125 வயது வாழ்வேன்!

மகாத்மா காந்தி இன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்த்திய பிரசங்கத்தில், வகுப்பு ஒற்றுமைக்காக இன்று அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேறுமானால் தீர்க்காயுசுடன் வாழ்ந்து கடைசி மூச்சுள்ளவரை மனித சமுதாயத்திற்குச்
125 வயது வாழ்வேன்!
Published on
Updated on
1 min read

மகாத்மா காந்தி இன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்த்திய பிரசங்கத்தில், வகுப்பு ஒற்றுமைக்காக இன்று அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேறுமானால் தீர்க்காயுசுடன் வாழ்ந்து கடைசி மூச்சுள்ளவரை மனித சமுதாயத்திற்குச் சேவைபுரிய வேண்டுமென்ற தமது விருப்பமும் பிரார்த்தனையும் இரட்டிப்பு சக்தி பெறும் என்றார்.

""அந்தத் தீர்க்காயுசு குறைந்தபக்ஷம் 125 வயதாகும்; சிலர் 133 வயது என்றுகூட சொல்கிறார்கள்'' என்றார் காந்திஜி.

காந்திஜி மேலும் கூறியதாவது:-

ஸத்யம் என்ற பரம்பொருளின் பெயரால் நான் உபவாசத்தைத் தொடங்கினேன். ஸத்யத்துடன் வாழாவிட்டால் கடவுளைக் காணமுடியாது. ஆண்டவன் பேரால் நாம் பொய்களைச் சொல்கிறோம். நிரபராதிகளா, குற்றவாளிகளா என்றுகூட பாராமல் ஆண், பெண், பாலர், சிசுக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஸத்யத்தின் பெயரால் யாராவது இத்தகைய காரியங்களைச் செய்திருக்கிறார்களா என்பதை நானறியேன். 

ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள், ஹிந்து மகாசபை, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கப் பிரதிநிதிகள், பஞ்சாப் எல்லைப்புறம், சிந்து ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ள அகதிகளின் பிரதிநிதிகள் ஆகியோரில் 100 பேருக்கு மேல் ராஷ்ட்ரபதி ராஜேன்பாபு அழைத்துவந்தார். 

தங்களை மேலும் சோதிக்காமல் உபவாசத்தை நிறுத்தி வேதனையை தவிர்க்கும்படி இந்த பிரதிநிதிகள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றை ராஜேன்பாபு வாசித்தார்.

இந்த நண்பர்களின் புத்திமதியை என்னால் எதிர்க்க முடியாது. என்ன வந்தாலும் சரி இங்கு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், பார்ஸிகள், யூதர் ஆகிய சகலரிடையும் பரிபூர்ண நட்பு இருக்கும் என்று இவர்கள் கொடுத்த உறுதிமொழியை என்னால் நம்பாமலிருக்க முடியாது.

தினமணி (19-01-1948)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com