
திருவாங்கூர் சமஸ்தான திவான் சர் சி.பி.ராமஸ்வாமி ஐயரின் வாதங்களிலுள்ள விபரீதங்களை காந்திஜி அம்பலப்படுத்தி, இன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் சொன்னதாவது:-
எல்லைப்புறத்துக்கு சுதந்திர பாகிஸ்தான் உரிமையை அளித்த காங்கிரஸூம், நானும் திருவாங்கூர் சுதந்திரத்தை ஏன் ஆட்சேபிக்கவேண்டுமென்று சர் சி.பி. கேட்கிறார்.
சர் சி.பி.யின் உபமானம் கொஞ்சமும் பொறுத்தமல்ல. வகுப்புவாத பிரச்னையில் ஒரு பட்டாணியர் மறு பட்டாணியரிடமிருந்து பிரிக்கப்படுவதை கபார்கான் விரும்பவில்லை. அந்த ஒரே காரணத்தை முன்னிட்டு அவர் பட்டாணிஸ்தான் கோருகிறார். அவர்கள் முதலில் தங்கள் சொந்த அரசியலை வகுத்துக்கொண்டு பிற்பாடு பாகிஸ்தான் ஸ்வரூபமும் இந்திய யூனியன் ஸ்வரூபமும் வெளிப்படையாக தென்பட்ட பின்னர் எந்த அரசாங்கத்தில் சேர வேண்டுமென்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். அவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அவர்கள் தனியாக ஒரு மூன்றாவது அரசாங்கமாக வழங்க விரும்பவில்லை. மாகாணத்தின் சொந்த விவகாரங்களில் தலையிடாமல் ஆனால் மத்ய சர்க்காருடன் தொடர்பு வைத்துக்கொண்டு பூர்வ சுயாட்சியுடன் மற்ற மாகாணங்கள் இருக்க விரும்புவதைப் போலவே எல்லை மாகாணமும் விரும்புகிறது. இதற்கு மாறான கருத்தை கபார்கான் கொண்டிருப்பாராகின் அவர் எனது நண்பராயிருந்த போதிலும் அவரிடமிருந்து நான் பிரிந்து செல்லத் தயங்கமாட்டேன். ஆனால் சர் சி.பி., எந்த மத்ய சர்க்காருடனும் சம்பந்தமில்லாத ஒரு சுதந்திர அரசாங்கத்தை சிருஷ்டிக்க விரும்புகிறார். சர் சி.பி. தமது போக்கின் பிரகாரம் செல்வதை அனுமதித்தாலோ அல்லது இதரர்களும் அவரது வழியை பின்பற்றினாலும் பெரிய அனர்த்தம் ஏற்பட்டுவிடும்.
நான் விரும்பும் இந்தியாவில் மன்னரும் குடியானவரும் சமமானவர்களே. மக்களின் டிரஸ்டிகள் என்ற ஹோதாவில்தான் மன்னர்கள் வாழ முடியும்.
தினமணி (25-06-1947)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.