேக்டர் என்பவர், இங்கிலாந்தில் ஏமாற்றிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவின் இல்லனாய்ஸ் மாநிலத்தில் வந்து குடியேறிவிட்டார். இங்கிலாந்து அரசாங்கம் அவரை மீட்டொப்படைக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கோரியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொதுவான சட்டப்படி ஏமாற்றிப் பணம் பெறுவது குற்றமாக இருந்தாலும் இல்லினாய்ஸ் மாநிலச் சட்டப்படி, அது குற்றம் அல்ல. எனவே அமெரிக்க மத்திய சட்டத்தின்படி அது குற்றம் என்பதால் இருநாட்டக் குற்றநிலை விதி பூர்த்தி செய்யப்பட்டு விடுகிறது. எனவே பேக்டரை இங்கிலாந்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முதல் நோக்கு சாட்சியம் (Prima facie evidence)
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை மீட்டொப்படைக்குமாறு கோரும் நாடு, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை அவர் செய்துள்ளார் என்று நம்புவதற்குப் போதுமான முதல் நோக்குச் சாட்சியம் உள்ளது என்பதை நிரூக்க வேண்டும். வெறும் குற்றச்சாட்டை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரை மீட்டொப்படைக்குமாறு கோர முடியாது.
Tara shov Extradition Case (1963)- எனும் வழக்கில் மீட்டொப்படைப்பு கோரப்படும் போது குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் தகுந்த சாட்சியத்தின் மூலம் முதல் நோக்கில் நிரூபிக்கப்பட வேண்டும். அதன் நிரூபணத்தின் அளவு நிலை சாதாரண குற்ற வழங்கில் உள்ளதை விட கடுமையானதாகும் என்று டெல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மீட்டொப்படைப்பு உடன்படிக்கை நிபந்தனைகள் (Conditions of extradition Treaty)
மீட்டொப்படைப்பு உடன்படிக்கை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் போது மட்டுமே மீட்டொப்படைப்பு கோர முடியும்.
Vinayak Dhamodar Savarkar Case (1911)- வழக்கில், சாவர்கார் என்பவரை அவர் செய்ததாகக் கூறப்பட்ட குற்றங்களுக்காக விசாரணை செய்ய அவர் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கப்பலில் கொண்டு வரப்பட்டார். வரும் வழியில் அக்கப்பல் ப்ரான்ஸ் நாட்டின் மார் செலஸ் துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கும் போது சாவர்க்கார் அதிலிருந்து தப்பி ப்ரெஞ்சு கப்பலில் ஒளிந்து கொண்டார். ஆனால் அந்த கப்பலின் தலைவர், அவரைப் பிடித்து பிரிட்டஷ் கப்பல் தலைவனிடம் ஒப்படைத்துவிட்டார். அதன் பிறகு விஷயமறிந்த ப்ரெஞ்சு அரசாங்கம், சாவர்க்கரை திரும்ப ஒப்படைத்ததில் மீட்டொப்படைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே அவரை மீண்டும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு முறைப்படி மீட்டொப்படைக்க கோரிக்கை விடுக்குமாறு இங்கிலாந்தைக் கோட்டுக் கொண்டது. இங்கிலாந்து அரசாங்கம் சாவர்கரைத் திரும்ப ஒப்படைக்க மறுத்தது. இவ்வழக்கு ஹேக்- இல் உள்ள நிரந்தர இசைவுத் தீர்வு நீதிமன்றத்திற்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவறாக ஒப்படைக்கப்பட்ட குற்றவாளியை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று இரு நாட்டுக்கும் இடையே மீட்டொப்படைப்பு உடன்படிக்கையில் எந்த நிபந்ததையும் இல்லை. எனவே, தவறுதலாகவே ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும் அவரை திரும்ப ஒப்படைக்க வேண்டிய கடமை இங்கிலாந்துக்கு கிடையாது என்று முடிவு செய்தது.
சொந்த நாட்டுக் குடிமக்களை மீட்டொப்படைக்க முடியாது (Non-extradidion of own Citizens)
அயல்நாட்டு ஒன்றில் ஏதேனுமொரு குற்றம் செய்துவிட்டு தன் சொந்த நாட்டிற்கு வந்துவிடும் ஒருவரை குற்றம் நடந்த நாட்டிடம் மீட்டொப்படைக்க வேண்டிய கடமை என்தவொரு நாட்டிற்கும் கிடையாது. ஆனால் மீட்டொப்படைப்பு உடன்படிக்கையின்படி அல்லது அந்நாட்டின் சட்ட மீட்டொப்படைப்பு செய்யப்பட வேண்டும். எனில், அந்நாடு அக்கடமையில் இருந்து தப்ப முடியாது.
Regina-Vs-Wilson (1878) - வழக்கில், இங்கிலாந்திற்கும் ஸ்விட்சர்லாந்திற்கும் இடையிலான மீட்டொப்படைப்பு உடன்படிக்கையின் படி இரு தரப்பு நாடுகளும் தங்கள் சொந்த நாட்டுக் குடிமக்களை மீட்டொப்படைக்க வேண்டிய கட்டாயமில்லை என்று ஒப்புக் கொண்டிருந்தன. எனவே ஸ்விட்சர்லாந்தில் குற்றம் செய்த இங்கிலாந்துக் குடிமகனை இங்கிலாந்தில் கைது செய்வதற்கு அதிகாரம் இல்லை என்று இங்கிலாந்து நீதிமன்றம் கூறியது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் சொந்த நாட்டுக் குடிமக்களை மீட்டொப்படைக்க முடியாது என்ற கோட்பாட்டைக் கடைபிடிக்கின்றன. இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் சொந்த நாட்டுக் குடிமக்களே ஆயினும் அயல்நாட்டில் குற்றம் செய்து விட்டு வந்தால் அவரை மீண்டும் அந்நாட்டிடமே மீட்டொப்படைப்பு செய்வதை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியாவின் மீட்டொப்படைப்புச் சட்டம் 1962-ன் படி தன் சொந்த நாட்டு குடிமக்களையும், மீட்டொப்படைப்பு செய்ய வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.
1933 ஆம் ஆண்டு மான்டெவிடியோ (Montevideo) மாநாடு தன் சொந்த குடிமக்களை மீட்டொப்படைப்பு செய்ய வேண்டுமா இல்லையா என்பதை அந்தந்த நாடுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறுகிறது. இருப்பினும் ஹார்வர்டு ஆராய்ச்சி வரைவு மாநாட்டு விதிகள், ஒரு நாடு தன் சொந்த குடிமக்களை மீட்டொப்படைப்பு செய்ய மறுக்கும் போது, அக்குற்றம் சாட்டப்பட்ட குடிமகனை அவர் செய்த குற்றத்திற்காக தன் நாட்டிலேயே விசாரித்து தண்டனை வழங்க வேண்டிய கடமை அந்நாட்டிற்கு உண்டு என்று கூறுகிறது. ஆனால் அது இன்னமும் சர்வதேச விதியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்தியாவில் மீட்டொப்படைத்தல் (Extradtition in India)
இந்தியாவில் மீட்டொப்படைப்பு குறித்த விதிமுறைகள் 1962 ஆம் ஆண்டு மீட்டொப்படைப்புச் சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் புகலிடத்தில் இருக்கும் ஒரு அயல்நாட்டுக்காரரை அல்லது அயல்நாட்டில் குற்றம் செய்து விட்டு வந்திருக்கும் இந்தியக் குடிமகனை மீட்டொப்படைப்பு செய்யக் கோரும் நாடு, அது பற்றிய வேண்டுகோளை மீட்டொப்படைப்புச் சட்டம் 1962 பிரிவு 4 இன்கீழ் மத்திய அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசாங்கம் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு முதல் நோக்கு சாட்சியம் இருக்கிறதா என்பதை முடிவு செய்ய நீதித்துறை நடுவர் விசாரணைக்கு (Magistrial Enquiry) உத்தரவிடும். நடுவர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து முதல் நோக்கு சாட்சியம் இருப்பதாக முடிவு செய்தால், மீட்டொப்படைப்பு கோரப்பட்ட நபரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு, அதன் அறிக்கையை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்புவார். மத்திய அரசாங்கம், மீட்டொப்படைப்பு கோரிய நாட்டு அரசாங்கத்திடம் அந்நபரை ஒப்படைக்குமாறு கோரும் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இடையே உடன்படிக்கை இல்லாவிட்டாலும் 1962 ஆம் ஆண்டு சட்டப்படி அந்த நபரை மீட்டொப்படைப்பு செய்யுமாறு கோரலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடரும்...
Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.